சித்தர் உருவில் சிவபெருமான் - பா.கமலக்கண்ணன் Siddhar Uruvil Sivaperumaan - P.Kamalakannan
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
VAN B 495
₹135.00
சித்தர் நூல் / சித்தர் தத்துவம்/ ஆன்மீகம் நூல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
216 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: நவம்பர், 2007;
மூன்றாம் பதிப்பு: நவம்பர், 2017.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் சித்தர் உருவில் சிவபெருமான், பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
முன்னுரை:
உலகைப் படைத்த இறைவன், உலக மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ்தற் பொருட்டு வேதங்களை உண்டாக்கினான். வேதங்களின் முக்கிய கருப்பொருளை விளக்குவதற்காக சிவபெருமான், "சிவரகசியம்" என்ற நூலை உருவாக்கினார். இது கிரந்த மொழியில் 12 அம்சங்களில் (படலங்களில்) ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட பெருநூலாகும். இந்நூலை சிவபெருமான் முதலில் உமாதேவியாருக்கு உபதேசித்தார். அன்னையார், அதை விநாயகருக்கும் முருகப்பெருமானுக்கும் உபதேசித்தார். முருகப் பெருமானிடமிருந்து சைகீஷவ்ய முனிவர் கற்றார். பின்னர், சிவபெருமானுடைய அருளால் வியாசமுனிவர் கற்றுக்கொண்டு சூத முனிவருக்கு உபதேசித்தார். சூத முனிவர் மூலமாக, சதுரகிரியில் தவம் செய்த பற்பல சித்தர்கள் இந்நூலைக் கற்றனர்.
சிவரகசியம் என்ற நூலில் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு மார்க்கங்களைப் பற்றியும் சிவபெருமான் விளக்கியுள்ளார். இந்நூலின் 12 அம்சங்களுள், சரியை-கிரியை பற்றிய மூன்றாம் அம்சம் "சிவரகசியம் - திரியாம்சிகை" என்ற பெயரில் திருவாரூர் ஒப்பிலாமணி தேசிகர் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பெற்று, தஞ்சாவூரை ஆட்சி செய்த சரபோஜி மன்னர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யப் பெற்றது. இந்த நூலின் ஒரு பிரதி சென்னை அடையாற்றிலுள்ள தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
"சிவ ரகசியம்" நூலின் ஆறாம் படலம் ஞானமார்க்கத்தைப் பற்றியதாகும். முன்னொரு காலத்தில் இமயமலைச் சாரலில் கடுந் தவம் புரிந்து வந்த ரிபு என்ற முனிவருக்கு சிவபெருமான் இந்த ஆறாம் படலத்தை உபதேசித்தருளினார். பின்னர், இமயமலைச் சாரலில் தவம் செய்த நிதாக முனிவர், சுகப்பிரமரிஷி ஆகிய இருவரும் ரிபு முனிவரிடம் சீடர்களாகச் சேர்ந்து அந்நூலைக் கற்றனர். ஒவ்வொரு நாளும் குருநாதரான ரிபு முனிவர் கூறும் கிரந்தப் பாடல்களை இருவரும் குறிப்பெடுத்து வந்தனர். உபதேசம் முடிந்த பிறகு, அக்குறிப்பேட்டிற்கு "ரிபு கீதை" என்று பெயரிட்டனர். நிதாக முனிவர் இமயமலைச் சாரலிலேயே தங்கிவிட, சுகப்பிரமரிஷி மட்டும் சதுரகிரிக்கு வந்து அங்கு தவம் செய்த பல சித்தர்களுக்கும் ரிபு கீதையைக் கற்பித்தார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிடைமருதூர் உலகநாத சுவாமிகள் என்பவர் ரிபு கீதையைத் தமிழாக்கம் செய்தார். இந்நூல், கோவிலூர் மடாலயத்தால் வெளியிடப்பட்டது. இவ்வாறு, சிவபெருமான் ஞானமார்க்கத்தைப் பற்றி உபதேசித்தருளிய சிவரகசியம் என்ற நூலின் ஆறாம் படலமாகிய ரிபு கீதை தமிழுக்குக் கிடைத்தது. ஆயினும், சிவரகசியம் என்ற பெயருக்கேற்ப இந்த நூல் இரகசியமாகவே இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் என்ன என்பதை சிவபெருமான் வாக்காலேயே கேட்போம்: -
அத்யந்த அதிசயமாம் அகண்ட ஞானம்
அப்படியே இந்நூலும் அதிசயந்தான்;
அத்யந்த அதிசயமாம் இந்த நூலை
ஐயமற அறிபவனும் அதிசயந்தான்;
அத்யந்த அதிசயமாம் இந்த நூலை
அருளுடனே அறைபவனும் அதிசயந்தான்;
அத்யந்த அதிசயமாம் இந்த நூலை
ஆதரவாய்க் கேட்பவனும் அதிசயந்தான். -ரிபு கீதை 38:38.
