Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சித்தர் தத்துவம் - பா.கமலக்கண்ணன் - Siddhar Thathuvam - P Kamalakannan - Sithar Tathuvam - Siddar Thatuvam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 493
₹100.00
ஆன்மீகம் நூல்.
 
காகித அட்டை / பேப்பர்பேக்;
272 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: அக்டோபர், 2000;
நான்காம் பதிப்பு: ஆகஸ்ட், 2014.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் சித்தர் தத்துவம், பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                                                                                                                                               
முன்னுரை: 
அண்ணன் வானதி திருநாவுக்கரசு அவர்கள், 'சித்தர் தத்துவம்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வு நூலை உருவாக்குமாறு என்னைப் பணித்தார்கள்.
 
சித்தர் தத்துவத்தின் அடிப்படை என்ன?
சிற்றம்பலம் என்னும் நெற்றி நடுநிலை!
சிற்றம்பலத்தில் ஒளிரும் செம்பொருள் எது? 
 
சுயம்புலிங்கமான அருட்பெருஞ்சோதி சொரூபம்! அதுவே ஜீவன்! அதுவே பரப்பிரம்மத்தின் அரூபாரூபம் ! அதுவே சர்வ வேதங்களும் போற்றிப் புகழும் ஏக இறைவனாகிய பரம்பொருள்! அதுவே முத்திக்கு மூலப் பொருள் ! அதை அடைவதற்குத் தேவை இறைவனின் தனிப்பெருங் கருணை!
 
1963 ஆம் ஆண்டில் என் குருநாதர் புதுக்கோட்டை அருட்குரு ஆறுமுகம் பிள்ளை அவர்களிடம் மெய்ஞ்ஞான உபதேசம் பெற்று, ஞானமர்க்கத்தில் கடந்த முப்பத்தியேழு ஆண்டுகளாக நிலைத்து நிற்பவன் எளியேன். என் குருவின் ஆணைப்படி அகத்தியர் முதல் இராமலிங்க அடிகளார் வரை, பற்பல சித்தர்கள் பாடிய ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களை ஆய்வு செய்துள்ளேன்.
 
1985ல், "உதிக்கும் ஞானம்" என்று இறைவனே அடி எடுத்துக் கொடுக்க, 'ஞான விளக்கம்' கவிதை நூல் எழுந்தது. அந்நூலுக்குத் தலைப்பைத் தந்த இறைவன், அதையே உரைநடையில் "ஞானக்கனல்'' என்ற தலைப்பில் 
உருவாக்குமாறு ஆணையிட்டான். அதன் பின்னர் பல நூல்கள் உருப்பெற்றன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக, தமிழ்கூறும் நல்லுலகிற்கு அண்ணன் வானதி திருநாவுக்கரசு அவர்கள் படைத்தார்கள். பூர்ண கும்பத்தை ஏந்திய யானைச் சின்னம் பொறித்த வானதி, மூலம் உலா வருவதைக் கண்டு வியப்புற்று நிற்கின்றேன்.
 
அமெரிக்காவிலிருந்தும் கனடாவிலிருந்தும் இந்தியா வந்த தமிழன்பர்கள், நேரில் வந்து என்னுடைய நூல்களைப் பாராட்டிச் சென்றனர்.
 
மலேசியாவிலிருந்து, பல தமிழன்பர்கள் அடிக்கடி நேரில் வந்து பாராட்டிச் செல்கின்றனர். 
 
இவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போன்றதோர் நிகழ்ச்சியை நான் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.
 
சென்னை அயனாவரத்தை சேர்ந்த திருமதி ப.கற்பகம் அம்மாள் என்ற மூதாட்டி நேரில் வந்து என்னுடைய 'ஞானக் கனல்' நூலைப் பாராட்டினார்கள். அந்த உரையாடலின்போது, நான், "முதியோர் சரணாலயம்" என்ற பெயரால் ஒரு இல்லம் கட்டும் என்னுடைய எண்ணத்தைப் பற்றியும் அதற்காக வானூர் வட்டம் பட்டானூர் கிராமத்தில் (திண்டிவனம் நெடுஞ்சாலையில், ஜிப்மேர் மருத்துவமனையிலிருந்து வடக்கில் 2கிலோ மீட்டர் தூரத்தில்) புல எண்கள் 51/4, 51/5ல், 15 செண்டு மனை வாங்கி வைத்திருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டேன். அந்த அம்மையார், தமது எஞ்சிய வாழ்நாட்களுக்காக சேர்த்து வைத்திருந்த, ஒன்றே முக்கால் லட்சம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து, கட்டிடப் பணியை துவக்கி வைத்தார். அதுமட்டுமல்ல; தன்னுடைய மீதமுள்ள சொத்துக்கள் முழுவதும் தன் ஆயுட்காலத்துக்குப் பிறகு, முதியோர் சரணாலயம் அறக் கட்டளைக்குச் சேர வேண்டுமென்றும் தன்னுடைய அந்திமக் கிரியைகளை நானே செய்ய வேண்டும் என்றும் உயில் எழுதிப் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு நூலுக்கு இவ்வளவு மகிமை ஏற்பட்டிருப்பதைக் கண்டு நான் மெய் சிலிர்த்து நிற்கின்றேன்.  அயனாவரம் ப.கற்பகம் அம்மாள் வரலாற்றில் இடம் பெற்று விட்டார்! இறைவனின் திருவருளை எண்ணி, எண்ணி வியந்து நிற்கின்றேன்!
 
இந்த நிகழ்ச்சிகளிலுருந்து, கணினியும் -தொலைக்காட்சியும் ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையிலும் கூட, மக்கள் உள்ளத்தில் ஞான வேட்கை கனன்று கொண்டிருப்பது புலப்படுகிறது அல்லவா? 'ஞானக்கனல்' நான்காம் பதிப்பு வெளி வந்திருப்பது, இதை உறுதிப்படுத்துகிறதல்லவா ?
 
சமய நல்லிணக்கத்தையும், மனிதநேய ஒருமைப்பாட்டையும் விளக்குகின்ற என்னுடைய நூல்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று சிலர் என்னிடம் கேட்கின்றனர்.
 
பாரதியார் உயிர் வாழ்ந்தபோது, ஒரு பரிசுப் போட்டிக்கு அவர் அனுப்பிய பாடல் தேர்ந்தெடுக்கப்படவில்லை. வேறொருவர் பாடலுக்குப் பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசைப் பெற்ற பாடல், காலத்தால் அழிந்துவிட்டது. ஆனால், பரிசு பெறாத பாரதியாரின் பாடல்கள் காலத்தை வென்று தமிழர் வாழும் இடமெல்லாம் ஒலிக்கக் கேட்கிறோமன்றோ? ஆகவே, நூலின் பெருமை, அவரவர் காலத்துக்குப் பின்னரே வெளிப்படும் என்பது கண்கூடு.
 
கடந்த நான்காண்டு கால ஆய்வின் பயனாக "சித்தர் தத்துவம்" என்னும் இந்நூல் உருவாகியுள்ளது. இந்த ஆய்வில் இருந்து, சைவ சித்தாந்தம் என்ற பெயரையும் நெறியையும் வகுத்தளித்த பத்தாம் சைவத் திருமுறையான திருமந்திரத்தை, சைவ சமய ஆச்சாரியர்கள் புறம் தள்ளிவிட்டு, தருக்க நூல்களின் அடிப்படையில் தனியானதொர் சைவ சித்தாந்தத்தை உண்டாக்கி அதை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளதைப் படம் பிடித்துக் காட்டியுள்ளேன். திருமூலர் ஒரு சித்தர் என்பதாலும், அவர் வேத ஆகமங்களின் அடிப்படையில் நூல் இயற்றி உள்ளார் என்பதாலும், அவர் கூறிய சைவ சித்தாந்தம், சைவ சமய ஆச்சாரியார்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும். வடலூர் இராமலிங்க அடிகள், இக்கொடுமையை எதிர்த்துக் குரல் எழுப்பினார். பின்னர், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்து மெய்ஞ்ஞான நெறியை விளக்கினார். ஆனால், தொழுவூர் வேலாயுத முதலியார் கூட அவரிடம் ஞானோபதேசம் பெற முன்வரவில்லை. ஆகவே, 30-1-1874 அன்று அடிகளார், கதவைத் தாளிட்டுக் கொண்டு மறைந்தார்கள். சுமார் 150 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, அதே கருத்துக்களை மக்களுக்கு விளக்கும் பேற்றினை இறைவன் எளியேனுக்கு அருளியுள்ளான். ஆதாரபூர்வமான விளக்கமுடைய இந்நூலை எத்தனைபேர் படிப்பார்கள் என்று நான் அறியேன். படிப்போர்களுள் ஒரு சிலராவது உண்மையை உணர்ந்து நேர்வழிக்குச் செல்வார்களா என்றும் நான் அறியேன். இந்நூலைப் பற்றிய போற்றுதலும் தூற்றுதலும் இறைவன் திருவடிகளுக்கே!
 
