Details
இலக்கியத் திறனாய்வு நூல். பதிப்புரை: மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமனன்று; உயரமன்று. அறிவு ஒன்றேதான் மனிதனை உயர்த்தும். அறிவுடையாரே எல்லாம் உடையார் என்கிறார் திருவள்ளுவர்.
இன்று மக்களிடையே பண ஆசையும், பதவி ஆசையும், செல்வாக்கு பெரும் ஆசையும், உழைக்காமல் எளிதில் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் பெருகி நிற்கின்றன. மாணவர்கள் படிக்காமலேயே மதிப்பெண்கள் பெற வேண்டுமென்று நினைக்கிறார்கள். கடமைகளைச் செம்மையாகச் செய்யாமல் உரிமைகளைக் கோருபவர்களையும் காண்கிறோம்.
நீதியைக் கடைபிடிக்காமல் அநீதிக்கு துணைபோகிற மனிதர்களையும் காண்கிறோம். இன்றைய சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் ஊழலும் வன்முறைகளும் பலாத்காரமும் பெருகி நாட்டை, அவை உலுக்குகின்றன. நாடு இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்னாவது? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேற்கண்ட குறைகளையெல்லாம் களையவும், மக்கள் நல்லறிவு பெறவும் நமக்குக் கிடைத்த அறிவுத் திறவுகோல் திருக்குறள் ஒன்றுதான்.
திருக்குறளைப் புரிந்து கொண்டு படித்தால், மக்கள் தெளிந்த சிந்தனையடைவார்கள்; இன்றைய அவல நிலை போகும்; நாடு சுபிட்சம் பெரும் என்ற நம்பிக்கைகொண்டு, டாக்டர் சுப.அண்ணாமலை அவர்கள் "திருக்குறள் சிந்தனை" எனும் தலைப்பில் சிறந்த சிந்தனைக் களஞ்சியமாக இந்நூலை அளித்துள்ளார்கள்.
ஆசிரியர் : சுப.அண்ணாமலை அவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 1929-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் பிறந்தார். அவர் சன்மார்க்க சீலராக தன் வாழ்க்கையை வாழ்ந்தார். திருக்குறள் இந்திய நாட்டின் தேசிய நூலாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பல்வேறு களங்களில் வாதிட்டுள்ளார். மொழியால், நடையால், கருத்தால், சமுதாய நோக்கினால், பொதுமறை என்னும் தன்மையால் திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முழுதும் தகுதி உடையது என்று நிறுவி காட்டியுள்ளார். அவர் தமிழக அரசின் சார்பில் 1981-ம் ஆண்டின் சிறந்த முதல்வர் விருது; ராஜாசர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவு 1989-ம் ஆண்டு விருதில் தமிழ் அறிஞர் விருது; திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தின் 1989-ம் ஆண்டின் புலவர் மா மணி விருது; மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் 1999-ம் ஆண்டின் செம்மல் விருது; மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட 2002-ம் ஆண்டின் தமிழ்ப்பேரவைச் செம்மல் விருது என்று பல விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதல்வராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று B.O.L (Hons) பட்டம் பெற்றார். 1962-ம் ஆண்டு எம் லிட் பட்டமும் 1968-ல் டாக்டர் பட்டமும் பெற்றார். 1981-ம் ஆண்டுக்கு உரிய திறந்த கல்லூரி முதல்வருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார். வள்ளலார் பற்றிய இவரது நூலை பாரதீய வித்யா பவன் வெளியிட்டது. இவர் திருமூலரின் 'திருமந்திரத்திற்கு' மூல பட ஆய்வுப் பதிப்பை, சென்னை கலாக்ஷேத்ரா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.