Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஸ்ரீ ரமண மகரிஷி - பாலகுமாரன் - SRI RAMANA MAGARISHI - Balakumaran - Sree Ramana Maharishi - Sri Ramana Maharishi

  Store Review (4)

Contact Seller

Book Type:
Hardbound

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 157
₹390.00
ஆன்மிகம் / ஞானியர் வாழ்க்கை வரலாறு. 
 
கடின அட்டை உறை/ Hardbound; 
360 பக்கங்கள்; 
வெளியீட்டு ஆண்டு : 2017; 
மூன்றாம் பதிப்பு: பிப்ரவரி, 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

குருவின் வழி: 
 
தந்தது உன் தன்னை 
கொண்டது என் தன்னை - சங்கரா 
யார் கொலோ சதுரர்?
 
ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றி எழுதியதும் இந்தத் திருவாசக வரிகள்தான் எனக்குத் தோன்றின. 'நான் என்னை உன்னிடம் கொடுத்தேன். உன்னை அடைந்துகொண்டேன். சங்கரா! நம்மில் யார் கெட்டிக்காரர்?' என்று கேட்கிறார் மாணிக்கவாசகர்.
 
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் 
யாது நீ பெற்றது ஒன்று என்பால்?
 
- என்று தொடர்ந்து வினவுகிறார். உன்னிடமிருந்து அற்புதமான ஆனந்தம் கிடைத்தது. என்னிடமிருந்து உனக்கு என்ன கிடைத்தது? ஒன்றுமில்லையே! ஆக, சங்கரா! நான்தானே கெட்டிக்காரன், நான்தானே சதுரன் என்று வினவுகிறார். 
 
எழுத எழுத மிகப் பெரிய ஆனந்தம் என்னுள் பரவியது. அவரைப் பற்றி படிக்கப் படிக்க உள்ளுக்குள்ளே என்னையும் மீறி ஓர் அமைதி படர்ந்தது. பேச்சு குறைந்து தனித்து இருக்கிற ஒரு தன்மை ஏற்பட்டது.
 
இந்த தேசம் எவ்வளவு பெரிய புண்ணிய பூமி, எப்பேர்ப்பட்ட அற்புத ஆத்மாக்கள் இங்கே சர்வ சாதாரணமாக மக்களுக்கு நடுவே உலவி வந்திருக்கிறார்கள் என்கிற பெருமிதம் எழுந்தது. இந்த மாதிரி, உலகத்தில் வேறு எங்கேனும் ஞானிகள் சஞ்சரித்திருக்கிறார்களா, அல்லது இந்த தேசத்துக்கே உண்டான பெரிய வரமா என்றும் நினைக்கத் தோன்றியது.
 
இவ்வளவு ஞானிகள் இருந்தும் இந்தியா முன்னேறவில்லையே என்று ஓர் ஆங்கிலேயர் பகவான் ஸ்ரீரமண மகரிஷியைக் கேட்டார்.
 
"ஆமாம்! உங்கள் நாட்டைப் போல நாங்கள் முன்னேறவில்லை தான். ஆனால், இங்கு எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதுதானே முக்கியம்" என்று பகவான் ஸ்ரீரமணர் சொன்னார்.
 
வேறு எங்கும், எதிலும் கிடைக்காத நிம்மதி இங்கே, இந்த பூமியில் கிடைக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறார். ஸ்ரீரமணரைப் புரிந்துகொள்வது மிக எளிது. ஆனால், அவர் சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிப்பதற்கு மிகப் பெரிய வைராக்கியம் வேண்டும். நம்மைத் தவறாக வழி திருப்ப இந்த உலகத்தில் பல விஷயங்கள் இருக்கின்றன. அந்த மாதிரி சாதாரண விஷயங்களில் நாட்டம் கொள்ளாமல் ஸ்ரீரமணரைப் புரிந்து கொள்வதோடு அவர் சொன்ன விஷயத்தைக் கடைபிடிக்கக் கடுமையான பயிற்சி வேண்டும். அதற்கும் ஸ்ரீரமண மகரிஷி வழி சொல்லித் தருகிறார். 
 
மூச்சுப் பயிற்சியைப் பற்றி பேசுகிறார். உணவு கட்டுப்பாட்டைப் பற்றி பேசுகிறார். மற்றவரோடு விவகாரங்கள் ஏற்படுத்திக்கொள்ளாமல் தனித்திருப்பது பற்றி பேசுகிறார். அதையும் மிஞ்சி உங்களுக்கு அமைதி வரவில்லையெனில், அவருக்கு எதிரே அமைதியாக உட்கார்ந்திருக்க, ஏதேனும் ஒரு நேரம், ஏதேனும் ஒரு நாள், உங்களை அவர் ஊடுருவிப் பார்த்து, தனக்குள் இருக்கும் அமைதியை, நீங்கள் எந்த முயற்சியும் செய்யாதிருக்கும்போது, உங்களுக்குள் ஏற்படுத்த அருள் புரிகிறார்.
 
ஸ்ரீரமணர் இருந்தபோது இவ்விதம் செய்தார். இப்போது - என்ற கேள்வி வரும். 
 
இப்போதும் ஸ்ரீரமணர் இருக்கிறார். அவர் ஆஸ்ரமத்தில், அவருடைய வாக்கியங்களில், அவரைப் பற்றிய புத்தகங்களில், மென்மையாகப் புன்னகை புரியும் அவருடைய படங்களில்கூட பகவான் ஸ்ரீரமணர் இருக்கிறார்.
 
அந்த மகா சக்தி இந்த இடத்தைவிட்டுப் போகவில்லை. இதை எழுதியபோது அவர் என் எதிரே உட்கார்ந்து ஊடுருவிப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. அவருடைய சொற்களின் மூலம் உள்ளுக்குள் அமைதி ததும்புவதை உணர முடிந்தது. இது, நானே அவரைக் கண்டு உணர்ந்து எழுதியது அல்ல. அவரைப் பற்றி பல சான்றோர்கள் சொல்லியிருக்கிற விஷயங்களைத்தான், அவர்கள் எழுதிய புத்தகங்களை வைத்துத்தான், அதிலிருந்து விஷயங்களை எடுத்துத்தான் உங்களுக்குப் பரிமாறினேன்.
 
பகவான் ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றி மிகப் பெரிய தொகுப்புகளை ஸ்ரீரமணாஸ்ரமம் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் தொகுத்து எட்டு, தனி புத்தகங்களாக விற்பனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அந்தப் புத்தகங்களைப் படிக்கும்போதும் அதிலுள்ள அற்புதமான கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும்போதும் மனம் பழைய கந்தாஸ்ரமத்துக்கே போய்விடுகிறது. பகவான் ஸ்ரீரமணருக்குப் பின்னே அருணாசலசிவ என்று பாடிக்கொண்டு நடக்கிற எண்ணம் வருகிறது. அடடா. இதுதான் செய்தி என்று, ஆணி அடித்தது போல பல விஷயங்கள் புத்திக்குள் இறங்குகின்றன. உள்ளுக்குள் அவரை வைத்துப் போற்றுகிற தன்மை வருகிறது.
 
புத்தகங்களின் மூலமாக மக்களின் மனதை மாற்றுகிற காரியத்தை ஸ்ரீரமணாஸ்ரமம் செய்துகொண்டிருக்கிறது. ஆனந்த விகடன் குழுமம் எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க, அந்தப் புத்தகங்களிலிருந்து விவரங்களை எடுத்து என் நடையில் உங்களுக்குப் பரிமாறினேன்.
 
பால் பிரண்டன், "இவை யாவும் என் செய்தி அல்ல. பகவான் ஸ்ரீரமணருடையது. நான் வெறும் தூதுவன் மட்டுமே. ஒரு விளக்கிலிருந்து ஒளியை எடுத்து இன்னொரு விளக்கை ஏற்றுவதைப் போல இந்தக் காரியத்தைச் செய்தேன்" என்று மிக அழகாகச் சொல்கிறார். அதுவேதான் என் பணியும்.
 
இதற்காக பகவான் ஸ்ரீரமணருக்கும், அவர் அமைத்த ஸ்ரீரமண ஆஸ்ரமத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
என்னுள் அவர் ஏற்படுத்திய மாற்றம், மிகவும் சந்தோஷத்தை சிலிர்ப்பை, அந்தமொன்றில்லாத ஆனந்தத்தைக் கொடுத்தன. உங்களுக்கும் இவை கிடைக்கவேண்டும் என்று பகவான் ஸ்ரீரமணரையே தாள் பணிந்து பிரார்தித்துக்கொள்கிறேன்.
 
ஆனந்த விகடன் குழுமம் எனக்கு இந்த வாய்ப்பைவழங்கியமைக்குக் கனிவான அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பகவான் ஸ்ரீரமணர் எங்கும் இருப்பவர்; எப்போதும் இருப்பவர்; அழிவே இல்லாதவர். அது நிரந்தர சூரியன். பாரத தேசத்தின் மிகப் பெரிய பொக்கிஷம் பகவான் ஸ்ரீரமனர். அந்த ஒளியை நமக்குள் ஏற்றிகொள்ள நாம்தான் முயற்சிக்கவேண்டும். பகவான் ஸ்ரீரமணரைப் படித்து, ஸ்ரீரமணரை உணர்ந்து, ஸ்ரீரமணரின் வழியைப் பின்பற்றினால் இந்த முயற்சி எளிதில் பலிதமாகும். குருவின் வழிதான் ஞானத்தின் வாசல். தனி மனித ஞானமே உலகத்தில் மேன்மை!
 
 - பாலகுமாரன்.
 
--------------------------------------------------------------------------------------
 
ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெரிந்தவுடன், பலர் அவரைத் தங்கள் கோணத்தில் பார்த்தனர். இறைவனை அடைய வேண்டும் என்று பக்குவப்பட்டவர்கள்கூட இறைவனை சீக்கிரமே அடைந்திட அவரை நாடினர். ஆனால், அத்தகைய அவசரக்காரர்களுக்கு ரமணர் இசைந்து கொடுக்கவில்லை. உள்ளத்தில் உண்மையாக இருந்தவர்களும், அப்படி உண்மையாக இருந்து யோகத்துக்குப் பக்குவப்படாதவர்களும் அவரிடம் பயப்பட்டதே இல்லை! ஞான மார்க்கமும், வைராக்கியமும் சிறந்தவைதான். அதன் வழியாக சீக்கிரத்தில் இறைவனை அடையலாம் என்றாலும் அது ஆயிரத்தில் ஒருவருக்கே வாய்க்கும். அதற்கு பக்குவப் படாதவர்களுக்கு பக்தி மார்க்கத்தையும், குரு சேவை மார்க்கத்தையும் வலியுறுத்தியவர் ரமணர். ஆகவேதான் கொஞ்சம் அகங்காரம் உள்ளவர்களுக்கும், மனத் தெளிவு இல்லாதவர்களுக்கும் அவருடைய செயல் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. எது எப்படியிருந்தாலும் அவருடைய சந்நிதியில் உட்கார்ந்தவர்கள் மன நிம்மதியை அடையாமல் போனது இல்லை என்பதே அந்த மகானின் கருணை வெள்ளம். இவை அனைத்தையும் தனக்கே உரிய எழுத்து வன்மையுடன் சக்தி விகடனில் தொடராகப் படைத்தார் பாலகுமாரன். அதன் தொகுப்பாகிய இந்த நூலின் மூலம் ரமணர் என்ற இறைவனுடன் வாசகர்கள் கலந்து பேரின்பம் அடையலாம் என்பது நிச்சயம். அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால்..? என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான்.
 
எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.’
 
இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.
 
“இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும்.
 
ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும்.
 
எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன் “. வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.
 
வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.
 
‘அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான்
 
உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.’ இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று.
 
நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று.
 
இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.
 
அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது.
 
மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது
வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.
 
மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது.
 
தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன.
 
அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, ‘நான்’ என்ற அகந்தையும்
உள்ளே விழுங்கப்பட்டது.
 
‘நான்’ என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம்,
 
இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
 
மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது.
 
முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே.
 
அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.
 
திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.
 
தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.
 
‘என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு’ ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.
 
‘ உள்ளே இருப்பது நான். அதுதான் நான்’ ஒருபடி இறங்கினான்.
 
‘இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல’
ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.
 
‘உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.
 
ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. ‘நான்’ என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது,
 
எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்..? ‘ பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.
 
‘ இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா’
 
அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான்.
அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது,
 
சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான்.
 
மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.
 
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.
 
வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது.
 
பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.
 
வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம்
எல்லாம் நனைத்தது.
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

More Information
SKU Code TMN B 157
Weight in Kg 0.070000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் THIRUMAGAL NILAYAM
Write Your Own Review
You're reviewing:ஸ்ரீ ரமண மகரிஷி - பாலகுமாரன் - SRI RAMANA MAGARISHI - Balakumaran - Sree Ramana Maharishi - Sri Ramana Maharishi

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran