பிரம்ம சூத்திரம் என்பது வேதாந்தம் என்னும் உபநிஷதுகளின் வாக்கியங்களைக் குறிப்பிட்டு 'பிரம்மம்' என்னும் இறுதி உண்மையை அறிய முயலும் சிறிய வாக்கியங்களின் தொகுப்பு. இது பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற எந்த கடவுளையும் பற்றியதல்ல. பிரபஞ்சத்தின் இறுதி உண்மையையும் ஆதாரத்தையும் ஆரம்பத்தையும் மனித சிருஷ்டியையும் ஜீவனையும் ஆத்மாவையும் வேறுபடுத்திக் காட்டி ஆராயும் பாதராயணரின் இந்நூலின் இரத்தினைச் சுருக்குமான வாக்கியங்களை விளக்கமில்லாமல் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
'இந்தப் புத்தகம் முதல் அத்தியாயத்தில் பிரம்ம சூத்திரத்தைப் பற்றிய விரிவான பொது அறிமுகம் உள்ளது. அதை நீங்கள் படிப்பதற்கு முகாந்திரமாகச் சில செய்திகள் சொல்கிறோம். இந்தக் கட்டுரைத் தொடர் ஏறத்தாழ இரண்டு வருஷங்களாக குமுதம் பக்தி இதழில் வெளிவந்தபோது, பலர் எங்கள் அசாத்தியத் துணிச்சலைப் பாராட்டி எழுதினார்கள். சந்திக்கும்போது சிலாகித்தார்கள். சிலர் 'சுத்தமாகப் புரியவில்லை, ஆனாலும் படித்து வருகிறோம்' என்றார்கள். நாங்கள் 'எல்லா சூத்திரங்களும் அறிமுகமான பின் இவைகளைப் பற்றிய ஒரு முழுமையும் பொது எண்ணமும் கிடைக்கும். அப்போது பிரம்ம சூத்திரத்தின் நோக்கம் என்ன என்பது மெல்லப் புரியும்' என்று சொன்னோம். அப்படித்தான் எங்களுக்கும் இந்த சூத்திரங்கள் படிப்படியாக அணுகும்போது தெளிவாயின.
பிரம்ம சூத்திரங்கள் மூலம் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை. இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாயிற்று? யாரால் உருவானது? நாம் எப்படி உருவானோம்? இறந்த பின் என்ன ஆகிறோம்? மறுபிறவி எப்படி நிகழ்கிறது? மோட்சம் என்பது என்ன? பிரம்ம சூத்திரம் இக்கேள்விகளுக்கெல்லாம் விடைகளை ஒருவாறு துணிவுடன் தீர்மானிக்க முற்படும் மிக முக்கியமான நூல். அது வேதத்தில் சொல்லப்படுவது அனைத்தும் உண்மை என்கிற ஆரம்பிக்க கருத்துடன் துவங்குகிறது.
சூத்திரங்கள் ரத்தினச் சுருக்கத்தினால் அவை பலவிதமாக அர்த்தம் செய்து கொள்ளப்பட்டன.இதனாலேயே இந்த சூத்திரர்களுக்கு விளக்கங்களை பல மகான்கள் பலவிதமாக எழுதியுள்ளார்கள். சங்கரர் தொடங்கி, பாஸ்கரர், ராமாநுஜர், மத்வர், ஸ்ரீகண்டர், நிம்பார்க்கர், ஸ்ரீபதி, வல்லபர், சுகர், பலதேவர், நேற்றைய டாக்டர் ராதாகிருஷ்ணன் வரை அநேகர் உரையெழுதி விளக்கியிருக்கிறார்கள்.
நாங்கள் எழுதியிருப்பது உறையல்ல, அறிமுகம். சங்கரர், ராமாநுஜர் இருவரின் வியாக்கியானங்களை, முக்கியமாக ராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. மத்வரின் கருத்துக்களைக் கொஞ்சமே தொட்டிருக்கிறோம். இம்மூன்று மேதைகளின் ஆதார கருது வேற்றுமைகளை நீங்கள் முதலில் அறிந்து கொள்வது பயன்படும்.
இந்த முயற்சி எங்கள் சொற்பமான சம்ஸ்க்ருதப் புலமையைக் காட்டுவதல்ல, மூலத்தின் தொனியை வாசகர்களுக்கு காட்டுவதே. - சுஜாதா
எழுத்தாளர்கள்:-
சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
எஸ்.ராஜகோபாலன் :- எம்.டி.என்.எல்.சேர்மனாக இருந்து ஓய்வுபெற்றவர் மற்றும் அவர் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சகோதரரும் ஆவார்.