இந்த நூல் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் (படங்களுடன்), ஜபல்பூர் நாகராஜ சர்மா அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரரை நம:
ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்ய பரம்பரகதா மூலம்நய
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
ஸ்ரீமடம் சமஸ்தானம்
20-9-2002
நமது அனாதியான ஸநாதன தர்மங்களுக்கு ஆணிவேராக உள்ள வேதங்களுக்கும் நமது தர்மங்களுக்கும் குறைவு ஏற்பட்ட ஸமயம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு அதிபவித்ர கேரள தேசத்தில் ஸ்ரீ பரமேஸ்வரன் சங்கரர் என்ற திருநாமத்துடன் அவதரித்து 72 துர்மதங்களை அடக்கி ஆஸ்திகமான ஷன்மதத்தை ஸ்தாபித்து பாரத தேசம் முழுவதும் மூன்று முறை பாதயாத்திரை சென்று தர்ம பிரசாரம் செய்துள்ளார்கள். அந்த பாதயாத்திரையில் ஹிமாலயம் முதல் கன்யாகுமரி வரை பாரத தேசம் முழுவதிலும் பன்னிரண்டு புண்ய க்ஷேத்ரங்களில் ஜ்யோதிர்லிங்கங்களை ப்ரதிஷ்டை செய்துள்ளார்கள். இந்த 12 க்ஷேத்திரங்களிலும் நமது குருநாதர் பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகளின் ஸங்கல்பப்படி 4 சிஷ்யர்களுடன் ஸ்ரீ ஆதிசங்கர மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த 12 ஜோதிர்லிங்க க்ஷேத்ரங்களின் சரித்திரத்தை ஜபல்பூர் ஸ்ரீ நாகராஜ சர்மா மிக விஸ்தாரமாக குமுதம் பக்தி ஸ்பெஷல் பத்திரிகையில் ப்ரசுரித்ததை புத்தக வடிவில் வெளியிடயிருப்பதையறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்நூலின் உதவியால் மக்கள் அனைவரும் 12 ஜ்யோதிர்லிங்க ஸ்வாமியை தரிசித்து ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அருளால் உலகமனைத்தும் இஹபர ச்ரேயஸ்களுடன் ஸகல மங்களங்களையும் அடைந்து பரம க்ஷேமமாக வாழவேண்டும் என்று ஆசீர்வதிக்கிறோம்.
- நாராயணஸ்ம்ருதி:-
ஆசிரியர் அறிமுகம்:
சுதந்திர தாகம் இந்தியாவெங்கும் பரவியிருந்த காலத்தில் சென்னை இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவச் சிறுவன் நாகராஜன், தன் சகாக்களோடு சேர்ந்துகொண்டு எட்டு மதுக்கடைகளை தீயிட்டுக் கொளுத்தியதற்காக ஆங்கிலேய அரசு அவனுக்கு வழங்கிய எட்டு கசையடிகளைத் தாங்கிக் கொண்டார்.
1943-ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில் மனமொடிந்த மாணவன் நாகராஜன், ஒரு கவிஞனாக உருவெடுத்து, கரும் பலகையில்,
காந்தி எந்தை வாழ்வான் கலங்காதீர் - மேன்மக்காள்
சாந்தி நிலவும் சகத்து !
என்னும் சாற்றுக்கவியினை எழுத, அதனைக் கண்ணுற்ற தமிழாசிரியர் திரு.பஞ்சாபகேச சர்மா, நளவெண்பா பாடம் எடுத்துக் கொண்டிருந்தமையால், நளனுக்கு ஆடை வழங்கிய அரவரசனின் பெயரை அந்த சூழலுக்கு ஏற்ப நாகராஜனுக்குச் சூட்டி ஆசிர்வதித்தார்.
நாகராஜனின் மாணவப் பருவக் கவிதைகள் 'பாரத தேவி'யில் பலமுறை பிரசுரமாகி உள்ளன. காந்திஜியின் இறுதி யாத்திரையின் போது நாகராஜன் எழுதிய 'எந்தை எங்கே?' என்ற தலைப்பிலான அஞ்சலிப் பாடல் பாரததேவி பத்திரிகையில் வெளியிடப்பட்டுப் பலராலும் பரவலாகப் பேசப்பட்டது.
'இந்திய மாணவ காங்கிரஸ் சென்னை கிளை'யில் தீவிரமாகப் பங்கேற்றிருந்த நாகராஜனும் அவனுடைய நண்பர்களும், நாடு சுதந்திரம் பெற்ற மறுநாளே அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு படிப்பில் இறங்கினர். மின் பொறியாளர் படிப்பை முடித்த நாகராஜன் முதன் முதல் பணியில் அமர்ந்த இடம் நர்மதை உற்பத்தி தலமான அமர்கண்டக். அங்கிருந்தபடியே ஆனந்த விகடன் தீபாவளி மலருக்கு அமைதி நிலவும் அமர்கண்டக் என்ற முதற் கட்டுரையை எழுதினார். அதனை அமரர் தேவன் வெளியிட்டார். மத்தியப்பிரதேச மின்வாரியத்தில் பணிபுரிந்து கொண்டே அம்மாநிலத்துத் தலங்களைப் பற்றிய கட்டுரைகளை 'அரவரசன்' என்ற புனைபெயரில் எழுதி அவற்றைச் பல பத்திரிகைகளுக்கும் அனுப்பி வெளியிடச் செய்தார்.
காஞ்சிப் பெரியவாளின் கருணையால், நர்மதை நதிக்கரையில் ஓர் அருங்குகையைக் கண்டுபிடித்தார். இக்குகையில்தான் ஆதிசங்கரர், தன் குருவைக் கண்டு, முறையாக சன்னியாசம் பெற்றார். இக்குகையைக் கண்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் பேருவகை கொண்டு அவரைப் பெரிதும் பாராட்டி, அக்குகையை புனருத்தாரணம் செய்துள்ளார்.
1988ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராயிருந்த திரு.ஆர். வெங்கட்ராமன் அவர்கள் ஓம்காரேஷ்வரிலுள்ள இக்குகையை நேரில் கண்டு வியந்து, அரவரசனை ராஷ்டிரபதி பவனுக்கு வரவழைத்துப் பாராட்டினார்.
1985ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மின்வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அரவரசன் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
வெள்ளையரின் கசையடி பெற்று, பல இன்னல்களைத் தாங்கி, கவிஞனாகத் திகழ்ந்து, அருந்தலங்களைப் பற்றி இன்றும் பல கட்டுரைகளை உருவாக்கி நம்மிடையே குடத்திலிட்ட விளக்கென இருக்கும் அந்த மின் பொறியாளர் அரவரசன் என்ற ஜபல்பூர் ஏ.நாகராஜ் சர்மா அவர்களைக் குன்றிலிட்ட விளக்காய் ஆக்குதல் ஆன்மீக அன்பர்களின், தமிழ் மக்களின் கடமையாகும்.
***
ஓம் புவனேஸ்வர்யை நம:
முன்னுரை:
"பென்சில் காகிதம் இருக்கா ?"
"ம்... கொண்டு வந்திருக்கிறேன். இதோ இருக்கு."
"சரி, சௌகரியமாக உட்கார்ந்து குறித்து கொள்."
"அப்படியே செய்கிறேன்."
அவர் சொல்லச் சொல்ல அப்படியே அவற்றைக் குறித்துக் கொண்டேன். இடையிடையே வியக்கும் விளக்கங்கள், அரிய ஆதாரங்கள், வேதங்கள் - இதிகாசங்கள் - புராணங்கள் - தர்மசாஸ்திரங்கள் இவற்றிலிருந்து தகுந்த ஆதாரங்கள் என அம்மகான் திருவாயிலிருந்து புனித கங்கையாக பிரவாஹித்து அவ்வெள்ளத்தில் ஆனந்தமாக மூழ்கி மூழ்கிப் பரவசம் அடைந்தேன் ! இதனால் சில நொடிகளிலே உடலும் உள்ளமும் குளிர்ந்தன. சுமார் 30 நிமிடங்களே சென்றிருக்கும். இதற்குள் அப்பப்பா ! எப்படிப் பட்ட அரிய பெரிய விஷயத்தை உள்ளங்கை நெல்லிக் கனி போல் அவ்வளவு அழகாக சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டாரே ! அவரல்லவோ தீர்க்கதரிசி !