மாதவனே! இந்நூலைக் கேட்கத் தக்க
மாசற்ற மாணாக்கன் அரியனாவான்;
சாதகமாய் இந்நூலை உபதேசிக்கும்
சற்குருவும் சாலவுமே அரியனாவான்;
பேதமுறா இந்நூலின் புத்தகத்தைப்
பெற்றவரும் மெத்தவுமே அரியராவர்;
ஓதியஇல் ஏதுவினால் இந்நூல் எங்கும்
உரமாகப் பிரசித்தி மேவவில்லை.
- ரிபு கீதை 38:39.
பலசெனனத்து அநுட்டித்த அறங்கள் எல்லாம்
பக்குவமாய்ப் பாவங்கள் அனைத்தும் நீங்கி
இலகியதன் சொரூப நிலை இசையத்தக்க
இனிப்பிறவா முடிவான சென்மத்தில்தான்
சனைமெலாம் அறநீக்கி அகண்ட மாக்கும்
சத்தியுள இந்நூலைச் சாரலாகும்;
மலினமுறா இந்நூலைச் சார்ந்தோருக்கு
மறுபிறவி என்றுமிலை; மகேசன் ஆணை - ரிபு கீதை 38:40
மேற்கண்டபாடல்களின்பொருளாவது:
ஞானமார்க்கம் என்பது மிகவும் அரியது; ஆகவே சிவ "ரகசியம்" என்ற நூலும் அரியது. இந்த நூலை அறிபவரும் அரிது; விளக்குபவரும் அரிது: முழு மனதோடு கேட்பவரும் அரிது. ஆகவே பிறப்பை அறுக்கும் பெற்றியுடைய இந்த நூல் பிரசித்தி பெறவில்லை. பல சென்மங்களில் நல்லறங்கள் செய்து, பாவங்கள் நீங்கப் பெற்று, இனி பிறவாநிலை பெறும் முடிவான சென்மத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்நூலைச் சார்வர் என்பது சிவபெருமான் வாக்காகும்.
நாம் அறிந்தவரையில், சிவ ரகசியம் நூலின் 3 மற்றும் 6ஆம் படலம் ஆகிய இரண்டைத் தவிர எஞ்சிய 10 படலங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
ரிபு கீதை என்பது சிவபெருமானாலேயே உபதேசிக்கப்பெற்ற சிவரகசியத்தின் ஆறாம் அம்சம் என்பதை ரிபு முனிவர் நூற்றுக்கணக்கான பாடல்களில் சத்தியம் செய்து கூறியுள்ளார்: -
அகில பரிபூரணமாம் சிவன்தன் ஆணை
அறைகின்றேன் ஐயமில்லை; ஐயமில்லை
சுககனமாம் பரமசிவன் அருளிச் செய்த
சுருதிமுடிப் பொருளினது சுருக்கம் ஈதே! - ரிபுகீதை11:1
சிவபெருமான் ரிபு முனிவருக்கு உபதேசித்த முக்கிய இரகசியங்கள் என்ன?
