தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வெற்றிக்கான ஒரு புதிய பாதை.
நீங்கள் ஒரு புதிர்க்கட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு சுண்டெலியாக இருந்து, யாரோ ஒருவர் அங்கிருக்கும் சீஸை நகர்த்திக் கொண்டே இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்.
10 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இன்றும் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் 'என் சீஸை நகர்த்தியது யார்?' என்ற நீதிக் கதை இக்கேள்விக்கு இப்படி பதிலளித்தது: தவிர்க்க முடியாத ஆனால் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; விஷயங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்று வியந்து கொண்டு உங்கள் நேரத்தை வீணாக்காமல் சீஸை தேடத் துவங்குங்கள்.
ஆனால் தீபக் மல்ஹோத்ரா இக்கேள்விக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை வழங்குகிறார்.
தனித்துவமான சாகசத்தை விரும்புகின்ற, தமது யதார்த்தத்தை அப்பிடியே ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற, மேக்ஸ், பிக், செட் ஆகிய மூன்று சுண்டெலிகளைப் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதையை மல்ஹோத்ரா இதில் கூறுகிறார். அவற்றின் வாழ்க்கை நம் கண்முன் விரிவதை நாம் பார்க்கும்போது, வெறுமனே கண்மூடித்தனமாக சீஸைத் துரத்திச் செல்வதற்குப் பதிலாக, புதிர்கட்டத்தை விட்டு தப்பிப்பதற்கும், அதை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி வடிவமைப்பதற்கும் தேவையான திறனை நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ளதை நாம் கண்டறிகிறோம்.
நமக்கு விருப்பமான புதிய சூழல்களையும் யதார்த்தங்களையும் நம்மால் உருவாக்க முடியும், ஆனால் வேறொருவரின் புதிர்க்கட்டத்தில் உள்ள ஒரு சாதாரணச் சுண்டெலிதான் நாம் என்று நம் மனத்தில் ஆழமாகப் பதிந்து போயுள்ள எண்ணத்தை நாம் முதலில் களைந்தாக வேண்டும் என்பதை இப்புத்தகம் நமக்கு நினைவூட்டுகிறது.
ஆசிரியர் : தீபக் மல்ஹோத்ரா ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் எலி கோல்ட்ஸ்டன் பேராசிரியர். அவரது கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை வேலை என அனைத்துமே பேச்சுவார்த்தை, பேரம் சார்ந்த பேச்சு அல்லது ஒப்பந்தம், மற்றும் முரண்பாடு தீர்வு ஆகியவற்றிலேயே பெரிதும் கவனம் செலுத்துகிறார். தீபக் தனது கற்பித்தல் திறனுக்காக பல விருதுகளை வென்றிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டில், தீபக் 40 வயதிற்கு உட்பட்ட "உலகின் சிறந்த வணிகப் பள்ளிப் பேராசிரியர்களில்" ஒருவராக கவிஞர்கள் & குவாண்ட்களால் தேர்வு செய்யப்பட்டார்.
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம். நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.