Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

அருட்பெருஞ்ஜோதி அகவல் உட்பொருள் திரட்டு - பா.கமலக்கண்ணன் - Arutperunjothi Agaval Utporul Thirattu - Arutperunjyothi Akaval Utporul Thiratu - Ba Kamalakkannan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 379
₹150.00
ஆன்மீகம் நூல்.
 

காகித அட்டை/ பேப்பர்பேக்; 

256 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: ஏப்ரல், 2016.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் அருட்பெருஞ்ஜோதி அகவல் உட்பொருள் திரட்டு, பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 
 
முன்னுரை: 
இராமலிங்கப் பெருமானார் அருளிய திருஅருட்பாவில் அடங்கிய அருட்பெருஞ்சோதி அகவல் உட்பட 6733 பாடல்களையும் சுமார் பத்தாண்டு காலம் ஆய்வு செய்து, ஐந்து தொகுதிகளாக ஞானவிளக்கம் எழுதி வெளியிடும் பேற்றினை இறைவன் எனக்களித்தான். என்னுடைய ஆய்வின் விளைவாக நான் கீழ்க்கண்ட உண்மைகளைத் தகுந்த ஆதாரங்களோடு வெளிக்கொணர்ந்துள்ளேன்: 
 
1.வானிலிருந்து அனுப்பப் பெற்றவருக்கு "இராமலிங்கம்" என்று சைவமும் வைணவமும் இணைந்த பெயரைச் சூட்டியவர் நடராஜபதியே. 
 
2.சிறிய வயதில் தூங்கும்போது கீழே விழாமல் தூக்கி எடுத்தவர் நடராஜபதியே. 
 
3.9 வயது முதல் 12 வயது வரை முருகப்பெருமான் குருவாக விளங்கினார். (முருகன் காட்சி தந்த கண்ணாடி திருஒற்றியூர் பெருமாள்சாமி மடாலயத்தில் இருப்பதை நிழற்படம் எடுத்து வெளியிட்டுள்ளேன்).
 
4.12 வயது முதலே நடராஜபதி இராமலிங்கரை சீடனாக ஏற்று சிவமாலை அணிவித்தார். (நடராஜபதியின் முதல் சீடரான அகத்திய முனிவர் சிவமாலையுடன் விளங்கும் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்சிலையின் படத்தை வெளியிட்டுள்ளேன்). 
 
5.இராமலிங்கருக்கு நடராஜபதி கற்பித்த சிவரகசியம் என்ற நூலைப் பற்றி ஆதாரப்பூர்வமாக விளக்கியுள்ளேன். 
 
6.திருமூலர் அருளிய திருமந்திரத்தில் அடங்கிய, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நந்திதேவர் அருளிய சன்மார்க்கம் பற்றிய 11 பாடல்களை வெளிப்படுத்தி, இவற்றையே நடராஜபதி இராமலிங்கருக்குக் கற்பித்தார் என்று விளக்கியுள்ளேன். 
 
7.நடராஜபதி இராமலிங்கருக்குத் திருவடி தீட்சையளித்தார் என்று வெளிப்படுத்தியுள்ளேன். 
 
8.இராமலிங்கருக்கு நடராஜபதி "நமது பெம்மான்" என்று அடி எடுத்துக் கொடுத்துப் பாடுமாறு கூறியதை வெளிப்படுத்தியுள்ளேன்.
 
9.வேதங்களின் விளக்கமே திருவருட்பா என்று நிறுவியுள்ளேன்.
 
10.சித்தர்களின் வழிவந்த ஒரு சித்தர் இராமலிங்கர் என்று விளக்கியதோடு, சித்தர்களின் பரிபாஷையான "எட்டும் இரண்டும்" முதலானவை இருப்பதை வெளிக்கொணர்ந்துள்ளேன்.
 
11.திருஅருட்பாவின் பாடல்கள் இராமலிங்கரின் உள்ளிருந்து நடராஜபதி பாடுவித்தவை என்பதை வெளிக்கொணர்ந்துள்ளேன்.
 
12.வள்ளலார் என்ற சொல் நடராஜபதியையும் முருகரையும் குறிக்குமாறு அவர் பாடியிருப்பதால் தம்மை வள்ளலார் என்று அழைக்கக் கூடாது என்று கூறியதை வெளிப்படுத்தியுள்ளேன். 
 
13.இராமலிங்கர் சிறிய வயதில் நெல் வியாபாரம் செய்ததையும், ஏழைகளிடம் நெல் விற்று பணம் வாங்கியதற்காக வருந்தி பணத்தை எல்லாம் கிணற்றிலும் குளத்திலும் எறிந்துவிட்டு அவரும் இறுக்கம் இரத்தின முதலியாரும் தற்கொலை செய்துகொள்ள முயன்றதையும் வெளிப்படுத்தியுள்ளேன். 
 
14.நடராஜபதியின் ஆணைப்படி திருஞானசம்பந்தர் சூக்கும தேகத்தோடு இராமலிங்கரின் ஞானத்தவத்திற்கு குருவாக விளங்கினார் என்பதை வெளிப்படுத்தியுள்ளேன்.
 
15.திருஞானசம்பந்தர் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என்ற இராமலிங்கர் வகை வெளிப்படுத்தியுள்ளேன்.
 
16.விநாயகர் முக்கண்ணுடையவர் என்று இராமலிங்கர் கூறியதை வெளிப்படுத்தியுள்ளேன். 
 
17.மாணிக்கவாசகர் சூக்கும தேகத்தோடு இராமலிங்கரின் முன்னால் தோன்றி திருவாசகத்தில் இடம்பெறாத தமிழ்த் தாழிசை என்ற தமது 12 பாடல்களை உபதேசித்ததை விளக்கியுள்ளேன்.
 
18.ஞானத்தவத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களை இராமலிங்கர் வெளிப்படுத்தியுள்ளார் என்று விளக்கியுள்ளேன்.
 
19.இராமலிங்கர் தனகோடி அம்மையைத் திருமணம் செய்து கொண்டு இயல்பான இல்லறம் நடத்தினார் என்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்களைக் காட்டியுள்ளேன். 
 
20.நடராஜபதி, இராமலிங்கரைப் பார்த்து, "எச்சம் பெறேல் மகனே" (பிள்ளை பெற்றுக் கொள்ளாதே) என்று கூறியதை வெளிப்படுத்தியுள்ளேன். 
 
21.இராமலிங்கர், அவருடைய மனைவி, தாயார் அனைவரும் வறுமையால் வாடி ஒரு வேளை மட்டும் கேழ்வரகுக் கூழ் சாப்பிட்டு வந்ததை வெளிப்படுத்தியுள்ளேன்.
 
22.மனைவி, தாயார் எல்லோரும் பட்டினி கிடந்ததைப் பற்றிய பாடல்களை வெளிப்படுத்தியுள்ளேன். 
 
23.வறுமையின் பிடியில் சிக்கியதால் சில நாட்கள் தவம் செய்யாது உணவுண்டு உறங்கியதால் நடராஜபதி அவரைத் தசை எல்லாம் நடுங்கத் தண்டித்ததை விளக்கியுள்ளேன்.
 
24.இராமலிங்கர் சென்னையில் இருந்த காலத்திலேயே தவம் முழுமையடையப் பெற்று சித்தர் என்ற நிலையை எய்தியதை வெளிப்படுத்தியுள்ளேன். 
 
25.இராமலிங்கர் சென்னையில் வசித்த காலத்திலலேயே மனைவியும் தாயாரும் இறைவனடி சேர்ந்ததையும், மைலாப்பூர் முண்டகக்கண்ணி ஆலயத்திற்கருகில் அடக்கம் செய்யப்பட்டதையும் இராமலிங்கர் உள்ளம் உடைந்ததையும், அந்த ஆலயத்தில் இராமலிங்கரின் ஆளுயரச் கற்சிலை அமைந்திருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளேன். 
 
26.மனைவியும் தாயாரும் இறைவனடி சேர்ந்த பின்னர் அண்ணன் பரசுராமப்பிள்ளை சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க விரும்பியதால், அவரை அழைத்துக்கொண்டு மைலாப்பூரிலிருந்து 24-3-1858 புதன்கிழமை அதிகாலையில் கால் நடையாகப் புறப்பட்டதை விளக்கியுள்ளேன். 
 
27.வழியில் அச்சிறுபாக்கம் குப்புசாமிப்பிள்ளை வீட்டில் சிறிது நேரம் இளைப்பாறிய செய்தியை வீட்டின் படத்தோடு வெளியிட்டுள்ளேன். 
 
28.சென்னையில் வசித்த காலத்தில் இளமைக்காலத் தோழர்களாக விளங்கிய இறுக்கம் இரத்தின முதலியார், சிவானந்த புரம் செல்வராய முதலியார், புதுவை வேலு முதலியார் ஆகியோர் படங்களைத் தேடி வெளியிட்டுள்ளேன். 
 
29.ஆறுமுக நாவலர் எழுதிய சைவ சித்தாந்த அடிப்படைக் கொள்கைகள் என்ற நூலில் உள்ளபடி பதி, பசு, பாசம் பற்றி கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் சிதம்பரத்தில் உரையாற்றியதைக் கேட்ட இராமலிங்கர் குறுக்கிட்டு அந்த விளக்கம் திருஞானசம்பந்தர், காரைக்காலம்மையார் மற்றும் திருமூலர் திருமந்திரம் ஆகியவற்றை  மறுப்பதாக உள்ளது என்று கூறி ஆதாரங்களையும் பாடிக்காட்டினார் என்றும் இந்த நிகழ்ச்சியால்தான் ஆறுமுக நாவலர் இராமலிங்கர் மீது விரோதம் கொண்டு, அருட்பா அல்ல மருட்பா என்று எதிர்க்கத் தொடங்கினார் என்றும், சைவ சமயம் இராமலிங்கரை எதிர்க்கவில்லை என்றும் விளக்கியுள்ளேன். 
 
30.நடராஜபதியைப் பற்றித் தாம் பாடவில்லை என்று எதிராவது கூறினால் கையில் மழுவை (பரசுராமர் கையிலிருந்த கோடாலியை) எடுப்பேன் என்று சினத்தோடு இராமலிங்கர் ஆறாம் திருமுறையில் பாடியிருப்பதையும் அதற்கு ஆதாரமாக 1016 பாடல்களையும் நான் வெளிப்படுத்தியுள்ளேன். 
 
31.ஆறுமுக நாவலரின் ஆட்கள் இராமலிங்கருக்கு சொல்லொணாத் துன்பம் கொடுத்த போதெல்லாம் நடராஜபதி வந்து காப்பாற்றியதை வெளிப்படுத்தியுள்ளேன்.
 
32.வடலூரில் இராமலிங்கருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற செய்தியை வெளிக்கொணர்ந்துள்ளேன்.
 
33.மேட்டுக்குப்பம் மணியக்காரர் முத்தியபடையாச்சி இராமலிங்கரைத் தமது ஊருக்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளேன். 
 
34.முத்தியபடையாச்சியின் வாரிசுதாரிடமிருந்து 1867 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதிப்பித்த திருஅருட்பா முதல் நான்கு திருமுறைகள் என்ற நூலின் பிரதியைப் பார்த்து அட்டைப் படத்தை நான் வெளியிட்டுள்ளேன்.
 
35.ஐந்தாம் திருமுறை வல்லபை கணேசர் பிரசாத மாலை பாடல் எண் 11ல் "பெறுவயல் ஆறுமுகன்" என்று காணப்படுவது, சிதம்பரம் செல்லும் வழியில் புவனகிரிக்கருகிலுள்ள வயலூர் என்று கண்டுபிடித்து அங்குள்ள முருகர், விநாயகர் கோயில்களின் படங்களையும் வெளியிட்டுள்ளேன். 
 
36.நடராஜபதி இராமலிங்கரின் சூக்கும சரீரத்தில் தம்முடைய பளிங்குத் திருமேனியைப் பொறுத்தியுள்ளார் என்று வெளிப்படுத்தியுள்ளேன்.
 
37.இராமலிங்கர் மரணமிலாப் பெருவாழ்வு பெருவாழ்வு பற்றிய "நினைந்து நினைந்து' என்னும் தொடக்குமுடைய 28 பாடல்களைப் படித்து, தீபத்தில் தெய்வ பாவனையைச் செய்யுமாறு கூறினார் என்பதை விளக்கியுள்ளேன்.
 
38.ஆடு, கோழி, பன்றி முதலியன பலியிடப்படும் தெய்வங்களே சிறு தெய்வங்கள் என்று கூறியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளேன்.
 
39.இராமலிங்கர் திருஅருட்பாவில் கூறியுள்ள கீழ்க்கண்ட இறை விளக்கங்களை வெளிப்படுத்தியுள்ளேன்.
 
                1.அரு = அரூபமான பரப்பிரம்மம்=பரமபிதா =அல்லாஹ்; 
                2.உரு = உருவமுடைய நடராஜபதி=கபிரியேல்=ஜிப்ரீல்-அலை; 
                3.அருஉரு = ஜீவ சொரூபம் (சிவலிங்க வடிவ ஜோதி சொரூபம்)=பரிசுத்த ஆவி=ரூஹ்.
 
40.முதல் திருமுறை 5 மகாதேவ மாலை பாடல் எண் 17ல் பரப்பிரமமே அல்லா என்று கூறியிருப்பதை விளக்கியுள்ளேன். 
 
41.இராமலிங்கர், ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் புரியும் வரம் பெற்றவர் என்று வெளிப்படுத்தியுள்ளேன். 
 
42.இராமலிங்கர் நெற்றிக்கண் பெற்றார் என்ற செய்தியை வெளிப்படுத்தியுள்ளேன். 
 
43.பஞ்சபூதங்களும் வானுலக தேவர்களும் இராமலிங்கருக்கு ஏவல் செய்யும் வரம் பெற்றனர் என்ற செய்தியை வெளிப்படுத்தியுள்ளேன். 
 
44.பஞ்சபூதங்களும் ஏவல் செய்வதால் அவர் ஜோதியோடு கலக்க முடியாது; கற்பூரம் போல் கரைய முடியாது என்று விளக்கியுள்ளேன். 
 
45.மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையிலிருந்து அணிமா என்ற சித்தியின் மூலம் உடலை அணுப்பிரமாணமாக்கி வெளியேறிவிட்டார் என்று விளக்கியுள்ளேன். 
 
46.இராமலிங்கப் பெருமானார் இறை அமுதம் அளிக்கப்பெற்று, திருமாலை பொருந்தப் பெற்று, ஆழி அளிக்கப்பெற்று, வானுலக அணிகள் அளிக்கப் பெற்று, கங்கணம் அணிவிக்கப் பெற்று, அருட்ஜோதி வழங்கப் பெற்று, செங்கோல் அளிக்கப் பெற்று, வெண்கொற்றக் குடையின் கீழ் நாதாந்த நாட்டின் நாயகராக முடிசூட்டப் பெற்றார் என்பதை 231 சான்றுகளால் விளக்கியுள்ளேன். 
 
47.இரண்டரைக் கடிகை என்பதற்கு 150 ஆண்டுகள் என்று பரிபாஷயை விளக்கி 1874 + 150 = கி.பி.2024க்கு மேல் இராமலிங்கர் வருவதாகக் கூறியுள்ளார் என்று வெளிப்படுத்தியுள்ளேன். 
 
48.இராமலிங்கர் 1864ஆம் ஆண்டில் வேட்டவலம் ஜாமீனுக்குச் சென்றபோது, தலைசிறந்த ஓவியர் அவரை நேரில் பார்த்து வரைந்த ஓவியம் 1928ல் கொல்கத்தா க்ளாஸ்கோ பிரின்டிங் கோ என்ற நிறுவனத்தில் அச்சிட்டு ஜமீன்தாரால் வழங்கப்பட்டிருப்பதை கண்டாச்சிபுரம், குறிச்சி, இரட்டணை ஆகிய ஊர்களில் தேடி எடுத்து வெளிக்கொணர்ந்துள்ளேன். 
 
49.இராமலிங்கப் பெருமானார் ஆர்காடு  மிதியடி அணிந்துள்ள சிலையின் படத்தைத் தேடி எடுத்து வெளியிட்டுள்ளேன். 
 
50.திருஅருட்பாவுக்கு, ஆ.பழகிருஷ்ணப்பிள்ளை 40 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு வெளியிட்ட சுத்த திருத்த செம்மொழிப் பதிப்பே பின்பற்றத் தக்கது என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளேன். 
 
- மேலும் பற்பல.
 
திருஅருட்பா பாடல்களில் அமைந்துள்ள உண்மைகளை எல்லாம் நீண்ட நெடுங்காலமாக ஆய்வு செய்து, நான் வெளிக்கொணர்வதை, சிலர் எதிர்க்கின்றார்கள். அவர்களுடைய கண்டனத்தை உலகம் உணரும் பொருட்டு கீழே பதிவு செய்து உள்ளேன்.
 
சன்மார்க்கத்தின் பெயரால் உண்மைக்கு மாறாகக் கூறப்படும் கருத்துக்களை மறுத்து, ஆதாரப்பூர்வமான உண்மைகளைத் திருஅருட்பா பாடல்களிலிருந்து திரட்டி மக்கள் முன் வைப்பது கணடனத்திற்குரிய குற்றமாகுமா என்று வாசகர்கள் சிந்தித்து உணர வேண்டுகிறேன். 
 
இந்த தவறான நிலை ஏற்படக் காரணம் என்ன?
 
திருஅருட்பா தோன்றி சுமார் 150 ஆண்டுகள் கடந்தும், 6733 பாடல்களிலும் அடங்கியுள்ள உட்பொருளை வெளிக்கொணர முயற்சிக்காமல், கற்பனைக் கதைகளையும் ஆதாரமற்ற வாய்மொழி உபதேசப் பகுதியையும் நம்பியதேயாகும். 
 
இராமலிங்கப்பெருமானாரின் 
பாதசேவகன், 
பா.கமலக்கண்ணன்.
 
பொருளடக்கம்: 
முதல் பாகம்: தத்துவ விளக்கம்:  
01.அகவல் கூறும் இறைவிளக்கம்;  
02.ஏக இறைவனின் அரூபநிலை;  
03.ஏக இறைவனின் அருஉருத் தோற்றமே ஜீவன்;  
04.ஏக இறைவனின் உருவத் தோற்றமே நடராஜபதி;  
05.விண்ணின் விந்தைகள்;
06.காற்றின் ஆற்றல்கள்;  
07.நீரின் ஆற்றல்கள்;  
08.தீயின் ஆற்றல்கள்;  
09.மண்ணின் மகிமைகள்;  
10.ஒன்று முதல் ஆறுவகையான அறிவுடைய உயிரினங்களின் படைப்பு;  
11.படைத்தபின் காத்தல், அடக்குதல், மறைத்தல், அருளல்;  
12.ஞானத்தவத்திற்கு ஆதாரமான சூக்கும சரீரமும் பிரம்மரந்திரமும்;  
13.சன்மார்க்கம் என்றால் என்ன பொருள்?;  
14.இறந்தோர் எழுந்து வருவரோ?; 
 
இரண்டாம் பாகம்: வாழ்க்கை விளக்கம்:  
01.வருவிக்க வந்ததால் தழுவி உணவளிக்கப் பெற்றார்!; 
02.நடராஜபதியே அருட்குருவானார்!; 
03.சாகாக் கல்வி கற்றார்!; 
04.திருமணத்திற்குத் தயங்கியபோது ஆறுதல் கூறப் பெற்றார்!; 
05.அமுதம் அளிக்கப் பெற்றார்!; 
06.வடலூரில் துன்புறுத்தப்பட்டபோது ஆறுதல் கூறப் பெற்றார்!; 
07.ஒன்பது வரங்கள் பெற்றார்!; 
08.நாதாந்த நாட்டின் நாயகரானார்!; 
09.நடராஜபதி மீது போற்றிப் பாமாலை. 
மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் நூல்களின் பட்டியல்.
 
 
ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
More Information
SKU Code VAN B 379
Weight in Kg 0.590000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - Ba.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:அருட்பெருஞ்ஜோதி அகவல் உட்பொருள் திரட்டு - பா.கமலக்கண்ணன் - Arutperunjothi Agaval Utporul Thirattu - Arutperunjyothi Akaval Utporul Thiratu - Ba Kamalakkannan

Similar Category Products