Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சித்தர்களும் முத்திநெறியும் - பா.கமலக்கண்ணன் - Siddhargalum Mukthineriyum - P Kamalakannan - Sidhargalum Muthineriyum - Sidargalum Muthi Neriyum

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 497
Regular Price ₹250.00 Special Price ₹220.00

Save: 30.00 Discount: 12.00%

ஆன்மீகம் நூல். 
 
காகித அட்டை / பேப்பர்பேக்; 
424 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: ஜூன் 2017.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் சித்தர்களும் முக்திநெறியும், பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                     

முன்னுரை:

உலகிலேயே இந்திய நாடு ஞானபூமியாக ஒளிர்கின்றது. வடக்கிலுள்ள இமயமலைச் சாரலிலும், தெற்கிலுள்ள வனங்களிலும் மலைகளிலும் எண்ணற்ற சித்தர்கள் தவம் செய்து வந்தனர். தென்னாட்டில் தவம் செய்த சித்தர்களைப் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய ஒரு நூலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பல்லாண்டு காலமாக எனக்கு இருந்து வந்தது. எனவே, ஏறக்குறைய மூன்றாண்டு காலமாக அந்த முயற்சியில்          ஈடுபட்டேன்.

கடந்த 150 ஆண்டு காலத்தில் சென்னை இரத்தின நாயகர் சன்ஸ், மதுரைஇ.ராம.குருசாமிக் கோனார், சென்னை தாமரை நூலகம் மற்றும் பலரும் வெளியிட்ட சித்தர்களுடைய நூல்களைத் தேடித் திரட்டி அவற்றுள் ஞான மார்க்கம் பற்றிய நூல்களை மட்டும் தேர்வு செய்தேன். அந்த வகையில் 82 சித்தர்கள் அருளிய 425 நூல்களை ஆய்வுசெய்து முக்கியமான ஞானப் பாடல்களைத் தொகுத்தேன்.

என்னுடைய ஆய்வு இவ்வாறு மூன்று பிரிவாக அமைந்துள்ளது.

1.நூல்கள், வரலாறு, ஆசிரமம் ஆகிய மூன்றும் அல்லது நூல்கள் மட்டும் கிடைத்த சித்தர்கள்                                                                82

2.நூல்கள் கிடைக்காது வரலாறு மட்டும் கிடைத்த சித்தர்கள்             4

3.ஆசிரமம் மட்டும் தெரிந்த சித்தர்கள்:                                                 130

                                                                                                                  --------------

மொத்தம்                                                                                                 216

                                                                                                                  --------------    

சித்தர்களின் வரலாறு என்ற பெயரில் பற்பல நூல்களில் கூறப்படும் நம்பமுடியாத கதைகளை ஒதுக்கி விட்டேன்.

"போகர் ஏழாயிரம்" என்ற நூலில் காணப்பெறும் வரலாறுகளை முழுமையாக எடுத்துக்கொண்டேன். அதேபோன்று கோரக்கர் சந்திர ரேகையில் கூறப்பட்டுள்ள செய்திகளையும் முழுமையாக எடுத்துக்கொண்டேன். சதுரகிரி தலபுராணத்தில் காணப்படும் சிற்சில செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டேன்.

18 சித்தர்கள் மனைவி மக்களோடு இல்வாழ்க்கை நடத்தினர் என்று கோரக்கர் கூறும் தகவல்களை ஆங்காங்கே பதிவு செய்துள்ளேன்.

என்னுடைய ஆய்வில் கண்ட விந்தைச் செய்திகளைக் கூறுகின்றேன்; கேளுங்கள்:

1.அகத்திய முனிவர் ஆதியில் பிறந்த உடலோடு நான்கு யுகங்களைக் கடந்து வாழ்கிறார்.

2.காகபுஜண்டர் பிரளய காலங்களில் ஆகாயத்தில் அவிட்ட நட்சத்திரமாக விளங்கி, பின்னர் பூமிக்கு வந்து விடுகிறார்.

3.கமலமுனிவர் நாலாயிரம் ஆண்டுகளாக சீனாவில் இருக்கிறார்.

4.காலாங்கி நாதர் மூவாயிரம் ஆண்டுகளாக சீனாவில் இருக்கிறார்.

5.போகர் ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் இருக்கிறார்.

6.கோரக்கரும் பிரமரிஷியும் சிரஞ்சீவி வரம் பெற்றவர்கள்.

