கடந்த இருபது வருடங்களாக நான் சந்தித்தும் கலந்துரையாடியும் வந்துள்ள ஒரு கோடியே அறுபது லட்சம் இளைஞர்களுக்கு நான் இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
கனவுகள் என்பவை நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவைதான் நமது கனவுகளாக இருக்க வேண்டும். - டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்.
சின்னஞ்சிறு தீவான இராமேஸ்வரத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நம் நாட்டின் பதினோராவது குடியரசுத் தலைவராக உருவான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையானது அசாதாரணமான மன உறுதி, அபாரமான தைரியம், அயராத விடாமுயற்சி செய்கின்ற ஒவ்வொன்றையும் மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் ஆகியவற்றைப் படிக்கற்களாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.
இப்புத்தகத்தில் டாக்டர் கலாம் அவர்கள் , தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சிறிய மற்றும் பிரமாண்டமான நிகழ்வுகளை ஆசுவாசமாக நின்று திரும்பிப் பார்த்து உணர்ச்சிபூர்வமாக அசை போடுகிறார். அவை ஒவ்வொன்றும் தன் வாழ்க்கையில் எவ்வாறு பெரும் தாக்கத்தை விளைவித்தன என்பதை வாசகர்களோடு அவர் பகிர்ந்து கொள்கிறார். தான் சிறுவனாக இருந்த போதும் வாலிபனாக வளர்ந்த போதும் தனது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களைப் பற்றியும் அவர்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைப் பற்றியும் அவர் இதில் எடுத்துரைக்கிறார். ஆழ்ந்த தெய்வ பக்தியுடன் இருந்த தனது தந்தையார், அன்பே உருவான தனது தாயார், தனது கண்ணோட்டத்தையும் தனது சிந்தனையையும் செதுக்கிய வழிகாட்டிகள் போன்ற, தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு நெருக்கமாக இருந்த அனைத்து அன்புள்ளங்களையும் அவர் இதில் நன்றியுணர்வோடு நினைவுகூர்கிறார்.
சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் பூரணமானதாக விளங்கும் டாக்டர் கலாம் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அழகான பாடங்கள் இந்நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
உள்ளடக்கம்:
முன்னுரை;
என் தந்தையின் அதிகாலை நடைப்பழக்கம்;
படகு;
எட்டு வயதில் வேலைக்குப் போன சிறுவன்;
ஒரு பிரச்சினையைத் தீர்த்த மூன்று பெரிய மனங்கள்;
என் அம்மாவும் என் சகோதரியும்;
எனது முதல் வழிகாட்டி; அகமது ஜலாலுதீன்;
நான் தோல்வியைத் தழுவியபோது;
என்னைக் கவர்ந்த புத்தகங்கள்;
நெருப்போடு ஓர் உரசல்;
எனது இன்னொரு வழிகாட்டி: டாக்டர் விக்ரம் சாராபாய்;
அறிவியலுக்குள் மூழ்கி முத்தெடுத்த ஒரு வாழ்க்கை;
கடக்க வேண்டிய தூரம் இன்னும் கணிசமாக இருக்கிறது;
நன்றி.
முன்னுரை:
'எனது பயணம்' எனும் இந்நூல், எனது குழந்தைப்பருவத்தில் தொடங்கி இப்போதுவரை என் வாழ்வில் எனக்குக் கிடைத்துள்ள சில குறிப்பிட்ட, தனித்துவமான அனுபவங்களை நினைவுகூர்கிறது. நான் என்பது வயதைக் கடந்தவன். இத்தனை வருடங்களின் ஊடாக எனக்குக் கிடைத்தச் செழிப்பான அனுபவங்கள் மூலமாக நான் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான பாடம், ஒருவர் தன் வாழ்வின் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும், பிறகு அந்தக் கனவுகளை நனவாக்குவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும் என்பதுதான். நாம் அவ்வாறு செய்தால், வெற்றி நமது கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிடும். நான் சந்திக்கின்ற பலரிடம், "கனவுகள் என்பது நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல;நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவைதான் நமது கனவுகளாக இருக்க வேண்டும்," என்று எப்போதும் கூறி வருகிறேன்.
