என்னுரை:
இவை ஸ்நேகம் மிகுந்து எழுதப்பட்ட இனிய கடிதங்கள் தன்னால் தன்னுள் பாதிக்கப்பட்டு அவ்வித பாதிப்பு தனக்கு வெளியே வேற ஜீவனுக்கும் ஏற்பட்டதை அறிந்து இனம் கண்டு என் மாதிரியே உனக்குமா என்று பரவசமாகி பாராட்டாய் வெளியிட்ட கடிதங்கள்.
எனக்கு வந்த பாராட்டை நான் பாராட்டிக்கொள்ளும் காரியமாக அல்லாமல் எழுதுபவருக்கும் வாசகருக்கும் சமீபகாலமாய் நல்ல தொடர்பு ஏற்பட்டு விட்ட சூழ்நிலையை அறிவிக்கும் வண்ணமே இங்கே இவை வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஒரு சிறிய விழிப்புணர்ச்சி நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. சில கடிதங்களில் குரல் உயர்ந்து உணர்ச்சி அதிகமாயிருப்பினும் ஒரு சத்திய சந்தோசம் தெரிகிறது. நீ சொல்வதை நானும் புரிந்து கொன்டேன். மேற்கொண்டு என்று ஒரு தேடல் தொக்கி நிற்கிறது.
இவை என் விலாசத்திற்கு நேரடியாய் வந்த கடிதங்கள். இவை பிரசுரிக்கப்படும் என்று இவற்றை எழுதியவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதற்காக எழுதப்பட்டதும் இல்லை இவை. என் பதிலோ நன்றியோ தேவையில்லை இவர்கட்கு.
கம்பனிகளுக்கு நடுவே பந்து உதைப்பட்டதும் கூட்டம் முழுவதும் எழுந்து கைதட்டுவதுபோல் தானே அக்காரியம் செய்து முடித்த மகிழ்வோடு களைப்போடு உற்சாகத்தோடு தனக்குப் பிடித்த கட்சி ஜெயிப்பதைப் போல் தன் எண்ணம், தன் விஷயம் என் மூலம் வர கை தட்டிப் பாராட்டும் விதம் இது. பந்து உதைத்தவன் திரும்பிப் பார்ப்பானா, வணக்கம் சொல்வானா என்று கூட்டம் எப்படி எதிர்பார்பதில்லையோ, இவர்களும் என் பதில் இயக்கத்தை எதிர்பார்க்கவில்லை.
கைத்தட்டல் இல்லாமல் போயிருந்தால் பந்து உதைத்தவனுக்கு என்னமோ ஏதோ - இது தவறோ என்று பயம் வரத்தான் செய்யும். கைதட்டல் கேட்ட பிறகு சற்று நிம்மதி படர்ந்து, தட்டிப் பாராட்டின வர்களை முற்றிலும் மறந்து இன்னும் ஒரு எண்ணிக்கைக்கும் பந்தை மும்முரமாய் உதைக்கும் முனைப்பு ஏற்பட்டு விடும்.
நான் அந்நிலையில் இருக்கிறேன். வாசகர்கள் கொடுத்த உற்சாகம் என்னைப் பலப்படுத்தியிருக்கிறது. மேலும் இயங்கத் தூண்டியிருக்கிறது.
இது ஒரு உன்னதமான விஷயம். அனுபவித்தவர்க்கு இதன் மகிமை புரியும்.
இங்கே ஆண் பெண் உறவு க்ஷீணமடைந்த நிலையில் இருக்கிறது. இந்த க்ஷீணமடைந்த உறவில் பிறந்த என் தலைமுறை அதிகம் அவஸ்தைப்பட்டிருக்கிறது. அடுத்தவரை அறிந்து கொள்ளும் முயற்சியே இல்லாதிருப்பதும், முயற்சியின் ஆரம்பித்திலேயே ஆயாசம் கொள்வதும் தினசரி வாழ்க்கையைச் சிக்கலாகிப் பயத்தை ஏற்படுத்தி பயம் காரணமாய் வெறுப்பை உமிழ்ந்து, மேலும் விலகி நிற்கும் நிலை நீடிக்கிறது. இதை மாற்ற முடியாதா என்ற கேள்வியின் விளைவு நல்ல நட்புக்கு ஏங்கின தண்மை என்னை எழுதத் தூண்டிற்று.
இந்நாவலை இலக்கியம் என நான் கொண்டாட முற்படுவதாய் நினைக்க வேண்டாம். அதைக் காலம் தீர்மானிக்கும். இந்நாவல் வாரப் பத்திரிகையில் வெளி வந்ததாலேயே உண்டான துவேஷத்தைத் தணிக்க முயல்கிறேன்.
முடிந்த நாவலை மொத்தமாய் பார்க்கிறபோது மெல்லிய நிறைவும் அடுத்தபடி செய்ய வேண்டியவைகளுமாய் ஒரு கவலை நினைப்பு உள்ளே ஓடுகிறது.
என்றும் அன்புடன்,
பாலகுமாரன்..
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.