"சரி, வேறு ஏதானும் சந்தேகம் உண்டா? "
"ஆம், உண்டு. ஒரு சின்ன சந்தேகம். தாங்கள் இதுகாறும் கூறியவற்றை மிக விரிவாக எழுதி பத்திரிகை ஒன்றில் தொடராகப் பிரசுரிக்க வேண்டுமென அவா. என் விருப்பம் நிறைவேறுமா? தங்கள் ஆசியை நாடுகிறேன்."
"இது சாதாரண விஷயமல்ல. சிவபுராணம் முழுவதையும் மிக்க கவனமாகக் படித்தறிய வேண்டும். பல இடங்களுக்கு, அதாவது நாடு முழுவதிலும் இதன் பொருட்டுப் பிரயாணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நீ சர்வீஸில் இருக்கும்வரை இதை உன்னால் நிறைவேற்ற முடியாது. ஓய்வு பெற்றபின் ஒருவேளை கூடி வரலாம். அப்போது உன் அறப்பணி அரங்கேற்றம் எய்தும், போய்வா! க்ஷேமமாகவே இருப்பே!"
பல வருடங்கள் உருண்டோடியும் இன்னும் என் மனத்தில் பசுமையாக நிற்கிறது மேற்கூறிய நிகழ்ச்சி. வடசென்னை காரனோடை என்ற கிராமத்தில் குணசித்ர நடிகர் காலஞ்சென்ற S.V.சுப்பையாவின் மாபெரும் தென்னந்தோப்பின் மையத்தில் காஞ்சி காமகோடி பீடம் 4 நாட்கள் முகாமிட்டுருந்தார்கள். ஆம்! டிசம்பர் 23ஆம் தேதி, 1965ஆம் ஆண்டு. ரம்யமான மாலை வேளை.அப்போதுதான் மேற்கண்ட அருளுரை மகாப்பெரியவாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடமிருந்து கிடைக்கும் பாக்கியம் நான் பெற்றேன். எதைப்பற்றி தெரியுமா? ஜோதிர்லிங்க வரலாறும் அதன் தல விவரங்களும். மெய்சிலிர்க்கும் அத்தலங்களின் பெருமைகளைக் குறித்து அம்மகான் தந்த விளக்கம் இன்னும் என் காதில் ரீங்காரம் செய்கின்றனவே! அப்போது பிலாயில் பணிபுரிந்த நான் இவ்விஷயமாக ஆதாரபூர்வமாகக் கேட்டறியவே மகாப்பெரியவாளை அணுகினேன். ஏனெனில் இவ்விஷயத்தை மேலெழுந்தவாரியாகப் பார்த்தபோது ஒரே குழப்பம்! ஒரே மயக்கம்! எவ்வளவு லிங்கத் தளங்கள்! இவற்றில் எத்தலத்தை விடுவது எத்தலத்தை எடுத்துக்கொள்வது என்று மனக்கலக்கம் ! ஆனால் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகே என் கலக்கம் நீங்கியது. அத்தகைய மனக்கலக்கம் வாசகர்களுக்கும் ஏற்படாமல் அதைத் தவிர்க்கவே கீழ்க்கண்ட அட்டவணை தரப்பட்டுள்ளது. இவ்வட்டணையில் 'தலப்பெயர்' என்ற பகுதியில் காணப்படும் பெரிய எழுத்தில் உள்ள (Bold Type) ஊர்களே 12 ஜோதிர்லிங்கத் தலங்களாகும்.
எண் - ஈசன் பெயர் - மாநிலம் - மாவட்டம் - தலப்பெயர் :-
01.இராமநாதர் - தமிழ்நாடு - இராமநாதபுரம் - இராமேஸ்வரம்
02.மல்லிகார்ஜுனர் - ஆந்திரப்பிரதேசம் - கர்னூல் - ஸ்ரீசைலம்
03.பீமாசங்கரர் - மகாராஷ்டிரா - புனே - பீமாசங்கர்
பீமாசங்கரர் - உத்ரபிரதேசம் - நைனிதால் - முக்தேஷ்வர்
பீமாசங்கரர் - அஸ்ஸாம் - கௌஹாடீ - காமாக்யா
பீமாசங்கரர் - ஆந்திரபிரதேசம் - மே.கோதாவரி - பீமாவரம்
04.திரயம்பகேஸ்வரர் - மகாராஷ்டிரா - நாசிக் - திரியம்பக்
05.குஷ்மேஷ்வரர் - மகாராஷ்டிரா - ஒளரங்காபாத் - வேரூல்
குஷ்மேஷ்வரர் - மகாராஷ்டிரா - ஒளரங்காபாத் - எல்லோரா (கைலாசநாதர்)
குஷ்மேஷ்வரர் - உத்ரபிரதேசம் - பிரதாப்கர்ஹ் - துயிஸர்நாத்
06.சோமநாதர் - குஜராத் - ஜூனாகட் - ப்ரபாசபட்டினம்
07.நாகேஷ்வரர் - குஜராத் - ஜாம்நகர் - தாருகாவனம்
நாகேஷ்வரர் - மகாராஷ்டிரா - பர்பானி - அவுண்டா
நாகேஷ்வரர் - உத்ராஞ்சல் - அல்மோடா - பாகேஷ்வர்
நாகேஷ்வரர் - தமிழ்நாடு - தஞ்சை - கும்பகோணம்
நாகேஷ்வரர் - தமிழ்நாடு - தஞ்சை - திருநாகேஸ்வரம்
நாகேஷ்வரர் - ஜார்கண்ட் - தேவ்கர்ஹ் - வாஸுகிநாத்
08.ஓம்காரேஷ்வரர் - மத்தியபிரதேசம் - மேற்கு நிமாட் - மாந்தாதா
09.மகாகாலர் - மத்தியபிரதேசம் - உஜ்ஜைனி - உஜ்ஜைனி
10.வைத்யநாதர் - ஜார்கண்ட் - தேவ்கர்ஹ் - வைத்யநாதம்
வைத்யநாதர் - மகாராஷ்டிரா - பீர் - பர்லீ
வைத்யநாதர் - இமாசல்பிரதேசம் - தர்மசாலா - பைஜ்நாத்
வைத்யநாதர் - தமிழ்நாடு - நாகப்பட்டினம் - வைத்தீஸ்வரன் கோயில்
வைத்யநாதர் - குஜராத் - வடோதரா - டாப்போய்
வைத்யநாதர் - உத்ராஞ்சல் - அல்மோடா - பைஜ்நாத்
11.விஸ்வநாதர் - உத்ரபிரதேசம் - வாராணாசி - காசி
12.கேதாரநாதர் - உத்ராஞ்சல் - சமோலி - கேதார்.
மேற்கண்ட லிங்கத் தலங்களைத் தவிர இன்னும் கணக்கிற்கு வராமல் பல மாநிலங்களில் பல தலங்கள் இருக்கலாம். ஆனால் அவை ஜோதிர்லிங்கத் தலமாகி விடுமா? கிடையவே கிடையாது. உதாரணமாக காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கொண்ட கோயில்கள் கணக்கற்று இருந்தாலும் அங்கு உறையும் இறைவன் ஜோதிர்லிங்கமல்ல. இருந்தும் அவ்விறைவனை வணங்கும்போது காசியில் உறையும் ஜோதிர்லிங்கம் மனத்தில் தோன்றுவது இயற்கையே. எனவே உண்மையான ஜோதிர்லிங்கங்களைக் கண்டறிய சிவபுராணத்தைப் புரட்டினாலே போதும்; நம் குழப்பமும் சந்தேகமும் தீர்ந்து விடும். இதையே எனக்கு காஞ்சி மாமுனிவர் விளக்கி சிவபுராணம் கூறும் தளங்களை மட்டுமே கண்டு, விவரங்கள் சேகரித்து வெளியிடலாம் என்று அபிப்ராயப்பட்டார்கள். பணியினின்று ஓய்வுற்றதும் 12 ஜோதிர்லிங்கங்களையும் அதனதன் தலங்களையும் தரிசித்து, புகைப்படங்கள் எடுத்து, பல நூல்களைப் படித்து, ஆராய்ந்து, பலதரப்பட்ட மக்களின் கருத்துகளைச் சேகரித்து இரவும் பகலும் கடுமையாக உழைத்து அவ்வுழைப்பின் சாரத்தையே நூல் வடிவாக்கி இதோ தங்கள் கரங்களில் தவழ விட்டுள்ளேன். ஆன்மிக அடியார்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன்.
நிறைவுபெறுகிறது. இத்தகைய விரிவான கட்டுரைகளைச் சுருக்கி, 18 மாத இதழ்களில் வெளியிட்டு என்னையும் ஓர் ஆன்மிக எழுத்தாளனாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த 'குமுதம் பக்தி ஸ்பெஷல்' நிர்வாகத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அதுவும் முக்கியமாக ப்ரியா கல்யாணராமன் அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகள் பலப்பல.
ஒவ்வொரு கட்டுரைக்கும் மணிமகுடம்போல் விளங்கும் சைவத் திருமுறைகளிலிருந்து பொருத்தமான திருப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து அளித்ததோடு அப்பாடல்களுக்கு அருமையான விளக்கவுரையை சுருக்கமாகத் தந்துதலில் திரு. தஞ்சை வி.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக.
இந்நூலை வெகு நேர்த்தியாகவும், அழகாகவும் அச்சிட்டு, தக்க முறையில் வெளியிடும் வானதி பதிப்பக உரிமையாளர் திரு.திருநாவுக்கரசு அவர்கள் என் இதயம் கனிந்த நன்றிக்குப் பாத்திரமாவார்.
எழுத்திலோ, நடையிலோ, கருத்திலோ ஆன்மீக மணம் கமழும் எனின் அதன் பெருமைக்குரியவன் நானல்ல; நம் குருநாதர் மகாப்பெரியவாள். இப்பெரும் பணியைத் துவக்க அன்றே ஆசி வழங்கியதோடு, இடையில் சோர்வுற்று மனம் தளர்ந்தபோதெல்லாம் தோன்றாத்துணை நாதராக அருகிலிருந்து என்னை ஊக்குவித்து, ஆர்வத்தை, மழலைக்குப் பால்சோற்றை ஊட்டுவது போல் ஊட்டி, இன்னல் - சங்கடம் - இடர்ப்பாடு-உடல் ஊமை இவை ஏதுமின்றி இவ்வரும் பணியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த அம்மகாஞானி , தபோமூர்த்தி, நடமாடும் தெய்வம் காஞ்சி மாமுனிவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை மனமொழி மெய்யால் என்னென்றும் முதற்கண் அடிபணிந்து வணங்குகின்றேன்.
ஜபல்பூர் நாகராஜ சர்மா
சென்னை - 33
20-08-2003.
ஜோதிர்லிங்கங்கள் - காஞ்சி முனிவரின் கருத்துகள்
1."விளக்கு எரியும்போது அந்த ஜோதி அடியில் மஞ்சளாகவும், நடுவில் கருப்பாகவும், மேலே சிவப்பாகவும் இருக்கும். அந்த ஜோதியில் மஞ்சள் பிரம்மாவின் நிறம், கருப்பு விஷ்ணுவினுடைய நிறம், சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்திகளின் சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல அது சிவரூபம் மட்டுமல்ல. லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மபாகம். நடுபீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கம் இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் ஆங்காங்கே ஜ்வாலமுகி போல இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பது போலச் செயற்கையான தீபஜோதியையோ வழிபட்டு வந்திருக்கிறார்கள். இந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர்லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள். ஜோதிதான் லிங்கம் - லிங்கம்தான் ஜோதி."
யாராவது பந்துவை நினைக்கிறோம். அப்போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அவரை நேரே பார்த்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. அதேபோல உருவம் இல்லாத சிவமும் ஓர் உருவத்துடன் வந்து அனுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்மா சொரூபத்தின் உருவம் இல்லாத பண்பு புரியும். உருவத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அனுபவிக்கிற நமக்கு ஈசுவரனை உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும்.
அதற்காகத்தான் அருவமான ஈசுவரன் அருவுருவமான லிங்கத்துடன் நில்லாமல் அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்விய சொரூபம் காட்டும் லிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.
இப்படி ரூபத்தைக் காட்டினாலும் வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை என்றும், தாம் ஆதியோ அந்தமோ இல்லாத அனந்தவஸ்துவே என்றும் உணர்த்துவதற்காகத்தான் மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரி தமது பாதம் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.
அப்படி அடிமுடி இல்லாமல் அவர் ஜோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும், பூமிக்குமாக இப்படி பரமசிவன் உற்பவித்த இரவே சிவராத்திரியாகும். சகல பிரபஞ்சமும் அடங்கி இருக்கிற லிங்கரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில் அவரை அப்படியே ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கி இருக்க வேண்டும். இதைவிட ஆனந்தம் நமக்கு வேறு இல்லை."
பொருளடக்கம்:
01.லிங்கோத்பவர் ;
02.சீதை வடித்த சிவலிங்கம் (இராமேஸ்வரம்);
03.மாமலை மீது ஒரு மகாலிங்கம் (ஸ்ரீசைலம்);
04.கானகத்தில் கயிலைநாதர் (பீமாசங்கர்);
05.மும்மூர்த்திகள் கொண்ட மூலவர் (த்ரயம்பகம்);
06.திருக்குளத்தில் தோன்றிய திருநீலகண்டர் (எல்லோரா);
07.பல படையெடுப்புகள் பார்த்த பரமேஸ்வரன் (சோமநாதம்);
08.புற்றிலே பிறந்த பெருமான் (நாகேசம்);
09.தீவிலே தோன்றிய திரிபுராந்தகன் (ஓம்காரேஷ்வர்);
10.காலத்தை வென்ற மகாகாலர் (உஜ்ஜைனி);
11.இலங்கேஸ்வரன் இழந்த பரமேஸ்வரன் (வைத்யநாதம்);
12.காசியும் கங்காதரனும் (வாராணசி);
13.பின்னழகில் பினாகபாணி (கேதாரம்).
ஆசிரியர் அறிமுகம்: ஜபல்பூர் ஏ.நாகராஜ சர்மா ஆன்மீக பத்திரிகை வாசகர்கள் பலருக்கும் பரிச்சயமான பெயர். 12 ஜோதிர்லிங்க தரிசனங்கள், 51 அட்சர சக்தி பீடங்கள், அதிசய ஆலயங்கள், அருள்தரும் அஷ்ட விநாயகர், நதி மூலங்கள், கதம்பவனம், ஆன்மீக அலைகள் என்று ஏழு அற்புதமான ஆன்மீக புத்தகங்களை எழுதியவர்.
சுதந்திர தாகம் இந்தியாவெங்கும் பரவியிருந்த காலத்தில் சென்னை இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவச் சிறுவன் நாகராஜன், தன் சகாக்களோடு சேர்ந்துகொண்டு எட்டு மதுக்கடைகளை தீயிட்டுக் கொளுத்தியதற்காக ஆங்கிலேய அரசு அவனுக்கு வழங்கிய எட்டு கசையடிகளைத் தாங்கிக் கொண்டார்.