இராமலிங்க அடிகளுக்கு "ஜோதி" என்றும் "திருவருட் பிரகாச வள்ளலார்" என்றும் பட்டப் பெயர்கள் ஏற்பாடக் காரணம் என்ன? அவருக்கு மெய்ஞ்ஞான உபதேசம் செய்த குரு யார்? திருவருட்பா தொகுப்பு நூல் 1867ல் வெளிவருவதற்கு முன்னால், "திருவருட்பா" என்ற பெயரில் முதன்முதலில் வெளிவந்த பாடல் எது? இவ்வினாக்களுக்கான விடைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
 
காழிக் கண்ணுடை வள்ளல் என்பார் இயற்றிய "ஒழிவிலொடுக்கம்" என்ற நூலுக்கு, இராமலிங்க அடிகள், 1851ல் சிறப்புப் பாயிர விருத்தியுரை எழுதிப் பதிப்பித்ததை நாம் அறிவோம். அந்நூலாசிரியர், தமது குரு "தமிழ்க் குரிசில் சீர்காழி சம்பந்தன் என்பான்" என்று பாடல் எண் 1/11ல் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தில், சம்பந்தர் என்றால் தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் ஒருவரைத்தான் தமிழுலகம் அறிந்திருந்தது. ஏனெனில் கல்வெட்டு வரலாற்று ஆராய்ச்சி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புதான் மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, ஒழிவிலொடுக்கம் ஆசிரியரின் குருநாதர், தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் என்று அந்நூலுக்கு உரை எழுதிய திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் குறிப்பிட்டார். அதைப் பின்பற்றி சிறப்புப் பாயிர விருத்தியுரை எழுதிய இராமலிங்க அடிகளும், "மூவாண்டில் மேய்ப்போதம் உண்டு பதிக மழை பொழிந்த அருள்முகில் சம்பந்த வள்ளலாம் கடவுள்" என்று எழுதினார். ஆனால் ஒழிவிலொடுக்கம் நூலை, ஆய்வு செய்கின்றபோது, அதில், 'சன்மார்க்கம்', 'தன்னைத் தானறிதல்', 'அத்வைத சித்தாந்த மோன முடிபு' ஆகிய மெய்ஞ்ஞானச் சொற்களைக் கண்டு திகைத்தேன்! பாடல் எண் 8/36ல் தேவாரம் ஓதத் தேவையில்லை என்று கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியடையச் செய்தது! பாடல் எண் 7/3ல் பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் ஒப்பு நோக்குகின்ற போது, ஒழிவிலொடுக்கம் நூல் தேவாரம் பாடிய சம்பந்தரோடு தொடர்புடையதல்ல என்றும், பிற்காலத்தில் தோன்றிய அதே பெயருடைய வேரோவரைக் குறிக்கிறதென்றும் அறிந்தேன். ஆகவே, இதைப்பற்றி விரிவாக ஆராய்ந்து, கண்ணுடை வள்ளலின் குரு 133ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மறைஞான சம்பந்தர் என்று நிரூபித்துள்ளேன். இதனால் வள்ளற் பெருமானுடைய எழுத்தில் ஏற்பட்ட வரலாற்றுப் பிழை, அவருடைய ஆணைப்படி இந்நூலால் திருத்தும் செய்யப்பெறுகிறது என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
திருமாலின் ஏழாவது அவதாரமான இராமபிரானுக்கு, வசிட்ட முனிவர் உபதேசம் செய்தருளிய ஞானவாசிட்டம் என்ற நூல் பரப்பிரம்மமே ஏக இறைவன் என்றும், சிவன் - விஷ்ணு -பிரம்மா ஆகிய மூவரும் அவனுள் அடக்கம் என்றும் கூறுவதை இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளேன்.
 