7.பாம்பாட்டிச் சித்தர் விஷத்தை உண்டு வாழ்ந்தார்.

8.யூகி முனிவர், கறுப்புப் காக்கையை வெள்ளையாக மாற்றினார்.

9.அகத்தியரும் தேரையரும் சேர்ந்து திரணாக்கிய முனிவருக்கு கபால அறுவை செய்து மூளையைப் பற்றியிருந்த தேரையை வெளியேற்றினர்.

10.வேத வியாசர், வசிட்ட மகாரிஷி, விசுவாமித்திரர் ஆகியோர் சுருளிமலையில் தங்கி தவம் செய்தனர்.

11.வால்மீகி மகாரிஷி காஞ்சனபர்வதம், மஞ்சமலையில் தவம் செய்தார்.

12.நாரத முனிவர் நீலகிரி சிவிங்கிய பர்வதத்தில் தவம் செய்தார்.

13.இமயகிரிச் சித்தர் கயிலாயத்திலிருந்து சுருளிமலைக்கு வந்து தவம் செய்தார்.

14.திருமாலின் அவதாரம், தன்வந்திரி பகவான்.

15.புலிப்பாணி முனிவர் உணவு உண்ணாமல் உபவாசம் இருந்தவர்.

16.கௌபாலச் சித்தரும் ஜோதிமா முனிவரும் தங்கத்துக்குப் பத்தரை மாத்தைக் கண்டுபிடிக்கும் சாதனத்தை உருவாக்கியவர்கள்.

17.முற்பிறவியில் நடந்தவற்றைக் கூறும் ஆற்றல் பெற்றவர் அறிவானந்த சித்தர்.

18.காலகண்டரிஷி சுற்றிவந்த உலக நாடுகளின் பெயரைக் கூற ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும் முடியாது.

19.சுந்தரானந்தர் விண்ணில் பறக்கும் வித்தையைப் பலருக்கும் கற்பித்தவர்.

20.ஜமதக்கினி முனிவர் சமண மதத்தில் தோன்றியவர்.

கோரக்கர், தமது மலைவாகடம் என்ற நூலில் பற்பல சித்தர்களின் ஆசிரமம் அமைந்த இடங்களை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். ஆகவே அதை ஆதாரமாக எடுத்துக் கொண்டேன்.

என்னுடைய ஆய்விலிருந்து, தென்னாட்டில், தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதியில்தான் சித்தர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கி தவம் செய்தனர் என்று தெரிகிறது. இதற்குக் காரணம் குளிர்ச்சியான காடுகளும் மிதமான தட்பவெப்ப நிலையுமாகும். தமிழ்நாட்டிலுள்ள சதுரகிரியும் சுருளிமலையும் தெய்வாம்சம் பொருந்திய தலங்களாகும். இங்கு நூற்றுக் கணக்கான சித்தர்கள் தங்கி தவம் செய்துள்ளனர். ஆனால், அவர்களுள் ஒரு சிலரைப் பற்றி மட்டுமே ஆதாரபூர்வமான செய்திகள் கிடைக்கின்றன. பெரும்பாலானோரைப் பற்றிய தகவல்கள் தெரியாதது பெருங்குறையாகும்.

சுருளி மலையிலுள்ள கேட்போரை வியக்க வைக்கும் உதக நீரைப் பற்றியும் அதைத் தீண்டிய கொக்கும் மனிதர்களும், கல்லாய் மாறியதைப் பற்றியும் கோரக்கர் மலைவாகடத்தில் கூறியுள்ளபடி பதிவு செய்துள்ளேன்.

நான் திரட்டிய ஞான நூல்களுள் நடராஜப்பெருமான் உமாதேவியாருக்குக் கற்பித்த "சிவரகசியம்" என்னும் பெருநூலின் ஒரு பகுதியையும், ஞானசரநூலையும் முதன்மையாக வைத்தேன். நடராஜப்பெருமானின் ஆணைப்படி பழனி மலையில் இருந்த முருகப்பெருமான் சுப்பிரமணியர் என்ற பெயரில் ஒரு முனிவராக உருவெடுத்து 20 நூல்களை இயற்றி எண்ணற்ற சித்தர்களுக்கு உபதேசித்து ஞான மார்க்கத்தைப் பரப்பினார் என்றறிந்து அவருடைய நூல்களை இரண்டாவது நிலையில் வைத்தேன். அவ்வையார், திலோத்தமையார், ஊர்வசியாள் என்ற மூன்று பெண்பால் சித்தர்களின் நூல்களை மூன்றாவதாக வைத்து, மற்ற சித்தர்களின் ஞானப் பாடல்களைத் தொடர்ந்து வைத்து ஆய்வு செய்து மெய்ஞ்ஞானக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளேன்.

