Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

உடையார் மூன்றாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 3 -Balakumaran - Udayaar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Hardbound

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 101
Regular Price ₹525.00 Special Price ₹500.00

Save: 25.00 Discount: 4.76%

சோழர் வரலாறு சரித்திர நாவல்.
மாமன்னன் இராஜராஜ சோழனின் வரலாறு.
Udayar - Part III - History of Cholas.
 
சரித்திர புதினம்.
கடின அட்டை/ ஹார்ட்பௌண்ட்
512 பக்கங்கள்;  
முதல் பதிப்பு: டிசம்பர், 2004
இருபத்தி ஐந்தாம் பதிப்பு: டிசம்பர், 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. 
 
தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.
 
ஆசிரியர் முன்னுரை: 
                                         யோகிராம்சுரத்குமார் 
 
இனிய ஸ்நேகிதங்களுக்கு வணக்கம், 
 
வாழிய நலம், 
 
ஒரு வாரப்பத்திரிகையில் தொடராக வந்த அத்தியாயங்கள் தொகுக்கப்பட்டு முதல் இரண்டு பாகங்களாக வெளிவர, உடையார் கதை முடியாத இந்த நிலையில் மீதிப் பகுதியை எப்படி எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது நான் வழக்கமாக மாதாமாதம் எழுதிவரும் பல்சுவை நாவலில் தொடராக வெளியிடலாம் என்ற யோசனை எழுந்தது. அதன் ஆசிரியர் பொன் சந்திரசேகர் அவர்கள் இதை  அவ்விதம் வெளியிடுவதற்கு ஆர்வமாக முன்வந்தார். நான்கு மாத நாவல்கள் கொண்டது ஒரு பாகம் என்று கணக்குப் போட்டு அவ்விதமாகவே எழுதப்பட்டது. பாகம் பிரிந்தது புத்தகத்தின் பைண்டிங் வசதியை கருதித்தானே தவிர, புத்தகத்தை கையாளுவதற்கு வசதியாக இருக்கவேண்டுமே என்ற நினைப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. வாராவாரம் எழுதுகின்ற சௌகரியம் இல்லையே இது எப்படி ஒட்டுமொத்தமாய் எழுதமுடியும். அந்த வலிவு நம்மிடம் உண்டா என்று மெல்லிய சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், நான் தொடர்ந்து எழுதப்போகிறேன் என்று கேள்விப்பட்டதும் என்னுடைய பல நண்பர்கள் மிகவும் உற்சாகப்படுத்தினார்கள். எழுதிவிடலாம். கதையை எங்கு ஆரம்பிப்பது. என்னவெல்லாம் சேர்ப்பது. மூன்றாம் பாகத்தில் வரவேண்டிய விஷயங்கள் என்ன. எங்கே முடிக்க வேண்டும் என்று விவாதித்தார்கள். நானும் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனம் முழுவதும் உடையாரில் லயித்து எப்படி இந்த நாவலை கொண்டு செல்ல வேண்டுமென்ற திட்டத்தோடேயே உழன்றுகிடந்து என் குருநாதர் யோகிராம் சரத்குமார் அவர்களை நெஞ்சில் நிறுத்தி எழுதத் துவங்கினேன்.
 
ஒரு நாவலாசிரியன் ஒரு சரித்திரக்கதையை தன்னுடைய கற்பனைக் கேற்றவாறு அழைத்துச் செல்ல முடியுமென்றாலும் நான் அவ்விதம் செய்ய விரும்பவில்லை. சரித்திரத்தை ஒட்டியே எழுத விரும்பினேன். கல்வெட்டில் இடம்பெறாத பெயர்களை கொண்டுவந்து அவர்களை முக்கியப்பாத்திரங்களாக அமைத்து சோழ சரித்திரத்தில் திருப்பு முனையாக அவர்கள் இருந்தார்கள் என்று எழுதுவதற்கு எனக்கு விருப்பமில்லை.
 
உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவர் காலத்தில் அவருக்கு அண்மையில் இருந்தவர்களை மையமாக வைத்து உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவருடைய கதையைச் சொல்ல வேண்டுமென்பது தான் என் விருப்பமாக இருந்தது. அருகிலுள்ளவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள். ஏன் முக்கியமானவர்கள் என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. பட்டீஸ்வரத்தின் மேற்குபுறத்தில் இருக்கின்ற உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவருக்கு மனைவியாக இருந்த பழுவூர் நக்கன் பஞ்சவன்மாதேவி பெயரில் எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலுக்கு பலமுறை சென்ற போதும் அந்தக் கோயில் சிதிலமடைந்து கிடந்ததை பார்க்கும்போதும் உள்ளே ஒரு குமுறல் ஏற்படும்.
 