1.நித்தியமாய் சித்தித்தபிரமம் அல்லால்
நிலையாக என்றும் ஒரு பொருளும் இல்லை;
எத்திறமாய் எவை எவைதான் எங்கே எங்கே
இலங்கினும் அத்திறமான அவை யனைத்தும்
அத்துவைத பூரணமாய் அழியாச் சத்தாய்
ஆன்மாவாய் அமர்ந்த பரப் பிரமமேயாம்;
சத்திய சிற் சுகவடிவாம் சிவன்தன் ஆணை;
சாற்றியது சத்தியமே; சங்கை இல்லை. - ரிபு கீதை 12:39
2.பேதமுறப் பலவிதமாய்ப் பேசி என்ன?
பிரிவற்ற அகண்ட பரப்பிரமம் தானே
மாதவ ! நின் நிசமான சொரூபமாகும்;
மகாதேவன் அருளியவாறு வகுத்துச் சொன்னோம்;
ஈதில் அணுவளவேனும் ஐயமில்லை.
ஈசன் இருபதத் தாணை; இசைத்தது உண்மை;
ஆதலினால் அகம் பிரமம் என்னும் ஞானம்
அடைந்து அதனால் அகண்ட பரப்பிரம மாவாய்.
-ரிபு கீதை 2:30
3.அத்வைத அறிவுருவே பிரமமாகும்
-ரிபு கீதை 1:38
4.ஏக பரிபூரணமாம் அறிவே ஆன்மா
-ரிபு கீதை 1:36
5.ஆன்மாவிற்கு அயலாகப் பிரமமில்லை;
அப்பிரமம் தனக்கு அயலாய் ஆன்மா இல்லை.
-ரிபு கீதை 1:43
6.ஆன்மாவே அயன்முதல் ஐம்மூர்த்தி யாகும்
ஆன்மாவே அருக்கன் முதல் தேவராகும்
-ரிபு கீதை 10:25
7.நிகழும் மகாலிங்க வடிவாக எங்கும்
நிரந்தரமாய் நிறைவுற்ற பரசிவத்தை
அகம் அகம் என்று அநவரதம் பாவிப் போரே
அகமனதின் விகற்பமெலாம் அடைவாய்த் தீர்ந்து
விகலமிலா அகண்ட ஞானம் பெற்று
வேறுபடா மோட்சநிலை பெறுவர் என்றே
அகமருவா ரிபுமுனிவன் நிதாகனுக்கு அங்கு
அகண்ட அர்த்த நிர்ணயமே அருளிச் செய்தான்.
-ரிபு கீதை 32:41
மேற்கண்ட பாடல்களின் பொருளாவது:
1.நிலையானதாய் - அத்வைத பூரணமாய் என்றும் எங்கும் இலங்குவது பரப்பிரமமேயாகும். அதைத் தவிர வேறொன்றும் இல்லை. பரப்பிரமத்தின் மீது ஆணை; சொல்வது சத்தியம்; சந்தேகமே இல்லை.
2.மனிதனுடைய உயிர் பரப்பிரமத்தின் சொரூபமேயாகும் இது, சிவபெருமான் எனக்கு உபதேசித்தது. இதில் அணுவளவும் ஐயமில்லை; ஈசனின் திருவடிகள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்; இது உண்மை.
3.அத்வைத (இரண்டற்ற, ஏகமான) அறிவே பரப்பிரமமாகும்.
4.ஏக பரிபூரணமாகிய பரப்பிரமமே ஆன்மாவாகும்.
5.ஆன்மாவுக்கு அயலாகப் பிரமமில்லை; பிரமத்திற்கு அயலாக ஆன்மா இல்லை.
6.ஆன்மாவே, பிரமன் திருமால், சிவன், மகேஸ்வரன், சதாசிவம் ஆகிய (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) ஐந்தொழில் தெய்வங்களாகும். ஆன்மாவே சூரியன் முதலான தேவர்களாகும்.
7.சிவலிங்க சொரூபமாக எங்கும் நிரந்தரமாய்- நிறைவுற்ற பரப்பிரமமே, நான்-நான் என்று பாவிப்போரே ஞானம் பெற்று மோட்சநிலை எய்துவர்-இவ்வாறு சிவபெருமானிடம் கற்றதை ரிபுமுனிவர் நிதாகமுனிவருக்கு உபதேசித்தார்.
மேற்கண்ட கருப்பொருள்கள் எல்லாம் சிவபெருமானே ரிபு முனிவருக்கு உபதேசித்தவை என்பதால், நம்முடைய சிந்தனைக்கோ அல்லது ஆராய்ச்சிக்கோ இதில் இடமே இல்லை. இதுவரை உலகம் அறிந்திராத இந்த விளக்கங்களைப் பற்றி, சிவபெருமானே கூறும் சான்றைக் கேட்போம்:
சகலவித மறையிலும் நற்சாரம் ஈதே;
சகல மறை முடிவிலும் நற்சாரம் ஈதே;
சகலவித நூல்களிலும் சாரம் ஈதே;
சகல இதிகாசத்தும் சாரம் ஈதே;
சகலவித குருவருளின் சாரம் ஈதே;
சகல செபதபங்களிலும் சாரம் ஈதே;
சகலவித புவனத்தும் சாரம் ஈதே;
சகல பொருட்களிலும் மகா சாரம் ஈதே;
- ரிபு கீதை 44:26
சகலவித செனனத்தின் மோட்சம் ஈதே;
சகலருக்கும் சுலபமதாம் மோட்சம் ஈதே. - ரிபு கீதை 44:27
இப்பாடல்களின்பொருளாவது:
இதுவே சகல வேதங்களின் முடிவு; இதுவே சகல உபநிஷத்துகளின் முடிவு; இதுவே சகல நூல்களின் முடிவு; இதுவே சகல இதிகாசங்களின் முடிவு; இதுவே சகல குருவருளின் முடிவு; இதுவே சகல செப, தவங்களின் முடிவு; இதுவே சகல உலகங்களுக்கும் முடிவு; இதுவே சகல பொருட்களின் முடிவு. இதுவே சகல செனனத்தின் மோட்சம்; இதுவே சகலருக்கும் எளிதான மோட்ச நெறியாகும்.
எண்ணற்ற சித்தர்கள் பல்லாண்டு கால தவத்தின் பயனால் கண்டுணர்ந்து கூறிய விளக்கங்கள் எல்லாம் சில சிவபெருமான் கூறியுள்ள கருப்பொருளோடு அற்புதமாகப் பொருந்தியிருப்பதிலிருந்து, அவர்கள் சிவரகசியம் ஆறாம் அம்சத்தை (ஞானிமார்க்கப் படலத்தை) முன்னரே கற்றுணர்த்துள்ளனர் என்று அறிகிறோம். இதிலிருந்து, சித்தர்களுக்கெல்லாம் ஆதி சித்தராக விளங்கியவர் சிவபெருமானே என்றும், உலக அன்னையாம் உமாதேவியாரே அவருடைய முதன்மைச் சீடர் என்றும் ஆதாரபூர்வமாக அறிகின்றோம். மேலும், சிவபெருமான் 12 படலங்களில் சிவரகசியம் என்ற நூலை உருவாக்கிய காரணத்தால்தான், அகத்தியர், போகர், யூகி முனிவர் ஆகியோர் தாம் உருவாக்கிய பெரு நூல்களை, 12 காண்டங்களில்12,000 பாடல்களைக் கொண்டவையாக அமைத்தனர் என்பது ஞானிகள் கூறும் விளக்கமாகும்.
சிவபெருமானே உபதேசித்தருளிய சிவரகசியம் நூலின் ஆறாம் அம்சமாகிய ரிபு கீதையிலுள்ள மெய்ஞ்ஞானக் கருத்துக்களைத் திரட்டி, "சித்தர் உருவில் சிவபெருமான்" என்ற தலைப்பில் இந்நூல் உருவாகியுள்ளது. இப்பெறற்கரும் பேற்றினை எளியேனுக்களித்த சிவபெருமானுடைய திருவடிகளையும், உலக அன்னையாம் உமாதேவியாரின் திருவடிகளையும் நினைந்து நினைந்து, உணர்ந்து - உணர்ந்து, நெகிழ்ந்து - நெகிழ்ந்து, வணங்கி - வணங்கி நிற்கின்றேன். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எளியேனுக்கு ஞானம் கற்பித்து, என்னை அறிவித்து, எனக்கருள் செய்த குருநாதர் ஆறுமுகம் அய்யா அவர்களை மனம், மொழி, மெய்யால் வணங்குகின்றேன். சிவரகசியம் ஆறாம் அம்சத்தை உலகோர் உய்யும் பொருட்டு உபதேசித்த ரிபு மகாமுனிவரை வணங்குகின்றேன். ரிபு கீதை என்ற பெயரால் தொகுத்தளித்த நிதாக முனிவரையும், சுகப்பிரம ரிஷியையும் வணங்குகின்றேன். இந்நூலைப் பன்னூறாண்டுகளாகப் பாதுகாத்து வைத்த சித்தர்களை வணங்குகின்றேன். தமிழாக்கம் செய்து வைத்த உலகநாத சுவாமிகளையும் வணங்குகின்றேன். இந்த தெய்வீக நூலை ஏற்று, அச்சிட்டு, தமிழ்கூறும் நல்லுலகிற்குப் படைக்கும் வானதி திருநாவுக்கரசு அய்யாஅவர்களையும் வணங்குகின்றேன்.