அகத்தியரின் சீடரே, திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் என்று அவர் அருளிய ஞானவெட்டியான் 1500, கற்பம் 300 மற்றும் பல நூல்களிலிருந்தும் ஐயமற அறிந்து இந்நூலில் பதிவு செய்துள்ளேன்.

வழக்குத் தமிழில் பாடிய சித்தர்களுள் சிவவாக்கியர் "தெள்ளுதமிழில் பாடிய கவிவாணர்" என்று போகர் (6:885) பாராட்டியுள்ளார் என்பதை தமிழ் கூறும் நல்லுலகின் பார்வைக்கு வைக்கின்றேன்.

நூற்றுக்கணக்கான சித்தர்களுள் கருவூர்த் தேவர், தஞ்சை ஆலயத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய ராஜராஜ சோழனுக்கு உதவி செய்ததால், அவர் கி.பி.1010ஆம் ஆண்டில் இருந்தவர் என்ற துல்லியமான காலக் கணக்கு கிடைக்கிறது.

இந்த ஆய்வு நூலில் தக்கலை பீர்முகம்மது ஒலியுல்லாஹ், குணங்குடி மஸ்தான், கைவல்ய நவநீதம் அருளிய தாண்டவராய சுவாமிகள், அரசுப் பணியை விடுத்து துறவு பூண்ட தாயுமானார், மற்றும் வானிலிருந்து வருவிக்க உற்ற இராமலிங்கப் பெருமானாரின் நூல்களும் இடம்பெற்றுள்ளன. அத்தனை சித்தர்களும் மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து முத்தி நிலையை அடையும் வழியை ஒருமித்த குரலில் பாடியிருப்பது சிந்தித்தற்குரியதாகும்.

சித்தர்கள், ஞானிகளின் தோற்றத்திற்கு முடிவேயில்லை; தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்பது உண்மையாகும். என்னுடைய குருநாதர் புதுக்கோட்டை ஆறுமுகம் அய்யா அவர்கள், தாம் இருக்குமிடம் தெரியாது ஞானப் பணி செய்தவர்கள். அவருடைய அளப்பருங் கருணையினாலேதான், எளியேன் இந்நூலை உருவாக்க முடிந்தது. ஆகவே எனக்குத் தெரிந்த - தெரியாத எல்லா சித்தர்கள், ஞானிகளின் பாதங்களிலும் இந்நூலை வைத்து வணங்குகின்றேன்.

கைவல்ய நவநீதம் என்ற ஞான நூல் 1854 - ஆம் ஆண்டில் ஜெர்மன் மொழியிலும், 1855ஆம் ஆண்டில் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பிற நாட்டவர்களும் ஆன்மிகத்தை நாடுகின்றனர் என்று அறியலாம்.

இராமலிங்கப் பெருமானார் அருளிய 'நினைந்து நினைந்து' என்னும் தொடக்கமுடைய மரணமிலாப் பெருவாழ்வு என்ற தலைப்பிலுள்ள 28 பாடல்களை நான் 2014ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து www.ramalingaperumanar.com என்ற இணைய தளத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு ஸ்பானிஷ், பல்கேரியன், சீனம், மலாய், சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய ஏழு மொழிகளில் மாற்றம் செய்து மக்கள் கற்கிறார்கள் என்றால், ஞானமார்க்கம் துளிர் விடுகிறது என்று எண்ணி நான் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றேன்.

சுமார் 50 ஆண்டுகாலமாக ஞானமர்க்கத்தில் இருக்கும் எளியேன் கூறும் மெய்ஞ்ஞான உண்மைகள் புதுமையாக இருப்பதாலும், நான் ஓர் எளியவனாக இருக்கும் காரணத்தாலும், என்னுடைய மெய்ஞ்ஞானக் கருத்துக்களை ஏற்பாரில்லை.

சான்றாக, திருவள்ளுவர், அகத்தியரின் சீடர் என்றும், அவர் கரூரில் சாம்ப சதாசிவன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் என்றும் அவருடைய இயற்பெயர் சாம்புவமூர்த்தி என்றும், இன்னும் பல அறிய செய்திகளையும் "சித்தர் நூல்களில் சென்னை வானதி பதிப்பகம் மூலம் 1993ஆம் ஆண்டில் வெளியிட்டேன்; 23 ஆண்டுகள் கழிந்து விட்டன; மூன்றாம் பதிப்போடு நிற்கிறது. மேலும் "சிலப்பதிகாரத் தலைமைப் பொற்கொல்லன் தமிழனல்லன்; ஒரு யவனன்" என்ற ஆய்வு நூலை 2015ஆம் ஆண்டில் வெளியிட்டேன்; வரவேற்பாரில்லை. ஆயினும் "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்னும் நோக்கோடு தொடர்ந்து ஆய்வு செய்து நூல்களை உருவாக்கி இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன்.

இந்த ஆய்வு நூலை உருவாக்கிய பின்னர், போகரும் கோரக்கரும் சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் குறிப்பிட்டுள்ள செய்திகளுக்கு இப்போது ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்று தேடி வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்குமே என்று எண்ணினேன். கோதாவரிக் கரையிலுள்ள ஊர்வசியாள் என்ற பெண்பால் சித்தரின் சமாதி மண்டபத்தையும், சுருளிமலையில் இமயகிரிச் சித்தர் தவம் செய்த கைலாச குகையையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டோம். இறைவனின் கருணையையும், சித்தர் முனிவர்களின் அருளையும் என்னென்பேன் ! என்னென்பேன் ! விந்தை; விந்தை! ஆம்; போகரும் கோரக்கரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய அடையாளங்கள் காலத்தால் அழியவில்லை. தத்ரூபமாக இருக்ககின்றன. ஆம்; நானும் நீங்களும் காணுமாறு பூமியில் இன்றும் இருக்கின்றன! கரமலர் மொட்டித்து, இருதயம் மலர, கண்களிகூர, நூண்துளி அரும்ப, போகரையும் கோரக்கரையும் வணங்கி நிற்கின்றேன்! வாருங்கள்! அத்தியாயம் 44க்கு! பாருங்கள்; படியுங்கள்!

இந்த ஆய்வு நூலை ஞானமர்க்கத்தின் அதிபதியாக விளங்கி "ஞான சரநூல்", "சிவரகசியம்" முதலான நூல்களை உலகிற்குத் தந்தருளிய நடராஜப் பெருமானின் திருவடிகளிலும், சுப்பிரமணியர் என்ற பெயரில் தவக்கோலம் பூண்டு ஞானம் 500 முதலான பல நூல்களை உருவாக்கி, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல்லோருக்கும் ஞானம் கற்பித்து வரும் முருகப் பெருமானுடைய திருவடிகளிலும் சமர்ப்பித்து வணங்குகின்றேன்.

இந்த நூலைக் கண்ணுற்று அன்போடு அணிந்துரை வழங்கியுள்ள பல்பொருள் எழுத்தாளப் பெருந்தகையும் ஆன்மிக எழுத்துச் சுடரான  திரு.பாலகுமாரன் அவர்களுக்கும் மற்றும் வாழ்த்துரை வழங்கியுள்ள பிரபல எழுத்தாளர், பேச்சாளர் திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும் உரித்தாகும்.

இந்நூலை வழக்கம்போல் அன்புடனும் ஆர்வத்துடனும் வெளியிடும் வானதி அன்பார் முனைவர் டி.ஆர்.ராமநாதன் செட்டியார் அவர்களுக்கு என்னுடைய நன்றியும் வணக்கமும்.

இங்ஙனம்,

பா.கமலக்கண்ணன்.

பொருளடக்கம்: 

01.இந்திய நாடு ஞானபூமியாக விளங்கக் காரணம்;   

02.சிவபெருமான் அருளிய ஞான நூல்கள்;  

03.சித்தர்களைப் பற்றிய செய்திகளும், அவர்கள் ஆக்கிய நூல்களும்; 

04.சித்தர் உருவில் சுப்பிரமணியர்;  

05.மனைவியால் பெருமை பெற்ற மகரிஷி;  

06.பெண்பால் சித்தர்கள் மூவர்;  

07.ஆதியில் பிறந்த உடல் அழியாதிருக்கும் அகத்தியர்; 

08.அவிட்ட நட்சத்திரமாகி விளங்கிய (தவசி என்ற) காக புஜண்டர்; 

09.நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேல் சீனாவில் இருக்கும் கமலமுனிவர்; 

10.மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் சீனாவில் இருக்கும் காலாங்கிநாதர்; 

11. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் சீனாவில் இருக்கும் போகர்; 

12.திருமாலின் அவதாரமான தன்வந்திரி பகவான்; 

13.சுருளிமலைக் குகையில் தவம் செய்த வேத வியாசர்; 

14.இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர்; 

15.கயிலாயத்திலிருந்து சுருளிமலைக்கு வந்த இமயகிரிச் சித்தர்; 

16.வேதம் தமிழ்செய்த வித்தகர் திருமூலர்!

17.சிரஞ்சீவி வரம்பெற்ற கோரக்கர்; 

18.கோரக்கரோடு சிரஞ்சீவி வரம்பெற்ற பிரம ரிஷி;

19.அகத்தியரின் சீடர் திருவள்ளுவர் 

20.அகத்தியரின் முதன்மைச் சீடர் புலத்தியர் 

21.போகரின் முதன்மைச் சீடர் புலிப்பாணி

22.கபால அறுவை சிகிச்சை செய்த தேரையர்!

23.பாம்பின் விஷத்தை உண்டு வாழ்ந்த பாம்பாட்டிச் சித்தர்!

24.மண்ணைக் கிள்ளிக் கொடுத்து வியாதிகளைப் போக்கிய புண்ணாக்குச் சித்தர்; 

25.சாத்திரங்களிலும் சித்துகளிலும் தன்னிகரற்ற டமரானந்தர்; 

26.திருவள்ளுவரின் சீடர் கொங்கணச் சித்தர்; 

27.தங்கத்துக்குப் பத்தரை மாற்று கண்டுபிடித்த இரண்டு சித்தர்கள்; 

28.முற்பிறவியில் நடந்தவற்றைக் கூறும் ஆற்றல் பெற்ற அறிவானந்த சித்தர்; 

29.காக்கையின் கருமை நிறத்தை வெண்மையாக மாற்றிய யூகி முனிவர்

30.துள்ளும் தமிழில் ஞானம் பாடிய சிவவாக்கியர்; 

31.சமண மதத்தில் தோன்றிய ஜமதக்கினி முனிவர்; 

32.சிங்கள வகுப்பில் தோன்றிய சட்டை நாதர்; 

33.தஞ்சை, சிதம்பரம் ஆலயங்களோடு தொடர்புடைய கருவூரார்; 

34.இராமதேவர் - யாகோபு சித்தர்; 

35.குருராஜரிஷி என்ற வேதமூர்த்தி;  

36.பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்;  

37.கைவல்ய நவநீதம் அருளிய தாண்டவராய சுவாமிகள்; 

38.அரசுப் பணியை விடுத்து துறவியான தாயுமானார்;

39.இஸ்லாம் மார்க்கத்தில் தோன்றி ஞான நூல்கள் அருளிய இருவர்;

40.வானிலிருந்து வருவிக்க உற்ற இராமலிங்கர் 

41.அறிய ஞான விளக்கம் அடங்கிய 45 சித்தர்களின் நூல்களைக் காணீர்!

42.நூல்களும் ஆசிரமங்களும் அறிய இயலாத சித்தர்கள் நால்வரின் வரலாறு கேளீர்!

43.வரலாறும் நூல்களும் கிடைக்கப்பெறாத 130 சித்தர்களின் ஆசிரமங்களைக் காணீர்!

44.காலத்தால் அழியாத வரலாற்றுச் சுவடுகள்; 

45.சித்தர்கள் வாக்கைச் சிந்திப்போம். 

இந்த நூலுக்காக ஆய்வு செய்த சித்தர்களுடைய நூல்களின் எண்ணிக்கை.

ஆய்வுக்குட்பட்ட சித்தர்களின் எண்ணிக்கை.

ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.

More Information
SKU Code VAN B 497
Weight in Kg 0.630000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:சித்தர்களும் முத்திநெறியும் - பா.கமலக்கண்ணன் - Siddhargalum Mukthineriyum - P Kamalakannan - Sidhargalum Muthineriyum - Sidargalum Muthi Neriyum

Similar Category Products





Other Books by பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan