Details
தாயுமானவர் புராணம். அனுப்பி கட்டிய மண்டபத் தூணில் தாயுமானவர் அயர்ந்து உட்கார, கண்மூடி வெறுமே கிடக்க, யாரோ அருகே நிற்பது போல் உணர்ந்தார். கண்திறக்க எதிரே யோகீஸ்வரர் நின்றிருந்தார். மெல்ல தாயுமானவரின் தலை வருடி ஆசீர்வதித்தார். பிடரியை நீவி விட்டார். தனது வலக்கையால் தாயுமானவரின் கழுத்து, புஜம், மார்பு எல்லாம் வருடிக் கொடுத்தார். விரல்களை சிறிது நேரம் கோர்த்துக் கொண்டார். தாயுமானவருக்கு வினோதமான உணர்வு ஏற்பட்டது. அவர் உடம்பு அவருக்கு அந்நியமாயிற்று. அவர் மனம் அவர் உடம்பை வேடிக்கைப் பார்த்தது. அவர் அவருடைய மனதை வேடிக்கைப் பார்த்தார். மனம் பார்ப்பதை நிறுத்தியது. அவரும் பார்ப்பதை நிறுத்தினார். மனம், உள்மனம் இரண்டும் வெளிற சடேரென்று ஆழமான வெறுமை தோன்றியது. அந்த வெறுமை வெளிச்சமாக இருந்தது. வெளிச்சத்தில் வெளிச்சமாய் கலந்தபோது எதுவும் செய்யத் தோன்றவில்லை. எந்த சிந்தனையும் எழவில்லை. மிக நிறைவான முழுமையான சந்தோஷம் தன்னைக் கேட்காமலேயே தன்னைக் கவ்விக் கொண்டதை உணர்ந்தார். அந்த சந்தோஷம்தான் அது. அதுதான் அவர். காலக்கணக்கு தப்பியது. நேரம் நினைவில் பதியாமல் போனது.இருட்டி வெகு நேரமான பிறகு யாரோ உலுக்க எழுந்தார்.