வால்மீகி ராமாயணத்தையும் பாரம்பரியமாக செவிவழியாக வந்த கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட ராமபிரானின் கதை.
வால்மீகியின் ராமாயணத்தோடு, நம் நாட்டின் பல பகுதிகளிலும் ஆண்டாண்டு காலமாகப் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வரும் ராமன் கதைகளிலிருந்து பல நிகழ்வுகளைச் சேர்த்து தேவி வனமாலி அவர்கள் இந்த ராம காவியத்தைப் படைத்துள்ளார்கள். அன்பு, கடமை, தியாகம் போன்றவை நிரம்பி வழியும் இக்கதை இன்றைய வாசகர்ளை மனதில் வைத்து சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த காதல் கதையாகத் திகழும் இக்காவியம், தன் மனைவியை தூக்கிச் சென்ற ராவணனிடமிருந்து அவளை மீட்க ராமன் தன் நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட சாகசப் பயணத்தைப் பற்றியும், அதில் அவன் எதிர்கொண்ட சோகமான, சுவையான, வீரம் நிறைந்த சம்பவங்களைப் பற்றியும், அவனுடைய தம்பி லட்சுமணன் மற்றும் அனுமானின் விசுவாசத்தைப் பற்றியும் விவரிக்கிறது.
ராமன் ஓர் அவதாரப் புருஷனாகக் கருதப்பட்டாலும், அவன் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் விடாப்பிடியாக தர்மத்தைக் கடைபிடித்து வந்ததன் மூலமே ஒரு தெய்வீகப் புருஷனாக உயர்ந்தான் என்று இந்நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.
அர்பணிப்பு, விசுவாசம், விடாமுயற்சி, அன்பு போன்றவற்றின் மூலம் அதிஅற்புதமான விஷயங்களை அடையக்கூடிய திறமை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதை ராமனின் கதை நமக்குக் காட்டுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அனைவருக்கும் பிடித்த ஒரு நூலாக ராமாயணம் விளங்குவதில் வியப்பில்லை.
ஆசிரியர் : வனமாலி- இரிஷிகேஷ் மடத்தில் வாழ்ந்து வரும் பெண் துறவியும், எழுத்தாளரும், இறையியல் (ஆன்மிகம்) சொற்பொழிவாளரும் ஆவார் தேவி வனமாலி. அவரின் பிற புத்தகங்கள் - ஸ்ரீ கிருஷ்ண லீலா, ஸ்ரீ சிவ லீலா, ஸ்ரீ ஹனுமான் லீலா, சிவனின் புதல்வர்களின் லீலைகள் ஆகியன.
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம். நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.