நான் ஏற்கனவே ஒருசில புத்தகங்களை எழுதியுள்ளேன். அவற்றில் சிலவற்றில் எனது குழந்தைப்பருவ அனுபவங்களை நான் விவரித்திருக்கிறேன். என் வாழ்க்கையைப் பற்றிய முதல் புத்தகத்தை நான் எழுதியபோது, அந்நூல் எப்படி மற்றவர்களுக்கு சுவாரசியமானதாக இருக்கும் என்று நான் வியந்திருக்கிறேன்.எனது முந்தைய நூல்களைப் போலன்றி, இந்நூல், என் வாழ்வின் மிகச் சிறிய, அதிகமாக அறியப்படாத நிகழ்வுகள்மீது அதிகக் கவனம் செலுத்துகிறது. எனது தாயார் மற்றும் தந்தையாரைச் சுற்றி அமைந்த நிகழ்வுகளை நான் இதில் எழுதியுள்ளதற்குக் காரணம், அவர்கள் எனக்குள் அன்போடு விதைத்த மதிப்பீடுகளையும் நன்னெறிகளையும் இப்போது எனது எண்பத்தியிரண்டாவது வயதிலும்கூட நான் பெரிதும் மதித்துப் போற்றுவதுதான். அவர்கள் எனக்குள் விதைத்தப் பண்புநலன்களும், தாங்கள் எதிர்கொண்ட சாதகமற்றச் சூழ்நிலைகளுக்கு அவர்கள் அளித்தச் செயல்விடைகளைப் பார்த்துப் புரிந்து கொண்டதன் மூலமாக நான் கற்றுக் கொண்ட மதிப்பீடுகளும் நான் சிறப்பான வாழ்க்கையை வாழ எனக்கு உதவி வந்துள்ளன. இந்த மதிப்பீடுகளின் ஊடாக, என் பெற்றோர் இன்றும் எனக்குள் வலிமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனது தந்தை, மக்களுடைய மனங்களைப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசியபோதும் சரி, சிரமங்களை உணர்ச்சிவசப்படாமல் எதிர்கொண்டபோதும் சரி, அவர் கூறிய வார்த்தைகள், பல வருடங்களுக்குப் பிறகு நான் பல இன்னல்களை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தபோது என் நினைவிற்கு வந்தன. என் தாயாரின் மென்மையான தொடுதலிலும், தனது குழந்தைகளை அவர் பேணி வளர்த்த விதத்திலும் அன்பும் பரிவும் நிறைந்த ஓர் உலகத்தை நான் கண்டேன். எனது சகோதரி ஜொஹராவின் பங்களிப்புகளையும் அவரது தயாள குணத்தையும் இந்நூலில் விபரமாகப் பதிவு செய்யவேண்டும் என்ற ஒரு வலிமையான தூண்டுதல் என்னுள் எழுந்தது. நான் மேற்படிப்பைத் தொடர்வது பற்றிச் சிந்திப்பதற்கு என்னை ஊக்குவித்த எனது முதல் ஆசானான அகமது ஜலாலுதீனின் கண்ணோட்டத்தின் வெளிப்படைத்தன்மையையும் நான் இங்கு விரிவாகக் குறிப்பிட வேண்டியது அவசியமாயிற்று.
இக்கதைகள், எனது வாசகர்கள் அனைவரும் தங்கள் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கும், தங்களை விழித்திருக்க வைக்கின்ற அக்கனவுகளை நனவாக்குவது குறித்துக் கடினமாக உழைப்பதற்கு அவர்களைத் தூண்டுவதற்கும் உதவும் என்று நான் நம்புகிறேன்.
- ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
ஆசிரியர் : : ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை. 2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.
கலாம் எழுதிய புத்தகங்கள்:-
Turning Points; A journey through challenges 2012.
Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.
The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
Mission India (திட்டம் இந்தியா) ; ஏ.பீ.ஜே. அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.
Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.
Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
(Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம். நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
ஓவியங்கள்: பிரியா செபாஸ்டியன்.