முன்னுரை:
"உன் சரணம் அல்லது ஓர் சரண் இல்லை" - கவிச்சக்கரவர்த்தி கம்பன்.
"தர்மயுத்தத்தில் கர்மயோகியும், ஞானயோகியும்" என்ற தலைப்பில் நான் கட்டுரை எழுதத் தொடங்கினேன். இது நூலாக மாறியது. இதற்குக் காரணம் கம்பனின் கும்பன். ஏனென்று தெரியவில்லை. கும்பன் என் மனதை ஆட்கொண்டான்.
அச்சுறுத்தும் தோற்றத்தையும் அன்பு ததும்பும் உள்ளத்தையும் நான் அவனிடம் கண்டேன். இராமகாதையில் பிறன்மனை நோக்காப் பேராண்மை பற்றியும், சகோரத்துவம் பற்றியும் ஆழ்ந்த கருத்துகள் பதிந்துள்ளன. பொதுவாக இந்தக் காப்பியத்தைத் தியாக சிந்தனைக்கு மேற்கோள் காட்டுவதில்லை. ஆனால் கும்பனைப்போன்ற தியாகி வேறு எந்த இலக்கியத்திலுமில்லை. தேரோட்டியின் மகனைத் துரியோதனை அரசனாக்கினான். ஆன்ம சகோதரனாக்கினான். எனவே கர்ணன் கொண்டது செஞ்சோற்றுக்கடன். கும்பன் இராவணனின் உடன்பிறப்பு. கும்பனுக்கு ஊனும் ஊக்கமும் அளிப்பது சகோதரன் என்ற முறையிலும் அரசன் என்ற முறையிலும் இராவணனின் கடமை. இங்குச் சென்சோற்றுக்கடனுக்கு இடமே இல்லை. ஆனால் கும்பனோ இக்கடனை மீட்க உயிர்தியாகம் அளித்தான். பொதுவாக வாழ்க்கையில் தோல்வியுற்றவர்கள். மற்றவர்களை வாழவிடமாட்டார்கள். இது மனித இயல்பு. வாழ்க்கையில் தோல்வியுற்றவன் பிறரை வாழவைத்தால் அது தெய்வத்தன்மை. இதை நான் கும்பனிடம் கண்டேன்.
வீடணன் எந்தவகையிலும் குறைந்தவன் அல்லன். அவன் நம்பிக்கைக்கு ஒரு மாபெரும் சான்று. நம்பிக்கை என்பது சம்சாரசாரகத்தைக் கடக்க உதவும் தோணி என்று வேதம் கூறுகிறது. வீடணன் இராவணனின் உடன்பிறப்பு. இராவணனின் சாயல் கொண்டவன். இராமனைப் பார்த்ததில்லை. கேட்டுத் தெரிந்ததை மனதில் கொண்டு இந்த அரக்கன் இராமனிடம் சரணடையச் செல்கிறான். அரக்கரினத்தை அறவே வெறுக்கும் வானரக் கூட்டத்திடை வாழும் இராமனைக் காண அஞ்சாமல் செல்கிறான். இராமன் மீது அவன் கொண்ட நம்பிக்கையை மனதில் சுமந்து செல்கிறான். வீடணன் கொண்ட அதிநம்பிக்கைக்குக் கிடைத்த பரிசே வீடண சரணாகதி. இறைவனை நம்பி வாழும் ஒவ்வொரு உயிரனத்திற்கும் கிடைத்த வெற்றி இது.
- டாக்டர்.பிரியா ராமசந்திரன்
உள்ளடக்கம்:
01.முதல் போராட்டம் - அறமா? பாசமா?
02.இரண்டாம் போராட்டம் - வாழ்வதா? வாழ வைப்பதா?
03.மூன்றாம் போராட்டம் - அழிப்பதா? அழிவதா?
04. நான்காம் போராட்டம் - இருப்பதா? இறப்பதா?
05.ஐந்தாம் போராட்டம் - வெற்றியா? புகழா?
06.தர்மயுத்தத்தில் வெற்றி பெற்றது கர்மயோகியா? ஞான யோகியா?
07.கும்பன் குழப்பவாதியா? தியாகியா?
08.வீடணன் சுயநலவாதியா? சதியாகிரகியா?
09.இராவணனை இடித்தற்பொருட்டுப் பெரிதும் ஏற்றம் பெறுபவர் வீடணனே
10.ஆதிகவியின் கும்பகர்ணன்
11.ஆதிகவியின் பல்லவிக்கு கம்பகவியின் கோர்வை
12.ஆதிகவியின் வீடணன்
13.அருணோதயத்தில் அரையிருள் மறைந்தது.
14.கம்பனுக்குப் புகழைச் சேர்ப்பது... புலையுரு மரணமா? தர்மத்தின் சரணாகதியா?
இருவர்பால் உள்ள இருவேறு இயல்புகளையும் நுழைந்து காணும் கம்பருடைய நுண்மாண் புலமை ஆயிரக்கணக்கான பட்டி மண்டபங்களுக்குப் பெருவிருந்து படைத்து வருகிறது. அரக்கர்கோன் தம்பியராகிய கும்பன், அழகிய வீடணன் பற்றிய ஆய்வாக இந்தப் படைப்பு மலர்கிறது.
ஓய்வில்லாத உழைப்பும் தமிழார்வச் செழிப்பும் நாளும் வளர்த்து வரும் திருமகள் திருமதி டாக்டர் பிரியா இராமச்சந்திரன் கம்பர் புலமையில் கலைப் பேரொளியாக நீடிய புகழ் பெற்றுத் தொடர்ந்து தம் இலக்கியப் பணிகளை வளர்த்து வருவதை நான் பாராட்டி மகிழ்கிறேன்.
-பத்மஸ்ரீ ஔவை நடராசன்
கம்பனின் வீடணன், கும்பகர்ணன் என்ற இரு பாத்திரங்களும், ஒத்து பண்பும் எதிர்மறை இயல்பும் கொண்டவை. இவ்விரு பாத்திரங்களும் அறத்தை நேசிக்கினும், வீடணன் தர்மத்திற்காய்த் தனி வழி செல்கிறான். கும்பகர்ணனோ அண்ணன் மேல் கொண்ட பாசத்திற்காய், அழிவைத் தெரிந்தும் அவன் வழியே செல்கிறான். ஒன்று அறத்திற்காய் அன்பைத் துறந்த பாத்திரம். மற்றொன்று, அன்பிற்காய் அறத்தைத் துறந்த பாத்திரம். இவ்விரு பாத்திதிரங்களையும் ஆழக் கற்று ஆராய்ந்திருக்கிறார் டாக்டர் பிரியா இராமச்சந்திரன்.
... ஆனால் நான் சந்தித்த அத்தனை பேரையும் விட, கூர்த்த முனைப்போடு கம்பனைக் கற்றுக் காண முயலும், டாக்டர் பிரியா இராமச்சந்திரன் என்னைப் பெரிதும் வியக்க வைக்கிறார்.
- கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்.
டாக்டர் பிரியா ராமச்சந்திரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 06, 2018 அன்று சென்னையில் நடந்தது. ஜெகத்ரட்சகன் வெளியிட, டாக்டர் முகமது ரேலா பெற்றுக்கொண்டார்.
டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ‘தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞான யோகியும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிடுகிறது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் தலைமை தாங்கினார்.
ஆன்மிக சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் முன்னிலை வகித்தார். டி.கே.எஸ். கலைவாணன் வரவேற்புரையாற்றினார். ‘தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞான யோகியும்’ நூலை முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து நடந்த சிந்தனை அரங்கத்துக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் நடுவராக இருந்தார்.
விழாவில் ஜெகத்ரட்சகன் பேசியதாவது:-
இந்த நூல் தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு மகுடம். பழையதை சொல்ல வேண்டும். அதை புதியதாக, புதுமையாக சொல்ல வேண்டும் என்பது இந்த நூலில் உள்ள அற்புதமான செய்தி.
நூலை பெற்றுக்கொண்டிருக்கிற டாக்டர் முகமது ரேலா தான் தமிழ்நாட்டின் இன்றைக்கு சூப்பர் ஸ்டார். உலகில் இருக்கிற புகழ்வாய்ந்த நம்பர்-1 டாக்டர் யார் என்றால், முகமது ரேலா தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவ்வை நடராஜன் பேசியதாவது:-
தர்மயுத்தம் என்பது அன்றாடம் நடப்பது. அரசியலில் பதவியில் இருப்பவர்கள் கூட அடிக்கடி சொல்வது தர்மயுத்தம் தான். ஆனால் அது தர்மமா? யுத்தமா? என்பது உண்மையிலேயே ஆராயவேண்டியது. தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து வருவது அறம் என்ற சொல் தான். அறம் இல்லாமல் அரசு, பொருள் மற்றும் இன்பம் இல்லை. தமிழின் சாற்றை பிழிந்தால் சொட்டுகிற தேன் துளி அறம் தான்.
தமிழ் ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்துவதாலும், தமிழறிஞர்கள் ஆராய்ச்சி செய்வதாலும் தமிழ் வளரும். ஆனால் என்ஜினீயர்கள், டாக்டர்கள், கட்டிட வல்லுனர்கள், கலைத்திறம் வாய்ந்தவர்கள் என்று எல்லோரும் எப்போது தமிழை வளர்க்க தொடங்குகிறார்களோ, அதுதான் வளர்ச்சி. அதுதான் நமக்கு மகிழ்ச்சியை தருவதாகும் என்றார்.
எழுத்தாளர் பற்றி: டாக்டர். பிரியா ராமசந்திரன், குழந்தை நல சிகிச்சை நிபுணர். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையளிக்க, `ரே ஆஃப் லைட் ஃபவுண்டேஷ'னைத் தொடங்கியவர் டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன்.
வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட அவரது நூல்கள்:
இராமாயணமும் இராமாவதாரமும்;
வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்;
தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞானயோகியும்.