துடிசைக்கிழார் எழுதிய சேரர் வரலாற்றில் பக்கம் 121-இல் இருந்து 126 வரை காணப்படும் மூன்றாம் சேரமான் பெருமாள் வரலாறு இது.
அவர் எழுதியுள்ளதை அப்படியே மேலே தந்திருக்கிறேன்.
இரண்டாம் சேரமான் பெருமாள் என்ற குலசேகர ஆழ்வாரின் வரலாறும் சேரர் வரலாற்றில் காணப்படுகிறது. இடமின்மை காரணமாக அது இங்கே பிரசுரிக்கப்பட வில்லை. ஆனால் அதில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டுதான் இந்தக் கதையை நான் எழுதினேன்.
1962-ஆம் ஆண்டில் ஒரு சரித்திரக் கதையைத் திரைப்படமாக்க வேண்டும் என்று நான் எண்ணியபோது மேலே கண்ட வரலாற்றுக் குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. அப்பொழுதே இந்தக் கதையை ஒரு திரைக்கதையாக வடித்தேன். ஆனால் அந்தக் கதையில் என்னென்ன நிகழ்ச்சிகளைச் சேர்த்திருந்தேன் என்பது மறந்துபோய் விட்டது. திடீரென்று 'கல்கி' ஆசிரியர் திரு.கி.ராஜேந்திரன் அவர்களும், துணை ஆசிரியர் திரு.ரா.வீழிநாதன், திரு.மணி, திரு.ஸோமாஸ் அவர்களும் என்னிடம் வந்து, கல்கியில் நான் ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதவேண்டும் என்று கேட்டார்கள்.
தமிழில் சரித்திரக் கதை எழுதுவதில் தன்னிகரற்று விளங்கிய பேராசிரியர் கல்கி அவர்களின் பத்திரிகையில் என்னையும் எழுதும்படி கேட்டுக்கொண்டது, உண்மையிலே எனக்கு பெருமையாக இருந்தது. நானும் ஒப்புக்கொண்டேன்.
உடனடியாக என் நினைவுக்கு வந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் படித்த மூன்றாம் சேரமான் பெருமாளின் வரலாறுதான்.
அண்மைக் காலங்களில் நான் எந்தக் கதையை எழுதுவதென்றாலும் மதக் கருத்துக்களோ, சமுதாயக் கருத்துக்களோ இடம்பெறக்கூடிய கருவைத்தான் எடுத்துக் கொள்வது வழக்கம்.
சேரமான் பெருமாள் வரலாற்றிலும் மதக் கருத்துக்களைச் சொல்வதற்கு நிறைய இடம் இருந்தது. காரணம், இரண்டாம் சேரமான் பெருமாள் குலசேகர ஆழ்வார் ஆனது வைணவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. அவரது திருமகன் "வேணாட்டடிகள்" என்ற பட்டப் பெயரோடு சைவப் பெரியாராக வாழ்ந்தது, சைவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. மூன்றாம் சேரமான் பெருமாள் மதம் மாறி மகமதியரான குறிப்பும் இருந்தது.
ஆகவே எல்லாக் கருத்துக்களுக்கும் இடமளிக்கும் கதை என்பதால், வந்திருந்த கல்கி நண்பர்களிடம், 'சேரமான் காதலி" என்ற தலைப்பை உடனடியாகவே கொடுத்து விட்டேன்.
இந்தக் கதையை நியாயமாக மூன்றாம் சேரமான் பெருமாளில் இருந்தே துவங்கியிருக்கவேண்டும். அப்படித் துவங்கி இருந்தால், கற்பனைகளை ஏராளமாகக் கலந்திருக்கலாம். ஆனால் சமயக் கருத்துக்காகவே இரண்டாம் சேரமான் பெருமாளில் இருந்து துவங்கினேன்.
சரித்திரத்தின் போக்கிலேயே கற்பனை கலந்தேனே அல்லாது, தடம் தவறிப்போகவில்லை.
இதில் என்னுடைய சொந்த சிருஷ்டி, யூதப் பெண் யூஜியானா.
கள்ளியங்காட்டுக் கிருஷ்ணன் கோயில் நிகழ்ச்சி பதினேழாம் நூற்றாண்டு மார்த்தாண்டவர்மன் பற்றியது, என்று சிலர் கூறுகிறார்கள். எனினும் இந்தக் கதைக்கு அதுவும் பொருத்தமானது என்பதால் சேர்த்துக் கொண்டேன்.
நம்பூதிரிகள் சபைத் தலைவர் வரலாற்றில் வருகிறார்; அவரது பெயர் மட்டும்தான் நான் கொடுத்தது. மகமதியப் பெண்ணுக்கும் பெயர் மட்டும்தான் நான் சூட்டினேன்.
கதைச்சுவைக்கான சம்பவங்களைத் தவிர, மற்றவை வரலாற்று உண்மைகளே.
வெறும் வரலாற்றைச் சொன்னாலும் தலையை வலிக்கும். வெறும் கற்பனையில் பிண்டம் பிடித்தாலும் அடிப்படை இல்லாத மாளிகை போலிருக்கும். இரண்டும் கலப்பதற்குப் பெயர்தான் சரித்திரக் கற்பனை.
இந்த வரலாற்றில் ஒரே ஒரு விஷயத்தில்தான் வாசகர்களுக்குக் குழப்பம் ஏற்படும்.
அதாவது கி.பி.798இல் பட்டத்துக்கு வந்த மூன்றாம் சேரமான் 834இல் தான் மெக்காவுக்குப் போகிறார். அவரது 36 ஆண்டு ஆட்சியை நான் கதைப்போக்குக்காகச் சுருக்கிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர, அனைத்தும் கலை நியாயங்களுக்குக் கட்டுப்பட்டவையே.
இந்தக் கதையை நான் எழுதத் தொடங்கும்போது ஏராளமான முஸ்லிம் நண்பர்களிடம் இருந்து கடிதங்கள் வந்தன.
'சேரமான் பெருமாள், நபிகள் நாயகத்தின் மரியாதையைப் பெற்ற சமகாலத்தவர்,' என்று சிலரும் 'அவரை ஒட்டிய காலத்தில் வாழ்ந்தவர்' என்று சிலரும் எழுதியிருந்தார்கள்.
ஒரு வரலாற்றில், 'நபிகள் நாயகம் மறைந்து 82 ஆண்டுகளுக்குப் பிறகு சேரமான், மதம் மாறி மெக்காவுக்குப் போனார்' என்று காணப்படுகிறது.
ஒரு கடிதத்தில் ஒரு முஸ்லிம் பெண்மணி - முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் - 'முஸ்லிம்களின் மனது புண்படாதவாறு கவிஞர் எழுதுவாராக' என்று குறிப்பிட்டிருந்தார்.
நான் ஒரு தீவிர இந்து என்றாலும், மற்ற இந்துக்களைப் போலவே பிற மதத்தவரைப் புண்படுத்தத் தெரியாதவன். இந்தக் கதைப் போக்கில் அதனைக் காணலாம்.
சேரமான் ஆட்சிக் காலத்தில் திருவஞ்சைக்களத்தில் மகமதியர்கள் இருந்தார்களே தவிரமசூதிகள் கட்டப்படவில்லை என்றும் ஒரு முஸ்லிம் நண்பர் சுட்டிக் காட்டியிருந்தார், உண்மைதான்.
கதையின் ஆரம்பத்தில் மசூதி என்ற வார்த்தையை நான் பயன்படுத்தி இருப்பது தவறுதான்.
சேரமான் பெருமாள் மெக்காவுக்குப் போன பிற்பாடு அங்கிருந்து ஒரு தூதுவனை அனுப்பினார். அந்தத் தூதுவன் கண்ணணூரில் இருந்து கொடுங்களூர் வரையில் பயணம் செய்து, முதல் மசூதியைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
ஆக, மிக எச்சரிக்கையோடும் சுவையோடும் இந்தக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறேன்.
கல்கி நண்பர்களின் தூண்டுதல் இல்லை என்றால், இவ்வளவு பக்கங்கள் கொண்ட நூலை நான் எழுதியிருக்க முடியாது. ஆகவே, முதலில் அவர்களுக்கு என் நன்றி.
கிட்டத்தட்ட பதினைந்து மாதங்கள் ஒவ்வொரு வாரமும் நான் சொல்லச் சொல்ல இதை எழுதிய என் தம்பி இராம.கண்ணப்பனுக்கும், வழக்கமாக என் நூல்களை அழகாக வெளியிடும் வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்களுக்கும் என் நன்றி.
'AL S'
சென்னை
13-5-77
அன்பன்,
கண்ணதாசன்.