பெண்களுக்கு யோகாசனம் அவசியம்:
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நோயற்ற வாழ்வு பெறப் பெண்கள் முயற்சி எடுப்பது இல்லை. இந்நாளில் வடநாட்டிலும், மேலை நாடுகளிலும் பெண்கள் ஆரோக்கியமாக, அழகாக, திடமாக வாழ யோகாசனத்தைப் பெரிதும் விரும்பிப் பயில்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் சபலர் நம் நாட்டுக்கு வந்து இக்கலையைக் கற்றுச் செல்கிறார்கள்.
சமுதாயத்தில் பெண்களின் பொறுப்பு மிக அதிகமாகிக் கொண்டு வருகிறது. பெண்கள் விஞ்ஞானியாகவும், என்ஜினீயராகவும், ஆசிரியராகவும், அரசியல் தலைவராகவும் ஆண்களைப் போல் சரிசமமாக உழைத்து வாழும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் பெண்கள் போலீஸ் அதிகாரிகளாகவும், கலெக்டர்களாகவும் பொறுப்பில் இருந்து வருகிறார்கள். மேலை நாட்டில் சந்திரமண்டலத்திற்கு அனுப்பப்பட்ட முதல் விஞ்ஞானி யோகாசனம் பயின்ற ஒரு பெண்மணியாவார். கடவுள் பெண்களுக்குத்தான் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெரும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். தவிரவும் வீட்டில் உணவு சமைப்பது முதல் குழந்தைகளைக் கவனிப்பது, கணவருக்கான பணிவிடைகளைச் செய்வது, வீட்டைச் சுத்தமாக வைப்பது போன்ற பல்வேறு பணிகளைப் பெண்களே செய்ய வேண்டியுள்ளது.
"மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் அம்மா" என்று பெண்ணின் பெருமையைப் புலவர் படுவர். பெண்களே இந்நாட்டின் கண்கள் என்பார்கள். மேலும் பெண்களை மலரின் மென்மை, நிலவில் தன்மை, பனியின் வெண்மை, தென்றலின் அருமை, தேனின் இனிமைஎன்றெல்லாம் ஆண்கள் பாடி மகிழ்வார்கள். இத்தனை பெருமை மிக்க பெண்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழ்வது முக்கியம் அல்லவா? இதற்கு யோகாசனம் பெண்களுக்குப் பெரிதும் உதவும்.
பெண்களாகப் பிறந்த ஒவ்வொருவரும், தான் பேரழகியாக வாழ வேண்டும். பிறர் ஏறெடுத்துப் பார்க்கும் பெருமை நிறைந்த பொலிவும் அழகும் பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். நடக்கிறார்கள். ஆண்களைவிட பெண்களே வயதாகிவிட்டாலும் உடலைப் பற்றியும், உடல் அழகைப் பற்றியும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். ஆரோக்கியத்தையும், நிலையான அழகையும் அடைய யோகாசன வழிமுறைதான் சிறந்தது என்பதை வெகு சில பெண்களே அறிந்து ஆனந்த வாழ்க்கை நடத்துகிறார்கள்.
மற்றவர்களோ விவரம் புரியாமல் மனம் போனபடியே முயன்று, இறுதியில் இருந்ததையும் இழந்து ஏக்கப் பெருமூச்சுடன் வாழ்கிறார்கள். இன்றைய நாகரிக உலகில் போலியான ஆடம்பர வாழ்க்கையால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நினைத்து பெண்கள் நடந்து வருகிறார்கள். ஆடம்பர அலங்காரச் செயற்கைப் பொருட்களினால் புற உடலைப் பேணி, தங்களை அலங்காரச் சின்னங்களாக ஒப்பனை செய்து கொள்கிறார்கள். உள்ளத்தில் பலவீனமும், உடலில் ஆரோக்கியமற்றும் வாழ்வதில் என்ன பயன். உடலின் உள் உறுப்புகள் திடமாகவும், மனோபலமும் பெற்றவர்கள்தான் ஆரோக்கியமாக வாழ முடியும். தினமும் ஒரு சில நிமிடங்கள் யோகாசனங்களைச் செய்வதால் இதனைப் பெற முடியும்.
பெண்களுக்கு கவர்ச்சி என்பது, ஒப்பனைகளால் திடீரென்று வந்து பின் விரைவில் மறைந்துவிடும். அழகு என்பது உடலில் இருந்து நிலைத்துவிடுவது. பெண்களுக்குக் கவர்ச்சியைவிட அழகுதான் நிரந்தர சொத்து. வயதானாலும் பெண்களைக் கவர்ச்சியுடனும், அழகுடனும் இருக்கச் செய்வது யோகாசனம் ஒன்றுதான்.
அக்காலத்தில் ஆணும் பெண்ணும் கடுமையாக உழைத்தே தங்கள் வாழ்கைக்குத் தேவையான பொருள்களையெல்லாம் தேடவேண்டிய நிலையில் இருந்தார்கள். அதனால் அக்காலப் பெண்கள் ஆரோக்கியமாக நெடிது இனிது வாழ்ந்தார்கள். தற்காலத்தில் உயர்தர நடுத்தர வகுப்புப் பெண்கள் சாதாரணமாகச் செய்யக்கூடிய அரைத்தல், மாவாட்டல் போன்ற காரியங்களுக்குக்கூட மிக்சியையயும், இயந்திரங்களையும் உபயோகப்படுத்துகிறார்கள். வீடு பெருக்கல், வீட்டைச் சுத்தமாக வைத்தால், பாத்திரங்களைத் தேய்த்தல் போன்ற சிறுசிறு வேலைகளைக்கூட வேலைக்காரியிடம் விட்டுவிடுகின்றனர். ஆகவே பெண்கள் உடலை அபூர்வமாகவே அசைக்கக் கூடிய நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இதன் காரணமாக தற்காலப் பெண்களுக்கு நோய்கள் வருகின்றன; துன்புறுகிறார்கள். மேலும் வருமானத்தில் பெரும் பகுதி மருத்துவச் செலவிற்காகச் சென்றுவிடுகிறது. உடல் கெட்டு துன்புறும்போதுதான் பெண்கள் உடல் நலத்தின் மதிப்பைத் தெரிந்து கொள்கிறார்கள்.
நோய் வந்தபின் கவனிப்பதைவிட நோய் வராமலே தடுப்பது நல்லதல்லவா? நோய் வராமல் ஆரோக்கியமாக வாழ, வருமுன் காப்போன்தான், யோகாசனங்கள் என்பதைப் பெண்கள் அறிய வேண்டும்.
பள்ளியில் நாம் விளையாடிய பந்தாடுதல், ஓடுதல், கயிறுதாண்டுதல் போன்றவற்றை எல்லாம் நாம் வாழ்க்கைப் பாதையில் வந்து விட்ட பின் விளையாடுவது இல்லை. தவிர இவற்றுக்கு நோய் தடுக்கும் சக்தியும் கிடையாது. உடலின் உள் உறுப்புக்களான பிட்யூட்டரி, பினியல் பாடி, தைராய்டு, தைமாஸ், கணையம், நுரையீரல், இருதயம் ஆகியவற்றை சரியாக இயங்க வைக்கும் சக்தி யோகாசனம் ஒன்றுக்குத்தான் உண்டு. மேற்கண்ட கோளங்களைச் சரியாக இயங்க வைக்கும் சக்தி யஸ்திகாசனம், பர்வதாசனம், பாத ஆசனம், பரியங்காசனம், விபரீதகரணி, மச்சாசனம், ஹலாசனம், யோகமுத்திரை போன்ற ஆசனங்களுக்கு உண்டு. இவை பெண்களுக்கு உரிய ஆசனங்கள்.
பெண்கள் வருமானத்திற்கு உட்பட்டு வாழ்க்கை நடத்தப் பழக வேண்டும். ஜம்பமான பூரித்த எண்ணங்கள் நோய்க்கு இடம் கொடுக்கும். எளிய வாழ்க்கை தூய எண்ணங்களை உண்டு பண்ணும். இதற்கான திடமனதை யோகாசனங்கள் மூலம்தான் பெறமுடியும்.
யோகாசனம் எந்த வயதிலும் செய்யலாம். அதிகாலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு, குளித்த பின் வெறும் வயிற்றில் தினமும் 10 நிமிடங்கள் யோகாசனம் செய்தால் போதுமானது. காற்றோட்டமான தனி இடமாக இருந்தால் நல்லது. குறைந்த ஆடையுடன், அரைக்கால் சட்டை, பைஜாமா போன்றவற்றை அணிந்து செய்யலாம். ஆகாரம் உட்கொண்டு 5 மணி நேரம் கழித்து செய்ய வேண்டும். ஆகார விஷயங்களில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியன மிதமாக வைத்துக் கொண்டால் நல்லது. ஒருவேளை கோதுமை உணவு நலம். தினமும் ஏதாவது ஒரு கீரை வகையைச் சேர்க்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் பழங்களை மட்டும் உண்டு வருவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பெண்கள் மாதவிடாய்க் காலங்களிலும், கருவுற்ற 2 மாதங்களுக்குப் பின்னும் யோகாசனங்களைச் செய்ய வேண்டாம்.
யோகாசனப் பயிற்சி என்பது உடலில் உள்ள அவயவயங்களி இனிதாக, எளிதாக, அழகாக, மிதமாக இயக்குவதாகும். கட்டாயப் படுத்தி வேதனையுடன் பயிற்சி செய்தால் எந்தவிதப் பயனையும் காணமுடியாது.
யோகாசனம் செய்வதால் பெண்கள் அடையும் நன்மைகள் எண்ணற்றவையாகும்.
நல்ல உடலில்தான் "நல்ல மனம்" என்பார்கள். அந்த நல்ல மனம் நிறையப்பெற்று இனிய பண்பும் அன்பும் கொண்டு இனிமையாக வாழ யோகாசனம் வழி செய்கிறது.
இத்தனை நன்மையைக் கொடுக்கும் யோகாசனங்களை நபிக்கையோடு பெண்கள் செய்யத் தொடங்க வேண்டும். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தினமும் காலையில் யோகாசனங்கள் செய்த பின்னர் தான் வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள். எந்தக் காரியமும் தொடக்கத்தில் கஷ்டமாக இருப்பினும், பழகிவிட்டால் லேசாக முடியும்.
எனவே என் அருமைச் சகோதரிகளே, தாய்மார்களே, எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்த உங்களின் உடலை யோகாசனங்கள் மூலம் பேணுங்கள். உங்களின் உடலில் பேரழகைக் காணுங்கள். பேரின்பத்துடன் இந்த உலக வாழ்க்கையை அனுபவியுங்கள் என்றும் நோயின்றி நூறாண்டு ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழுங்கள்.
(20.09.1991 அன்று "பெண்கள் ஆரோக்கியமும் யோகாசனமும்" என்னும் பொருள் பற்றி நெல்லை வானொலியில் திருமதி ஆண்டியப்பன் ஆற்றிய உரை.)
ஆசிரியரை பற்றி: யோகாசனப் பேராசிரியர் ஆசன இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசன ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசன ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.