பள்ளிப்படை கோயில் என்று எழுப்பவேண்டிய காரணம் என்ன, அவள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவளா. அப்படியொரு பள்ளிப்படை கோயில் எழுப்பியது ராஜராஜர் மகன் ராஜேந்திரன். ராஜேந்திரன் தன் சிற்றன்னைக்கு ஏன் கோயில் எழுப்ப வேண்டும்.
 
இளவரசன் ராஜேந்திரன் வானவன்மாதேவிக்குப் பிறந்தவன். வானவன்மாதேவி பட்டமகிஷியா.
 
இல்லை தந்தி சக்தி விடங்கி என்பவர்தான், பட்டமகிஷி.தந்தி சக்தி விடங்கிக்கு பள்ளிப்படை கோயில் உண்டா.
 
தெரியாது.
 
ராஜேந்திரனுடைய தாயான வானதி என்கிற வானவன்மாதேவிக்கு கோயில் உண்டா.
 
இருந்ததாக எந்தவித கல்வெட்டு ஆதாரமும் இல்லை. ஆனால் பஞ்சவன்மாதேவிக்கு மிக மிக அழகான மிக அற்புதமான கோயில் இருக்கிறது. அதுவும் இடிந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஐம்பது வருடத்தில் அது மண்மேடிட்டுவிடும். விரைவில் அதை சீர்செய்ய வேண்டும். விரைவில் அக்கோயிலை சுற்றி சுற்றி வரும்போது தான் பஞ்சவன்மாதேவியை என் கதாநாயகியாக நான் தீர்மானித்தேன்.
 
உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவருடைய கதை சொல்வதற்கு இந்தப் பெண்மணிதான் ஏற்றவள் என்று உள்ளே முடிவு செய்தேன்.
 
சரித்திரக் கட்டுரைகள் எழுதுவது வேறுவிதம். அங்கு தெரிந்ததை மட்டுமே பேச வேண்டும். தெரியாததை தெரியாதது என்று சொல்ல வேண்டும். இப்படி இருக்கக் கூடும் என்று யூகம்கூட தவறு என்று தான் சொல்வார்கள். ஆனால் இப்படி இருக்கலாம் என்ற யூகத்தை ஒரு சரித்திர ஆசிரியன் செய்யலாம். பஞ்சவன்மாதேவிதான் சோழ சரித்திரத்தின் ஆதாரமாக இருந்திருக்கக்கூடும் என்று அந்த பள்ளிப்படைக் கோயிலைப் பார்த்து அதன் கல்வெட்டுகளைப் புரிந்து கொண்டு உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் காலத்தில் இவள் முதன்மை பொருந்தியவளாக இருக்க வேண்டும். முக்கியமானவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. இது முற்றிலும் உண்மை என்று ஆதரிக்கவும் முடியாது. இல்லை என்று மறுக்கவும் முடியாது. ஆனால் பஞ்சவன்மாதேவிக்கு பள்ளிப்படைக் கோயில் கட்டியிருந்தாலும், அந்தப் பள்ளிப்படை கோயில் நிறுவப்பட்ட இடமும் பஞ்சவன்மாதேவி கொடுத்த பல கொடைகளும், அவர்களைப்பற்றிப் பேசுகின்ற கல்வெட்டுக்கள் வெவ்வேறு ஊர்களில் இருத்தலையும், தஞ்சாவூர் கோயிலுக்குள் இருக்கின்ற ஓவியத்தில் நிற்கின்ற ராஜராஜர் அவருக்கு அருகே மூன்று தேவியர் சித்திரத்தையும் உற்றுப்பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வுகளை ஒன்று கூட்டி இந்தக்கதையை நகர்த்த துவங்கினேன்.
 
கி.பி. ஆயிரமாவது வருஷத்து சோழ கலாச்சாரத்தை ஒட்டிய அவர்கள் வாழ்ந்த விதத்தை ஒட்டிய வண்ணமே இந்தக்கதை எழுதப்பட்டிருக்கிறது. முடிந்தவரையில் சரித்திர நிகழ்ச்சியை வைத்துக்கொண்டே இந்தக்கதையை பின்னியிருக்கிறேன். கோயில் கட்டுமானத்தை திரும்பத்திரும்ப பார்த்து மனதில் இருத்திக் கொள்ளத்தான் மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.
 