1943-ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில் மனமொடிந்த மாணவன் நாகராஜன், ஒரு கவிஞனாக உருவெடுத்து, கரும் பலகையில்,
காந்தி எந்தை வாழ்வான் கலங்காதீர் - மேன்மக்காள்
சாந்தி நிலவும் சகத்து !
- என்னும் சாற்றுக்கவியினை எழுத, அதனைக் கண்ணுற்ற தமிழாசிரியர் திரு.பஞ்சாபகேச சர்மா, நளவெண்பா பாடம் எடுத்துக் கொண்டிருந்தமையால், நளனுக்கு ஆடை வழங்கிய அரவரசனின் பெயரை அந்த சூழலுக்கு ஏற்ப நாகராஜனுக்குச் சூட்டி ஆசிர்வதித்தார்.
நாகராஜனின் மாணவப் பருவக் கவிதைகள் 'பாரத தேவி'யில் பலமுறை பிரசுரமாகி உள்ளன. காந்திஜியின் இறுதி யாத்திரையின் போது நாகராஜன் எழுதிய 'எந்தை எங்கே?' என்ற தலைப்பிலான அஞ்சலிப் பாடல் பாரததேவி பத்திரிகையில் வெளியிடப்பட்டுப் பலராலும் பரவலாகப் பேசப்பட்டது.
'இந்திய மாணவ காங்கிரஸ் சென்னை கிளை'யில் தீவிரமாகப் பங்கேற்றிருந்த நாகராஜனும் அவனுடைய நண்பர்களும், நாடு சுதந்திரம் பெற்ற மறுநாளே அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு படிப்பில் இறங்கினர். மின் பொறியாளர் படிப்பை முடித்த நாகராஜன் முதன் முதல் பணியில் அமர்ந்த இடம் நர்மதை உற்பத்தி தலமான அமர்கண்டக். அங்கிருந்தபடியே ஆனந்த விகடன் தீபாவளி மலருக்கு அமைதி நிலவும் அமர்கண்டக் என்ற முதற் கட்டுரையை எழுதினார். அதனை அமரர் தேவன் வெளியிட்டார். மத்தியப்பிரதேச மின்வாரியத்தில் பணிபுரிந்து கொண்டே அம்மாநிலத்துத் தலங்களைப் பற்றிய கட்டுரைகளை 'அரவரசன்' என்ற புனைபெயரில் எழுதி அவற்றைச் பல பத்திரிகைகளுக்கும் அனுப்பி வெளியிடச் செய்தார்.
காஞ்சிப் பெரியவாளின் கருணையால், நர்மதை நதிக்கரையில் ஓர் அருங்குகையைக் கண்டுபிடித்தார். இக்குகையில்தான் ஆதிசங்கரர், தன் குருவைக் கண்டு, முறையாக சன்னியாசம் பெற்றார். இக்குகையைக் கண்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் பேருவகை கொண்டு அவரைப் பெரிதும் பாராட்டி, அக்குகையை புனருத்தாரணம் செய்துள்ளார்.
1988ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராயிருந்த திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் ஓம்காரேஷ்வரிலுள்ள இக்குகையை நேரில் கண்டு வியந்து, அரவரசனை ராஷ்டிரபதி பவனுக்கு வரவழைத்துப் பாராட்டினார்.
1985ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மின்வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அரவரசன் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
வெள்ளையரின் கசையடி பெற்று, பல இன்னல்களைத் தாங்கி, கவிஞனாகத் திகழ்ந்து, அருந்தலங்களைப் பற்றி இன்றும் பல கட்டுரைகளை உருவாக்கி நம்மிடையே குடத்திலிட்ட விளக்கென இருக்கும் அந்த மின் பொறியாளர் அரவரசன் என்ற ஜபல்பூர் ஏ.நாகராஜ் சர்மா அவர்களைக் குன்றிலிட்ட விளக்காய் ஆக்குதல் ஆன்மீக அன்பர்களின், தமிழ் மக்களின் கடமையாகும்.