சித்தர்களைப் பற்றிய நூல்களின் வரிசையில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த “சதுரகிரியில் கோரக்க சித்தர்” என்ற நூலைக் கண்ணுற்ற மலேசியா பல்கலைக்கழகம், 2007ஆம் ஆண்டு மே மாதம் 25, 26, 27 ஆகிய தேதிகளில் கோலாலம்பூரில் நடத்திய உலக சித்தர் நெறி மாநாட்டிற்கு என்னை அழைத்து இரண்டு நாட்கள் உரையாற்றும் வாய்ப்பை அளித்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் என்னுடைய “ஞானக்கனல்" முதலான பல நூல்களையும் எடுத்து வந்து என்னைச் சந்தித்து வாழ்த்தும் கையெழுத்தும் பெற்றுச் சென்றது எனக்குப் பெருவியப்பை அளித்தது.
மலேசிய நாட்டில், சித்தர்களைப் பற்றிய செய்திகள் ஏதும் கிடைக்குமா என்றறிவதற்காக, அறிஞர்களோடு உரையாடினேன்.
ஜாவாவில் அகத்தியருக்குள்ள மிகப் பெரிய கோயிலைப் பற்றியும்,
சீனதேசத்திற்குச் சென்ற போக மகாமுனிவர், "போ-யாங் "என்ற பெயரிலும், “லவோ-ட்சு" என்ற பெயரிலும் இரண்டு முறை கூடுவிட்டுக் கூடுபாய்ந்து பன்னூறாண்டுகள் வாழ்ந்த செய்திகளும் நிழற்படங்களுடன் கிடைத்தன. அவற்றைப் படலம் 3-ல் விளக்கியுள்ளேன்.
மலேசிய நாட்டில் “கடா "என்ற மாநிலத்தில் வசிக்கும் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ். ஜெயபாரதி அவர்களோடு தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைக் கோலாலம்பூர் வாசகர் திரு.சிவபாரதி ஏற்படுத்திக் கொடுத்தார். அவரிடமிருந்தும் இன்னும் சில அறிஞர்களிடமிருந்தும் நான் அறிந்த செய்திகளாவன:
1) ராஜேந்திர சோழன் படை எடுத்துச் சென்று வென்று, “கடாரம் கொண்டான் "என்ற சிறப்புப் பெயர் பெற்ற நாடுதான், தற்போது “கடா" என்ற மாநிலமாக மலேசிய நாட்டில் விளங்குகின்றது. அங்கு மகா மலேயா மலை அல்லது சித்தர் மலை என்ற பெயரில் ஒரு மலை அமைந்துள்ளது.
அதில் அகத்தியர் முதலான எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்தனர். ஆனால், தற்போதுள்ள முஸ்லீம் அரசாங்கம் அந்த மலைக்கருகில் பொதுமக்கள் எவரும் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளது.
2) மெலாகா மாநிலத்தில் கடலுக்குள் இருக்கும் புலவ் பெசார் என்ற தீவில் சில மகான்களின் சமாதிகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.
டாக்டர் ஜெயபாரதி அவர்கள் குறிப்பிட்ட“புலவ் பெசார்" என்ற தீவிற்கு, கோலாலம்பூர் வாசகர்களான சிவபாரதி, அருட்செல்வன், முருகன் ஆகிய மூவரும் 29-5-2007 அன்று என்னை அழைத்துச் சென்றனர். அத்தீவில் நான் தரிசித்த சித்தர்களைய பற்றிய செய்திகளைப் படலம் 3-ல் விளக்கியுள்ளேன்.
சிங்கப்பூரில் வசிக்கும் வாசகர்களான இராமு - ஜெயந்தி, தங்கதுரை - கௌசல்யாதேவி, நாகராஜன், வேல்சாமி, சிவகுமார் ஆகியோர், சிங்கப்பூரில் நடத்தி வரும் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் நான் வந்து உரையாற்ற வேண்டுமென்று அழைத்தனர். அதன் படி 3-6-2007 அன்று பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 9.45 வரை ஆண்களும் பெண்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் என்னோடு கலந்துரையாடலில் பங்கு பெற்றது மறக்க முடியாத அநுபவமாகும். பொதுவாக, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் ஆண்களை விட, பெண்கள் ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை நான் அறிந்தேன்.
சிங்கப்பூரில் சிவகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் வள்ளலார் யூனிவர்சல் மிஷன் டிரஸ்ட் என்ற அமைப்பு திருவருட்பா ஆறு திருமுறைகளிலுமுள்ள 6000 பாடல்களையும் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலியன் ஆகிய மொழிகளில் இணையதளத்தின் மூலம் இலவசமாக வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் ஆறு திருமுறைப் பாடல்களுக்கும் இசை அமைத்து ஒலிகுறுந்தகடுகள் வெளியிடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு, அயல் நாடுகளில் வாழ்கின்ற இளந்தலைமுறையைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள். சித்தர்களின் புகழை உலகெங்கும் பரப்புகின்ற பணியில் ஈடுபட்டிருப்பதைப் பாராட்ட சொற்களே இல்லை.
“சித்தர் உருவில் சிவபெருமான்” என்ற இந்த ஆய்வு நூலை, அகத்திய மாமுனிவர் முதல் இராமலிங்க வள்ளலார் வரையான எல்லா சித்தர்களுடைய திருவடிகளிலும் பணிவோடு சமர்ப்பணம் செய்து வணங்குகின்றேன்.
சிவபெருமான் சித்தராக விளங்கிய செய்தியை “சதுரகிரியில் கோரக்க சித்தர்"என்ற நூலில் பக்கம் 231 - 234 - ல் கோடிட்டுக் காட்டினேன். இப்போது, சிவபெருமான் ஆதி சித்தராக விளங்கி உபதேசித்தருளிய “சிவரகசியம்" என்ற நூலை வாசகர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு, அவர் சித்தராக உலவிய உதயகிரி, மாவூத்து ஆகிய தலங்களை நிழற்படங்களுடன் காண்பித்துவிட்டு, சிவபெருமானின் உபதேசத்தை விரிவாக விளக்கியுள்ளேன்.
குருவே பிரமன்; குருவே திருமால்; குருவே ஈசன்; குருவே பரம்பொருள்; குருவடி சரணம்; குருவடி சரணம்; திருவடி சரணம்; திருவடி சரணம்.
ஓம்சாந்தி, சாந்தி, சாந்தி!
இங்ஙனம்,
பா. கமலக்கண்ணன்,
16, கிழக்குத்தெரு,
பழையசாரம்,
புதுச்சேரி-605013.
0413-2248046; 2671036.
பொருளடக்கம்:
01.இறைவன் அருளிய வேதங்கள்;
02.சிங்கத்தினுள்ளேயே ஒளிரும் சிவலிங்கம்;
03.சித்தர் உருவில் சிவபெருமான்;
04.சிவபெருமான் பேரசுகிறார்;
05.நிதாக முனிவரின் அநுபவங்கள்;
06.சிவரகசியம் இருளில் இருப்பது ஏன்?
07.சிவரகசியத்தை ஏற்போரும் மறுப்போரும்.
முடிவுரை
ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால் 1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
SKU Code | VAN B 495 |
---|---|
Weight in Kg | 0.520000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%