சரித்திர ஆராய்ச்சியாளர் தொல்பொருள் இலாகாவின் முன்னாள் இயக்குனர். டாக்டர் திரு.நாகசாமி அவர்களின் கட்டுரைகள் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தன. வரலாறு என்ற மிக அரிதான, உயர்வான காலாண்டு சரித்திர சஞ்சிகையை நடத்திவரும் டாக்டர் கலைக்கோவன் அவர்கள் கொடுத்த உற்சாகம் என்னை வேகப்படுத்தியது. ஒவ்வொரு முறை தஞ்சாவூர் செல்லும் போதும் டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களை சந்திக்காமல் நான் வருவதில்லை. அவரோடு ஊர் சுற்றாமல் சென்னை திரும்புவதில்லை.
 
"நாங்க எழுதினா எல்லோரும் படிக்கமாட்டாங்க. நீங்க எழுதினா நிறையபேர் படிப்பாங்க. பெரிய கோயில் பற்றியும் ராஜராஜசோழனைப் நிச்சயமாக எழுதுங்க ஸார். எல்லா ஜனங்களுக்கும் அந்தச் செய்தி போகணும். இதுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்யத் தயாரா இருக்கேன். எப்போ கூப்பிட்டாலும் நான் வரத்துக்கு தயாரா இருக்கேன்" ஏன்னு என்னை உற்சாகமூடிய பெரிய மனிதர் அவர். அவ்வண்ணமே செய்தவரும் கூட. 
 
பட்டீஸ்வரத்திற்கு மேற்கே ஒரு மசூதிக்கு அருகில் இருக்கின்ற ராமனாதன் கோயில் என்று இப்பொழுது அழைக்கப்படும் அந்த பஞ்சவன்மாதேவீஸ்வரத்திற்கு பலமுறை அவர் அழைத்துப் போய் காட்டியிருக்கிறார். அந்த ஊர் மக்களெல்லாம் எனக்கு நண்பர்களாகிவிட்டார்கள். பஞ்சவன்மாதேவீஸ்வரத்தில் நிறுவப்பட்டிருக்கிற லிங்கத்திற்கு புதுத்துணி கொடுத்தும், கங்கை நீரால் அபிஷேகம் செய்தும், விளக்கெரிய எண்ணெய் கொடுத்தும், நானும் என்னுடைய உற்ற நண்பர்களும் அந்தக்கோயிலை கொண்டாடியிருக்கிறோம்.
 
என்னுடைய நண்பர் சுந்தர் பரத்வாஜ் சென்னை மத்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தில் கல்வெட்டு ஆய்வாளராக இருக்கின்ற திரு.இராஜவேலு, ஜோதிடரும் நண்பருமான ஜோதிடரத்னா திரு.கே.பி.வித்யாதரன், தன் வசமிருந்த பல ஆதாரங்களை எனக்கு கொடுத்து உதவிய அரியலூர் கலைக்கல்லூரியின் சரித்திரப்பேராசிரியர் டாக்டர் தியாகராஜன் ஆகியோரின் அன்பால் இந்த நாவல் மிகச் செம்மையாக வளர்ந்து வந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் சமூகத்தின் மிகப் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் ஆதாரங்களை இவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளலாமே தவிர நாவல் எப்படி எழுதுவது என்பது இவர்களோடு அமர்ந்து விவாதித்தல் என்பது முடியாதகாரியம்.
 
ஆனால் நாவலை எப்படி எழுதப்போகிறேன் என்று நான் உரத்து விவாதிக்கத்தான் வேண்டும். எப்பொழுதுமே எனக்கு விவாதத்திற்கான உற்ற தனித்த ஆர்வமிக்க நண்பர்கள் உண்டு.
 
தென்னிந்திய ரயில்வேயில் வேலைசெய்யும் சம்பத் லக்ஷ்மியும், குடும்பத்தலைவியான பாக்யலக்ஷ்மி சேகரும், இரண்டு வளர்ந்த குழந்தைகளுக்கு தாயான இந்திரா பாஸ்கரும், கல்லூரிப்பேராசிரியை ஜெயனப்புக்கனி அவர்களிடமும் இன்னது எழுதப்போகிறேன். இன்ன விதமாகப் பேசப்போகிறேன் என்று உரத்துச் சொல்ல அவர்கள் உற்றுக் கவனித்து அபிப்ராயம் சொல்வார்கள்.
 
எழுதுவது போல கதை சொல்லல் எனக்கு கைவந்த கலை. நண்பர்களிடையே சொல்லும் போது எப்படி எழுத வேண்டும் என்ற தீர்மானமும் என்னுள் மிகத்திடமாக எழும்புகிறது. பிறகு ஒலிநாடாவில் கதை சொல்ல அதை என் உதவியாளர் எழுதிக் கொடுத்துவிடுவார். பிறகு அது பல்சுவைநாவலுக்கு அச்சுக்குப்போகும். அச்சடித்த காகிதம் திருத்தப்பட்டு வர அதையும் என் நண்பர்கள் படிப்பார்கள். அபிப்ராயம் சொல்வார்கள். அதில் பிழைத்திருத்தம் செய்து அதில் வரும் சந்தேகங்களை தெளிவாக்கி வாக்கியங்களை மாற்றியமைக்கச் சொல்கின்ற உதவியை என் உடன் பிறந்த சகோதரி சரித்திரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற ஆசிரியை சிந்தாரவி திறம்படச் செய்வார். இவர்கள் உதவி இல்லையெனில் என் பணி மிகமிகக் கடினமாக மாறியிருக்கும். இதை எளிதாக்க இவர்கள் அன்பு உதவி செய்தது.
 
சிவகாசியிலுள்ள எனது நண்பர், திரு.வேல் சங்கர், கோவை தொழிலதிபர் திரு.ரவிச்சந்திரன், நெடுங்காடி வங்கியில் அதிகாரியாகப் பணிபுரியும் திரு.மோகன் அவர் நண்பர் நெடுங்காடி வங்கி அதிகாரி திரு.கிருஷ்ணன், டாட்டா கன்ஸல்டன்ஸி அதிகாரி திரு.சுசீந்திரன் போன்றவர்கள் என் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். இவர்களுக்கெல்லாம் நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களோ உங்கள் நட்பு பெரிய கொடுப்பினை என்று பதிலுக்கு நன்றி தெரிவிப்பார்கள். உண்மையான ஸ்நேகிதம் கொடுக்கும் ஆரோக்கியம் போல வளமான விஷயம் உலகத்தில் எதுவும் இல்லை. நான் நல்லநட்பை அனுபவித்திருக்கிறேன். அகமகிழ்ந்திருக்கிறேன். தஞ்சை பெரியகோயிலில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளும, தொல்பொருள் துறை அதிகாரிகளும் என்மீது மிகுந்த அக்கறையும் கொண்டு நான் கேட்டபோதெல்லாம் விமானத்தின் மேல்பகுதியை திறந்துவிட்டு பலமுறை அந்தச்சிற்பங்களையும், கட்டுமானத்தையும் ஓவியங்களும் பார்க்க அனுமதித்திருக்கிறார்கள். மணிக்கணக்கில் அந்த ஓவியங்களைப் பார்த்த உணர்வு தான் என்னை இந்த நாவல் களத்தில் ஆழ்ந்து கிடக்க வைக்கிறது. 
 
நான்காவது பாகமும் எழுதி முடித்துவிட்டேன். ஐந்தாவது பாகம் செய்து கொண்டிருக்கிறேன். ஐந்தாவது பாகம்தான் உடையார் நாவலின் கடைசிப்பாகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எழுத எழுததான் தெரியவரும். இந்த நாவல் எழுதும் பொது உண்டான சந்தோஷம் மிகப்பெரியது. அதிலேயே ஆழ்ந்து கிடப்பது மிகச் சுகமாக இருந்தது. நடுவே ஒரு சமூக நாவல் எழுத முற்பட்டபோது மிகப்பெரிய அவஸ்தைக்கு ஆளானேன். உடையார் நாவலை மறக்க முடியாமல். சமூக நாவலில் முன்னேற முடியாமல் ஒரு தேக்கநிலை வந்தது. மனம் அத்தனை வேகமாக, அத்தனை ஆழமாக இந்த சோழர் கால சரித்திரத்தோடு பின்னிக் கிடந்தது.
 
நாவலாசிரியனாக இருப்பது ஒரு பணம் கொழிக்கும் தொழில் அல்ல. அதே சமயம். வருமானம் இல்லாமலும் இல்லை. இந்த வருமானத்தின் பெரும்பகுதியை இதற்குண்டான பயணத்திற்காகவே நான் அதிகம் செலவு செய்தேன். என் சத்குரு திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அருளால் இந்தச் செலவை செவ்வனே என்னால் செய்ய முடிந்தது. மிக உபயோகமாக செலவழிக்க முடிந்தது. 
 
இந்த நாவலில் பல இடங்கள் என்னை மீறியும் நான் சிறப்பாக எழுதியிருப்பது எனக்குத்தெரியும். வெறும் புத்தியின் வரைபடத்தால் மட்டுமில்லாது கதைத் தந்திரங்களின் கணக்கால் மட்டுமில்லாது வேறு ஒரு தெய்வீக உந்துதலிலும் இந்த நாவல் எழுதப்பட்டது. இதை எனக்கு நெருங்கியிருந்தவர்கள் நன்கு உணர்ந்தார்கள்.
 
 
முதல் பாகம் விரைவில் விற்றுப்போய்விட்டதாக திருமகள் நிலையத்தார் சந்தோஷமாகச் சொன்னார்கள். அவர்களுடைய ஈடுபாடும் அக்கறையும் தான் இந்த நாவல் நல்லதொரு புத்தகமாக உருவெடுத்திருக்கிறது.
 
சிவா கிராபிக்ஸ் மணிகண்டன் சகோதரர்கள் பிழைத் திருத்தங்களை சீராகச் செய்து நல்ல முறையில் லே-அவுட் செய்து புத்தகத்திற்கு பொலிவூட்டினார்கள்.
 
உங்களைப் போன்ற வாசகர்களால் உடையாருக்குக் கிடைத்த பாராட்டுக்கள் என்னை இதில் ஈடுபட பெரிதும் உதவி செய்தன. கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், நேரில் சந்தித்தபோதும், கல்யாண வீட்டில் அமர்ந்திருந்த போதும், காவிரிக்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் போதும், கோயில் கர்ப்பக்கிரகத்திலும் உணவுக் கூடத்தில் கையலம்பும் போதும் ஓடிவந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த வாசகர் நெஞ்சங்களால் இந்த நாவல் சாத்தியமாயிற்று. எழுத எழுத என் நிறைவு கூடிக்கொண்டே போனது. நான் கதை எழுதத் துவங்கியதே பல நாவல்கள் எழுதியதே இந்த நாவல் எழுதத்தானோ என்ற எண்ணம் எனக்குள் வருகிறது. நான் வாழ்ந்த வாழ்க்கைப்பற்றி ஒரு திருப்தி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு உடையார் என்கிற இந்த நாவலும் காரணம்.
 
கமலாவும், சாந்தாவும், ஸ்ரீ கௌரியும், சூர்யாவும் நிறைந்த என் குடும்பம் என் தினசரி செயல்களுக்கு பக்கபலமாக இல்லையெனில் என்னால் எழுத்தாளனாக பரிமளித்திருக்க முடியாது. என்னை கண்ணின் இமைபோல் என் குடும்பம் காத்து வருகிறது. அவர்களுக்கும் நான் தீர்க்க முடியாத நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
 
பல்வேறு குழப்பமான சிந்தனைக்குள் கிடந்த என்னை வெளியில் எடுத்து தெளிவாய் சிந்திக்கவும், செயல்படவும், நிதானமாய் ஆழ அமிழ்ந்திருக்கரும், கடவுள் நோக்கி கவனம் திருப்பவும், அதில் ல்;லயித்துக் கிடைக்கவும், அந்த தன்மையோடே பிரச்சினையை அணுகவும் சொல்லாமல் சொல்லிக்கொடுத்த என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகிராம் சுரத்குமார் பாதங்களில் சிரம்பணிந்து அவரை நெஞ்சு நிறைய நினைத்துக் கொள்கிறேன். அது ஞானசூரியன். பரப்பிரம்மம். என்னையும், என் நண்பர்களையும், என் வாசகர்களையும் ஆசிர்வதிக்குமாறு அவரைப் பணிக்கிறேன் தொடர்ந்து மற்ற பாகங்கள் படித்துவிட்டு உங்கள் அபிப்ராயத்தை தயவு செய்து எனக்கு எழுதுங்கள். அதைவிடப் பெரும்பரிசு எனக்கு வேறு எதுவுமில்லை.
 
என்றென்றும் அன்புடன் 
பாலகுமாரன் 
5-11-2004
சென்னை-4. 
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
 
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
More Information
SKU Code TMN B 101
Weight in Kg 0.140000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:உடையார் மூன்றாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 3 -Balakumaran - Udayaar

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran