Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை - மு.முருகேஷ் - Ammavukku Magal Sonna Ulagin Muthal Kathai - M.Murugesh - Ammavuku Maghal Chonna Mudhal Kadhai

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Akani B 018
₹120.00
சிறுவர் கதைகள். 
 
காகித உறை/ பேப்பர்பேக்;  
104 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதல் பதிப்பு: டிசம்பர் 2017; 
மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை, மு. முருகேஷ் அவர்களால் எழுதி அகநி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 
 
2021 ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்.
 
கதைக் குகைக்கு உள்ளே:
01.அழகிரிசாமியும் ஜீபூம்பா மரமும்; 
02.விருந்துக்கு அழைத்த நண்பர்கள்; 
03.பள்ளு தேய்க்காத பலசாலி ராஜா;
04.பழைய பாட்டியும் புது வடையும்; 
05.பசியெடுக்காத வெள்ளரி; 
06.அன்புள்ள அப்பாவுக்கு; 
07.சொட்டுச் சொட்டாய் உயிர்த்துளி; 
08.நான்கு பங்குத் திருடர்கள்; 
09.கட்டைவிரலின் கதை; 
10.குதிரை வியாபாரி குப்புசாமி; 
11.இசக்கிமுத்துவின் ஆசை; 
12.அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை; 
13.காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி; 
14.யாழினி தந்த பரிசு; 
15.பசி அடங்கா குருவிக்குஞ்சு; 
16.சிங்கத்தைப் பயமுறுத்திய அலமேலு.
 
புத்தக விமர்சனம்: 
குழந்தைகளுக்கான கதை எழுதுவது எளிதல்ல. மிகுந்த கற்பனை வேண்டும். குழந்தைகளாகவே மாற வேண்டும். அவர்களின் யதார்த்தமும், கனவுகளும் கலந்த magical world-க்கு உள்ளாகப் புகுந்து, அவர்களை ஈர்க்க வேண்டும். நம்பிக்கை மிகுந்த குழந்தை உள்ளத்தை சிதைத்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
குழந்தைகளின் கதைகளில் நன்மைதான் இறுதியில் வெல்ல வேண்டும். யதார்த்த உலகம் இதற்கு எதிர்மறையாக இருப்பதைப் பலமுறை பார்க்க முடியலாம். ஆனால், குழந்தைகளிடம் அப்படிச் சொல்ல முடியாது. அதற்கு நல்லவர்கள் புத்திசாலிகளாகவும் இருந்தாக வேண்டும். தீமை செய்பவர்களின் தந்திரங்களை முறியடிக்கும் அதி புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். இந்தத் தொகுப்பில் இருக்கும் பல கதைகளில் அத்தகைய நல்ல புத்திசாலிகளைப் பார்க்கிறோம். தன்னைத் தின்பதற்கு சதித் திட்டம் போடும் தவளையையும், நண்டையும் ஏமாற்றும் கெண்டை மீன் ஒரு எடுத்துக்காட்டு.
 
இன்றைய குழந்தைகள் பலவகைப்பட்ட கருத்துக்களையும், செய்திகளையும் உள்வாங்கிய வண்ணம் வளருகிறார்கள். இணைய தளத்திலும், கையிலிருக்கும் மொபைலிலும் எந்நேரமும் ஆழ்ந்து கிடக்கும் இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு நமது பழைய பாட்டிக் கதைகள் பிடிக்குமா என்ற சந்தேகம் எழுவது இயற்கை. ஆனால், அது உண்மையல்ல என்று நினைக்கிறேன். அதி நவீன உலகில் சஞ்சரிக்கும் குழந்தைகளும் அமர் சித்திரக் கதைகள் போன்ற புராணக் கதைகளை ரசித்துப் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். கதை சொல்லும் திறமையைப் பொறுத்து இருக்கிறது.
 
 குழந்தைகளுக்கு கதை எழுதுவோர் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஒன்று, அவர்களுக்கு உபதேசம் செய்யும், நல்லொழுக்கத்தை வெளிப்படையாக போதிக்கும் கதைகள் கூடாது. குழந்தைகள் ஒன்றுமே தெரியாத வெகுளிகள் அல்லது முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது. அதேசமயம் குழந்தைகளை அவர்கள் மொழியை விட்டு, பெரியவர்களின் மொழியில், முற்றும் அறிந்தவர்கள் போல் பேச வைக்கக்கூடாது. இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையில், அம்மாவுக்கு கதை சொல்லும் கவின், இறுதியில் ஆமை பேசுவதாக சொல்லுவது, கொஞ்சம் பெரிய மனுஷித்தனமாக ஒலிக்கிறது. கவனமாக இப்படியும் சாயாமல், அப்படியும் சாயாமல் எழுத வேண்டும்.
 
குழந்தைகளுக்காக எழுதும் கதைகளைக் களப் பரிசோதனை (field test) செய்து பார்ப்பது நல்லது. சில குழந்தைகளை வாசித்து, அவர்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டறிந்து இறுதி செய்யலாம்.
 
தமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. குழந்தைகள் வாசிப்பதில்லை என்று குறை சொல்லப்படுகிறது. ஒரு காரணம் அவர்களது வாசிக்கும் திறனை வளர்ப்பதில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறோம். மற்றொரு காரணம் அவர்கள் ஆழ்ந்து போகும் அளவிற்கு ஆர்வம் ஊட்டும் புத்தகங்கள் அதிகம் இல்லை.
 
இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ், ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
- முனைவர் வே.வசந்திதேவி.
 
உள்ளம் இறங்கிக் கலந்த கதைகள்...
 
'ஆச்சர்யம் அறிவின் தொடக்கம்' என்கிறார் சாக்ரடீஸ். யார் மறுக்க முடியும்?
 
அறிவின் தொடக்கம் மட்டுமா? ரசனையின் தொடக்கமும் கூட! கதைகளின் தொடக்கமும் கூட. ஏன்? ஒவ்வொரு நகர்வின் தொடக்கமும் தான். ஒவ்வொரு நகர்வின் தொடக்கத்திலும் முடிவிலும் 'அட!' என்ற ஆச்சர்யம் எப்போதும் இருக்கிறது.
 
குழந்தைகள் ஆச்சர்யம் நிரம்பிய கருவூலங்கள். கதைகளைப் படைப்பதற்கும், நகர்த்துவதற்குமான சக்தியை அந்த மழலைக் கண்கள்தான் வாரி வழங்குகின்றன.
 
குழந்தைகளிடம் இருப்பது, தீராத ஆச்சர்யம். கேட்ட கதைகளையே திரும்பத் திரும்பக் கேட்டாலும் குழந்தைகளின் ஆச்சர்யம் வற்றிக் குறைந்து போவதில்லை.
 
அச்சத்தையும் ஆச்சர்யத்தையும் தூண்டித் தூண்டித்தான் நகர்ந்தன பழைய தேவதைக் கதைகள் (Fairy tales). ஆனால், அந்த ஆச்சர்யங்கள் காடுகளாலும், சூனியக்காரிகளாலும், விசித்திரக்குள்ளர்களாலும் உருவாக்கப்பட்டவை.
 
இன்று, காலம் மாறியிருக்கிறது. உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொன்னாலே, 'ஓ! அப்படியா!' என்று ஆச்சர்யம் துள்ளி வருகிறது. இன்று குழந்தைகளுக்காகக் கதை எழுதும் எழுத்தாளர்கள் இதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். சிறு சிறு உண்மைகள் போதும் குழந்தைகள் குதிக்கவும் குதூகலிக்கவும்! உண்மைகளோடு கைகோர்த்து இனிப்பான கட்டுக்கதைகளும் கூட வருவதில் தவறில்லை. எறும்பு பேசுவதும், நத்தை நடனப்போட்டியில் கலந்து கொள்வதும், எலியும் சிங்கமும் கைகுலுக்கிக் கொள்வதும் நல்ல விஷயங்கள்தானே!
 
தமிழில் பலர் குறிப்பாக இளைஞர்கள் இன்று குழந்தைகளுக்கான கதைகளை விதம் விதமான வடிவங்களில் விதம் விதமான கதைக்கருக்களோடு எழுதுகிறார்கள். இது புது மலர்ச்சி! அத்தனை கதைகளையும் ஒன்றுவிடாமல் வாசித்து, அவை குறித்து எழுத வேண்டும் என்பது என் சமீபகால விருப்பம். கவிஞர் முருகேஷ் தந்த 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற தொகுப்பு எனக்கான முதல் வாய்ப்பு.
 
முருகேஷ் என்றதும் உடனடியாக மூளைக்குள் பளிச்சிடுவது ஹைக்கூ கவிதைகளை முன்வைத்துப் பேராசிரியர்கள் தொடங்கிவைத்த உரையாடல்கள் நினைவுக்கு வருகின்றன. கூடவே, 'தன் கறுப்பு நிறத்துக்கு விலையாக கலர் டிவி கொண்டு, புகுந்த வீடு வரும் மணமகள் குறித்த முருகேஷின் கவிதையில் ஈடுபட்டு விவாதித்த மாணவ மாணவியர் ஞாபகங்களும்!...
 
இலக்கியம், கல்வி, அறிவொளி, பாடப்புத்தக உருவாக்கம் என நான் பங்கேற்ற பல தளங்களிலும் தவறாமல் முருகேஷைச் சந்தித்திருக்கிறேன். எப்போதும் நண்பர்கள் சூழ இருக்கிறார் முருகேஷ். கனிவு அவர் படைப்பிலும் இருக்கிறது: அவர் பழகுவதிலும் இருக்கிறது.
 
கடந்த சில ஆண்டுகளாக, முருகேஷ் குழந்தைக் கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருவதையும், கதைகளுக்காகப் பரிசும் பாராட்டும் பெற்று வருவதையும் அறிவேன். இருப்பினும் நான் வாசிக்கும் அவருடைய முதல் கதைத்தொகுப்பு இதுதான்.
 
நிராகரிக்கப்பட்டதும் பலமற்றதுமான சிறிய உயிர்களுக்கு ஆதரவாக இத்தொகுப்பின் கதைகள் பல நிற்பது, என் ரசனைக்கு மிக நெருக்கமான விசயம். பலம் கொண்டவை, தந்திரம் நிறைந்தவை, வஞ்சகம் செய்பவைக்கு எதிராகச் சிறிய உயிர்கள் நடத்தும் போராட்டத்தைக் கதைகளில் வாசித்துக் களித்தேன்.
 
கெண்டைமீன் ஜெயிக்கும் போதும் (விருந்துக்கு அழைத்த நண்பர்கள்).
 
முயல்குட்டி சிங்கத்தைக் காயப்படுத்தும்போதும் (பல்லு தேய்க்காத பலசாலி).
 
சிங்கத்தையும் நரியையும் சேர்த்து ஆடு விரட்டும்போதும் (சிங்கத்தைப் பயமுறுத்திய அலமேலு) நிச்சயம் குழந்தைகள் குதூகலிப்பார்கள்.
 
'காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி' இந்த வகையில் பரவசம் தரும் கதை. ஒவ்வொரு குரலிலும் ஓர் அழகு! தேவை பாரபட்சமற்ற காதுகள்! எல்லா பாரபட்சங்களையும் தாண்டி கடைசியில் காக்கா வெல்லுகிறது. ஒரே எழுத்தில் ஏகப்பட்ட ராகங்களைக் கொண்டுவர காக்கைக்குத் தெரிகிறது. இந்த முறை அடைத்துக் கிடக்கும் காதுகளுக்குள்ளும் காக்கையின் குரல் நுழைகிறது. படிந்து கிடக்கும் பார்வைகளை மனோபாவங்களைக் கீறித் துளைத்துக் கிடைத்த வெற்றி காக்கையின் குரலுக்குக் கிடைத்த வெற்றி! கதையை வாசித்ததும், பசுவின் பாலைவிட எருமையின் பாலே இந்தியப் பொருளாதாரத்தின் ஆதாரமாய் இருக்க, நிறத்தின் காரணமாக பசு தெய்வமாகவும் எருமை எமனின் வாகனமாகவும் ஆக்கப்பட்ட இந்திய ஆன்மீகத்தின் பாரபட்சத்திற்கு எதிராக ஓயாமல் குரல் கொடுக்கும் அறிஞர் காஞ்சா இலையாவின் ஆதங்கம் முன்னுக்கு வந்தது. ஒருநாள் முருகேஷ் கதையில் எருமையும் வெல்ல வேண்டும்.
 
நிராகரிக்கப்பட்ட எளிய உயிர்களின் வெற்றிகளுக்கிடையே, வயிறு கிழிபட்டுத் தோல்வியுறும் சின்னச் சிட்டுக் குருவியின் கதையும் (பசி அடங்காக் குருவிக் குஞ்சு) இருக்கிறது. ஒரேயடியாகக் கற்பனைக்குள் நடக்க வேண்டும். இப்படி ஒரு யதார்த்தம் இருப்பதையும் குழந்தைகள் தெரிந்து கொள்ளட்டும் என முருகேஷ் நினைத்திருக்கலாம்.
 
மரபாகச் சொல்லப்படும் பழங்கதைகள் சில இன்று புதுப்பிக்கப்படுகின்றன. உலகெங்கும் உள்ள நடைமுறை இது. பலரும் தொட்டு விதம் விதமாய்ப் புதுப்பித்த கதை, பாட்டியிடம் வடை திருடி நரியிடம் அதை இழந்த காகத்தின் கதை. அது கதையல்ல. பெருவெளி! அவரவரின் கற்பனைகளும் ஆதங்கங்களும் நுழைந்து விளையாடக் கிடைத்த வெளி! முருகேஷின் கதையில் காக்காவும் நரியும் சிறு சிறு வேலைகள் செய்து பாட்டிக்கு உதவி வடைகளைப் பெற்றுக் கொள்கின்றன. திருட்டு, ஏமாற்று அடையாளங்கள் இங்கில்லை. இங்கு அவை உழைப்பாளிகள். 'பசியெடுக்காத வெள்ளரி'யில் பழைய ஏமாற்றும் நரியைப் பார்த்துவிட்டு, 'பழைய பாட்டியும் புது வடையும்' கதையில் புதிய நரியைப் பார்ப்பது மகிழ்ச்சிதான்.
 
அறிவொளியில் நாங்கள் சிறு புத்தகமாக வெளியிட்ட 'நரி சொன்ன சாட்சி' என்ற கதை இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. கதையில் வரும் நரி நல்ல நரி மட்டுமல்ல, நியாயத்தின் பக்கம் உறுதியாக நின்ற நரி. ஓர் அப்பாவி மனிதருக்கு அவருடைய குதிரைக் குட்டியைக் காப்பாற்றிக் கொடுத்த நரி. ஆம்! ஒவ்வொன்றுக்குள்ளும் எத்தனையோ ரூபங்கள்! இந்திய ஆன்மீகத்தில் முதலை ஒரு வஞ்சக விலங்கு. ஆப்பிரிக்கக் கதைகளில் முதலை நல்ல நண்பன்: அப்பாவிக் குடும்பஸ்தன்! 
 
முயல் ஆமை கதை மற்றொரு பெருவெளி. மூலக்கதையில் ஆமை நிற்காமல் நடந்து ஜெயித்தது. முருகேஷின் கதையில் (அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை) நின்ற இடத்திலேயே நின்று ஜெயித்தது. வெற்றிதான் பிரதானம் என்றால், புதுப்புது குறுக்கு வழிகள் உருவாகத்தானே செய்யும்? ஆமை வென்றதோடு கதை நிற்கவில்லை. வெற்றியில் கிடைத்த முட்டைக்கோஸை முயலோடு பகிர்ந்து கொள்கிறது. இது முருகேஷின் உள்ளம். பல கதைகளில் இப்படி முருகேஷின் உள்ளமும் உணர்வும் கலந்திருக்கின்றன. கதை சொல்லும்போது, எழுத்தாளரின் உள்ளம் இறங்கி வந்து கதையில் கலந்துகொள்வதில் தவறில்லை. நீதி சொல்லும் வாய்களைத்தான் நாம் எதிர்க்கிறோம்.
 
நீதிப்பேச்சு இக்கதைத் தொகுப்பில் கம்மியாகத்தான் இருக்கிறது. முயல் ஆமைக் கதையில் இறுதியில் ஆமை பெறுகிறது. "நம்மால் சில வேலைகள் செய்ய முடியும் என்பதால், அதைச் செய்ய முடியாதவர்களைப் பலமற்றவர்களாகப் பார்ப்பது கூடாது. வீணாக அவர்களைப் போட்டிக்கு அழைத்துச் சிறுமைப்படுத்த நினைப்பதும் தவறு" என்கிறது ஆமை. இதை நீதி என்பதைவிட புரிதல் எனக் கொள்வதே பொருத்தம். போட்டியும் கசப்புமான உலகில் இது தேவையான புரிதல். புரிதல் கனமற்று லேசாகவும் இருக்கிறது.
 
பழம் புராணக் கதைகளில் இன்னும் ரத்தம் காயாது இருக்கிறது ஏகலைவன் கதை! 'கட்டைவிரலின் கதை' என்று இத்தொகுப்பில் வருகிறது. ஓங்கி அடித்த கிரிக்கெட் பந்தைத் தேடிப்போன சிறுவர்கள் கண்ணில்படுகிறது 'கட்டைவிரல்'. கட்டைவிரல் தன் கதை சொல்கிறது. இது பாகுபாடுகள் நிறைந்த சமூகம். பிறப்பால் அனைவரும் சமம் என்பது இன்றுவரை உறுதிப்படவில்லை. குழந்தைகள் புரிந்து உள்வாங்கும் விதத்தில் கதை சொல்கிறார் முருகேஷ். கதை கேட்ட சிறுவர்கள் இறுதியில் இறுக்கமாய் கைகோர்க்கிறார்கள். துண்டிக்கப்பட்டது ஒன்று சேர்க்கிறது. கட்டைவிரலை வெட்டியவர்கள் அவமானத்தால் வாயடைத்துப் போனார்கள். வெட்டப்பட்ட விரல் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறது.
 
'இசக்கிமுத்துவின் கதை' ஒரு சிறு காவியம்தான். புத்தகம் கையிலெடுத்து வாசிக்கத் துடிக்கும் மலைக்கிராமத்துச் சிறுவனின் கதை. கதையில் புத்தகம் உருவாக்கும் துடிப்பைச் சொன்ன விதம் சரி. ஆனால், அதன்பொருட்டு அந்தச் சின்னஞ் சிறுவனை நம்முன் பிணமாகக் கிடத்தியது மனது தாங்காத முடிவு.
 
ஒருமுறை, என் ஆறு வயதுப் பேதி வாசித்த ஆங்கிலக் கதையில் merriment என்ற வார்த்தை வந்தது. பேத்தி merriment என்று வாசித்தபோது, தூரத்தில் உட்கார்ந்திருந்த நான், 'என்னது மரமண்டையா?' என்று கேட்டேன். உடனே பேத்தியிடம் புறப்பட்டது குபீர்ச் சிரிப்பு. அன்று முழுவதும் நினைத்து நினைத்துச் சிரிப்பு. merriment மரமண்டை ஆகிவிட்டதே! குழந்தைகள் நாள் பூரா சிரித்திருக்க, ஒரே ஒரு வார்த்தை போதுமானதாக இருக்கிறதே என்பது எனக்கு வந்த ஆச்சர்யம்!
 
ஒரு கதைக் கொத்தோடு போனால், அவர்கள் எப்படி மகிழ்வார்கள்? எப்படிப் பூரிப்பார்கள்? பிஞ்சு மனங்களை மகிழ வைக்கும் வாய்ப்பு எப்படிப்பட்ட வாய்ப்பு! குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்களுக்கு யார்தான் நிகர்?
 
நண்பர் முருகேஷுக்கு என் அன்பும் பாராட்டும்.
 
- பேராசிரியர் ச.மாடசாமி.
15.10.2017
சென்னை.
 
எழுத்தாளர் குறிப்பு :  மு முருகேஷ், புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணத்தில் பிறந்தவர். தொழிநுட்ப இயந்திரவியல் படித்தவர். முதுகலை தமிழ் முடித்து, இளமுனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு, வந்தவாசியில் வசித்து வருகிறார். தற்போது சென்னையில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார்.
 
30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். இவரின் 8 புதுக்கவிதை, 7 ஹைக்கூ கவிதை, 10 குழந்தை இலக்கியம், 6 கட்டுரைகள், ஒரு சிறுகதை ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன. மேலும், 3 புதுக்கவிதை, 5 ஹைக்கூ கவிதை, 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.
 
மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் இவரது படைப்புகளுக்காக இதுவரை 20-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார். இலங்கை, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
 
இவரது படைப்புகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகளை 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்ட ஆய்வுசெய்து, பட்டம் பெற்றுள்ளனர். ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 'நிலா முத்தம்' என்ற பெயரில் நூளாக வெளிவந்துள்ளது.
 
2009-இல் பெங்களூருவில் நடைபெற்ற 9ஆவது உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில் பங்கேற்று, உலக அளவிலான ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு வென்றதும், தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத்திட்ட நூல் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றதும், ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் 'குறுங்கவிச் செல்வன்' விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன. 
More Information
SKU Code Akani B 018
Weight in Kg 0.510000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789382810391
Author Name மு.முருகேஷ் - M.Murugesh
Publisher Name அகநி வெளியீடு - Akani Veliyeedu
Write Your Own Review
You're reviewing:அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை - மு.முருகேஷ் - Ammavukku Magal Sonna Ulagin Muthal Kathai - M.Murugesh - Ammavuku Maghal Chonna Mudhal Kadhai

Similar Category Products