Details
குமர குருபரர் சுவாமிகள் அவரின் கதை.
"நம் மீனாட்சியை ஒவ்வொரு மனிதனும் நெஞ்சில் வந்து புகுமாறு அழைக்க வேண்டும். ஒரு தாய் ஒரு குழந்தையை எத்தனை வாஞ்சையோடு அழைப்பாளோ ... எத்தனை உரிமையோடு அழைப்பாளோ... எப்படி அலுக்காமல் அழைப்பாளோ... அத்தனை அக்கறையோடு இறையை நாம் அழைக்க வேண்டும். குமரகுருபரர் சொன்னது மன்னருக்குப் புரிந்தது.
"இந்தத் தூணில் இறைவன் இருக்கிறானா என்று இரணியன் இழிவு செய்தான். ஒரு சிறு பாலகனிடம் இடுப்பில் கைவைத்து கர்ஜித்தான். பாலகன் இருக்கிறான் என்று சொன்னதும் இல்லை என்று தூணை உடைத்தான். அணுவைப் பிளந்தது போல செக்கச் செவேலென்று சிங்கம் வெளிவந்தது."
புத்தக விமர்சனம்:
"சிம்மாசனத்தில், கவிராயர், அந்தணரிடம் புரியும் விவாதம் கண்டு மலைத்துப் போனேன். இது வக்காலத்து அல்ல. இது உண்மை. எனவே மூடிவைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் ஜாதி, மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உண்மை பேச வேண்டும் என்றால்... பாலகுமாரன், அது அத்தனையையும் கடந்தவர்களால் மட்டுமே செய்யமுடியும். அது உன்னால் முடிந்திருக்கிறது. உனது தாடியும், திருநீறும், சந்தன குங்குமப் பொட்டும் உருவகப்படுத்தும் பாலகுமாரன் வேறு.
உன்னுள் இருக்கும் பாலகுமாரன் வேறு என்பது புலப்படுகிறது. உன் ஆணித்தரமான எழுத்தில் தோற்றத்தைக் கண்டு வணங்குபவர்கள், தோற்றத்தை வைத்து உன்னை வெறுப்பவர்கள் இரு சாராரையும் தள்ளி வைத்து, நீ - நீயாகவே உலவி வருவது உன் கண்களை உற்று நோக்குவோருக்குப் புரியும்.
அது சரி, பாலகுமாரன் அவர்களுக்கு என ஆரம்பித்த கடிதம் எப்போது நீ என்று ஒருமைக்குத் தாவியது?
இந்த வகை ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நட்பு தந்த பலம் அது. அதற்கு ஒருமையும், பன்மையும் ஒன்றுதான்.
காதல் - காமம் - நட்பு இவை புரியாத அல்லது தெரியாத மனிதர்கள் (மனிதர்கள் எனச் சொல்லலாமா? ) பலர் இருக்கிறார்கள். அவர்களுக்காக, நட்பைப் பற்றி ஒரு புதினம் எழுதேன்.
அன்புடன்
மலர்க்கொடி சுகுமாரன்.
பி.கு.: நல்ல நட்பு என்று நான் எழுதவில்லை. காரணம், நல்லது அல்லாதது எப்படி நட்பாக இருக்க முடியும்?