இந்த நூல் இப்படிக்கு சூர்யா, சூர்யா அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா அவர்களின் சிறு வயது முதல் முப்பது வயது வரையான வாழ்க்கை நிகழ்வுகள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது, அதுவே 'இப்படிக்கு சூர்யா' என புத்தகமாக வெளிவந்துள்ளது. இன்றைக்கு பலருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல மேடைகளில் பேசும் நடிகர் சூர்யா அவர்கள் பத்து வயது சரவணணாக இருக்கும் போது என்னவாக விரும்புகிறாய் என வினவியவரிடம் I want to die என சிரித்தபடியே கூறிவிட்டு அதையே அப்படியே தரையில் செங்கல்லாலும் எழுதினாராம். சிறுவயதில் சகோதரன் கார்த்தியை தன் போட்டியாளனாக மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கிறார் சரவணன். சரவணனாக இருந்தவரை சூர்யாவாக மாற்றியது இயக்குனர் மணிரத்னமும் வசந்தும் என்பது ஊரறிந்தது. மணிரத்னம் அவர்கள் சூர்யா என பெயர் சூட்டியது தளபதி திரைப்படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரப் பெயரின் தாக்கத்தால் தான்.
"முத்து எடுக்கலாம் என்று கடலில் மூழ்குகிறவன் செத்துப் போவதும் உண்டு. செத்துப் போகலாம் என்று கடலில் விழுகிறவன் கை நிறைய முத்துக்களை அள்ளிக்கொண்டு வருவதும் உண்டு."
படித்ததுமே எனக்குப் பிடித்த வாசகம் இது. நான் இரண்டாவது ரகம். எனக்கு முத்து எடுக்கத் தெரியாது என்பதைவிட, முத்து எடுக்க வராது என்று முழுமையாக நம்பிக் கொண்டிருந்தவன். கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளிஞ்சல்களைக்கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லையே என்கிற தாழ்வு மனப்பான்மைதான் என் ஒரே சொத்து.
பதிப்புரை:
சில்லென்ற காற்று வீசும் வனப்பிரதேசத்தில், ஒரு சிறு ஊற்றிலிருந்து ஓடையாகப் புறப்பட்டு, பின் அகன்று விரிந்து பேரிரைச்சலோடு, செல்லுமிடங்களிலெல்லாம் மக்களை மகிழ்வித்து கடலில் கலக்கிறது நதி.
அதேபோல, சிறு வயதில் வாய்திறந்து பேசப் பயப்பட்டு வாழ்க்கையில் தான் சந்தித்த பிரச்சனைகளை, வலிகளை, யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல், எதிர்நீச்சல் போட்டு, முன்னேறி இன்று, வெற்றிச் சிகரத்தில் நின்று கொண்டிருக்கிறார் சூர்யா.
'சிவகுமாரின் பிள்ளை சூர்யா என்பதுபோய், சூர்யாவின் தந்தை சிவகுமார் என்று பேரசும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார் சூர்யா' என்று டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
'எந்த மேதையும் தன் பிள்ளையிடம் தோற்பதை பெருமையாகவே நினைப்பார்' என்று சோ அவர்கள் அதை ஒட்டிப் பேசினார்.
தனி மனிதவாழ்கையில் - வசதியான சூழலில், ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தபோதிலும், சூர்யாவுக்கும் சில பிரச்னை இருந்திருக்கிறது என்பது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அதைக் கடந்து வர அவர் உளவியல் ரீதியாக நடத்திய போராட்டம், திரையுலகில் நுழைந்து வித்தியாசமான வேடங்களில், உயிரைப் பணயம் வைத்து நடித்த சாகஸம் எல்லாம் இந்நூலில் சுவைப்படச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏழ்மையிலும் வறுமையிலும் இளம் வயதில் உழன்று, கல்வி கற்கப் பெரும்பாடுபட்டு, முட்டி மோதி, முன்னேறியவர்களின் வரலாறு களைத்தான் நாம் அதிகம் படித்திருக்கிறோம்.
வசதி மிக்க சூழலில், வழிகாட்ட குடும்பத்தில் ஆட்கள் இருக்கும் நிலையில் கூட, ஒரு இளைஞன், தாழ்வு மனப்பான்மையால் அடித்துச் சாய்க்கப்படமுடியும் என்கிற விஷயம் சூர்யாவின் வாழ்க்கைச் சம்பவங்கள் வழியே நமக்குத் தெரிகிறது.
'கடலில் எப்படிப் புயல் அடித்தது என்பது முக்கியமல்ல, நீ பத்திரமாகக் கப்பலைச் கரைசேர்த்தாயா என்பதே முக்கியம்' என்ற முதுமொழிக்கேற்ப இன்று சூர்யா அனைத்து இடர்களையும் தூக்கி எறிந்து அடலேறு போல காட்சியளிக்கிறார்.
தொட்டாச் சிணுங்கியாக இருக்கும் இளைஞர்களுக்கு இது துணிவூட்டும் நூலாக விளங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. திரு.ஜெயந்தன் எழுத தொடராக வெளியிட்ட 'கல்கி' இதழுக்கும், நூலாக முழுவடிவமும் பெற உழைத்த நண்பர் த.செ.ஞானவேல் அவர்களுக்கும், கைப்படக்காரர் ராஜசேகர் அவர்களுக்கும் நன்றிகள்.
ஆனந்தவிகடனில் வெளிவந்த சூர்யாவின் பேட்டியில் இருந்து சில வரிகளை அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. விகடனுக்கு நன்றி.
முன்னுரை:
அலை ஒடுங்கிய கடல்போல், அமைதியாக இருப்பவர்களை, ஒருபோதும் அலட்சியப்படுத்திவிடக்கூடாது. கடலை விடவும் ஆழமான மனிதர்களாக அவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்குள் மூழ்க மூழ்க, சற்றும் எதிர்பாராத ஆழ்மனப் புதையலை அள்ளிக்கொண்டு வரலாம். எனது இதழியல் அனுபவத்தில், சூர்யா இதற்கொரு சூப்பர் உதாரணம். ஆரவாரமும் பந்தாவுமே வாழ்க்கை என்றாகிப்போன திரையுலகில், அவை பற்றிய பிரஞையை, அறவே உதறிவிட்டு, நடிப்புக் கலையின்மீது மட்டும் பிடிப்போடு நடைபோடும் சூர்யாவுக்குள் நான் எதிர்பார்த்துச் சென்ற மனிதன் வேறு. மாறாக தரிசித்த மனிதன் வேறு. சமூக அடுக்கில் ஏழ்மை நிலை அல்லது ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து வெளியே வந்து, வெற்றி பெறுவதை மட்டுமே, ஒரு போராட்டம் மிக்க வெற்றியாகப் பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாம். அதுவே பிரமுகர் வீட்டுப்பிள்ளையாக தங்கத்தட்டில் பிறந்து, வைரக்கட்டிலில் வளர்ந்தாலும், அங்கேயும் அடிமேல் அடி, மிதிமேல் மிதி, வலிமேல் வலி என்று அடுக்கடுக்கான பிரச்னைகள் உண்டு. துரோகங்கள், தோல்விகளைத் தாண்டித்தான் வெற்றிக் கோட்டினைத் தொட்டாக வேண்டும் என்பதற்கு, சூர்யா இந்தப் புத்தகத்தின் வழியே நிகழ்கால சாட்சியாகி நிற்கிறார்.
தன்னம்பிக்கையைப் பருகத்துடிக்கும் அனைத்து தரப்பு தமிழ் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெட்ரா இந்த தொடர், கல்கியில் வெளிவந்து முடித்த கையோடு, அதைப் புத்தகமாகப் போடலாம் என்றேன். "நாட்டுக்குச் சொல்ல இதில் என்ன இருக்கிறது" என்று தீர்க்கமாக மறுத்தார் சூர்யா. ஆனால் வீழ்ந்து வீழ்ந்து மறுபடி மறுபடி எழுந்து, ஏறுநடை பயின்று காட்டிய ஒரு இளைஞனின் முதல் முப்பதாண்டு கால வாழ்க்கை முன்னோட்டம். இதைப் படிக்கும் வாசகர் நெஞ்சில் தன்னம்பிக்கை எனும் மின்னூட்டத்தை பாய்ச்சக் கூடியதாக, ஒளிவு மறைவு இல்லாமல் பந்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை வாசகர்களே சூர்யாவுக்கு உணர்த்திய பிறகே நூல் வடிவத்திற்கு அரை மனதுடன் ஒப்புக் கொண்டார்.
- ஆர்.சி.ஜெயந்தன், தொகுப்பாசிரியர்.