சைவம் பெரிதா? வைணவம் பெரிதா? என்று சர்ச்சை செய்யும் மாந்தரிடையே, இந்து வேதங்களை அருளிய அதே இறைவன்தான் திருக்குர் -ஆனையும் அருளியிருக்கின்றான் என்ற உண்மையை என்னுடைய நூல்களில் நான் வலியுறுத்தி வருவதை வாசகர்கள் நன்கறிவர். திருக்குர் -ஆனைப் பலமுறை ஆழ்ந்து கற்ற எளியேன் அதன் சாரத்தைத் திரட்டி "திருமறைத் தேன்துளிகள்" என்ற தலைப்பில் ஒரு சிறு கவிதை நூலை 1989ல் வேலூரில் பணியாற்றிய போது வெளியிட்டேன். அக்கவிதைகளை இந்நூலில் இணைத்துள்ளேன். இது, இந்து -இஸ்லாம் ஒருமைப்பாட்டைச் சிந்திக்க உதவும்.
 
இதுவரை எளியேன் இயற்றிய நூல்களை எல்லாம், கண்டு ஆசிர்வதித்த அருட்குரு புதுக்கோட்டை ஆறுமுகம் பிள்ளை அவர்கள், 16-11-1998 அன்று பரப்பிரம்மத்தோடு ஐக்கியமாகி அழியா அமரநிலை எய்திவிட்டார். குரு காணிக்கையாக இந்நூலை அய்யா அவர்களுடைய திருவடிகளில் சமர்ப்பித்து வணங்குகின்றேன். அய்யா அவர்களும், அவருடைய குருநாதர்களான முத்தால் ராவுத்தர் மற்றும் பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர் ஆகியோர் எளியேனையும், இந்நூலை கற்போரையும் ஆசீர்வதிக்கப் பிரார்த்திக்கின்றேன்.
 
இந்நூலுக்குத் தலைப்பைத் தந்து உருவாகச் செய்து, வெளியிட்டுள்ள அண்ணன் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடப் பாடுடையேன். வானதி பதிப்பகம் 18.5.1955ல் தோற்றுவிக்கப் பெற்றது முதல், கடந்த 45 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆன்மிகம், சமயம், இலக்கியம், வரலாறு, அறிவியல், உடல்நலம், வாழ்க்கை முன்னேற்றம், குழந்தை இலக்கியம், சிறுகதை, நாடகம், நாவல், கவிதை என்று பல்துறை நூல்களையும் பதிப்பித்து உலகெங்கும் உலா வருகின்றது வானதி. குடத்தில் விளக்காக இருந்த எண்ணற்ற எழுத்தாளர்களை குன்றின் மேலிட்ட விளக்காக்கி இருக்கின்றது வானதி. தரத்தின் சின்னம் வானதி என்று எல்லோரும் போற்றிப் புகழும் வகையில் இப்பதிப்பகத்தை வளர்த்துள்ளார் அண்ணன் ஏ.திருநாவுக்கரசு அவர்கள். அவருடைய தமிழ்த் தொண்டு மகத்தானது; வரலாற்றில் இடம் பெறத் தக்கது. தமிழ்மொழி உள்ளளவும் வானதி வளரும்; வாழும் என்பது உறுதி. வானதியின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி, என் குருநாதர் சார்பாகவும், திரு.ஏ.திருநாவுக்கரசு அவர்களுக்கு "தமிழ் மாமணி" என்ற விருதை வழங்கிச் சிறப்பிக்கின்றோம். அவர் நீடுழி காலம் நலமோடும் வளமோடும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
 
ஆன்மிக உலகிற்கு நல்வழிகாட்ட உருவாகியுள்ள இந்நூலைக் கற்போர் நற்பயன் பெறுவார்களாக! உலகில் சமய நல்லிணக்கமும் ஆன்மநேய ஒருமைப்பாடும் ஓங்குமாக! நலமுடன் வாழ்க! வளமுடன் வாழ்க! 
 
அருட்பெருஞ்சோதி; அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை; அருட்பெருஞ்சோதி.
 
திருச்சிற்றம்பலம்.
 
இங்ஙனம்,
பா.கமலக்கண்ணன் 
5-7-2000. 
 
ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
More Information
SKU Code VAN B 493
Weight in Kg 0.550000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:சித்தர் தத்துவம் - பா.கமலக்கண்ணன் - Siddhar Thathuvam - P Kamalakannan - Sithar Tathuvam - Siddar Thatuvam

Similar Category Products





Other Books by பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan