Details
ஸ்ரீ பெரியவாளின் உபந்நியாசங்கள் பல ஏற்கனவே நூல்களாக வந்திருக்கின்றன. அவற்றுக்கும் 'தெய்வத்தின் குரலு'க்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம், இதுவரை தனித்தனியாக ஓரொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் ஆற்றிய உரைகள் தனிக் கட்டுரைகளாகவே வெளிவந்துள்ளன. இங்கேயோ ஒரே பொருள் குறித்து அவர் பல்வேறு உபந்நியாசங்களிலும், ஸ்ரீ முகங்களிலும், அறிக்கைகளிலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஒரு தலைப்பின் கீழ் தொகுத்துத் தரப்படுகின்றன. ஏற்கனவே வெளியான நூல்கள், பத்திரிகைக் குறிப்புக்கள், கட்டுரைகள், 'டேப்'கள், அயல்நாட்டினர் பலருக்கு அளித்த பேட்டிகள் ஆகியவற்றிலிருந்தும், அதோடு மேடைப் பிரசங்கமாக அல்லாமல் ஒரு சில அடியாரிடை அவர் அகஸ்மாத்தாக ஆற்றிய மகாப்பிரசங்கங்கள், தனிப்பட்டவர்களுக்குத் தந்த சந்தேக விளக்கங்கள், சம்பாஷணைகள் ஆகியவற்றிலிருந்தும் செய்யப்பட்ட தொகுப்பே இது.
இங்கே 1932-லிருந்து சுமார் நாற்பது ஆண்டுகளாக ஆசான் அருளிய மொழிகளைத் தொகுத்துத் தந்திருக்கிறோம். 1973 தொடக்கத்தில் அவர்கள் சிவாஸ்தானத்தில் நீண்ட காலவாஸம் தொடங்கிய வரையில் அருளிய வாக்குகள் இதில் உள்ளன. இதன்பின் அவர்கள் மோனம் விட்டுப் பேசியதே அபூர்வம். அப்படிப் பேசியதிலும் எதுவுமே இந்நூலில் சேர்க்கப்படவில்லை. இதை இங்கே குறிப்பிடக் காரணம், நூலிலுள்ள சில கருத்துக்கள் வெகு சமீப கால நடப்புகளுக்குத் தொடர்புள்ளதாகத் தோன்றும்; ஆனால் அவ்விதமல்ல எனத் தெளிவுபடுத்தவே. - ரா கணபதி