Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பொன்னியின் புதல்வர் (பேராசிரியர் கல்கியின் வாழ்கை வரலாறு) - சுந்தா - Ponniyin Puthalvar (Perasiriyar Kalkiyin Vazhkai Varalaru)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Hardbound

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 546
₹450.00

வாழ்க்கை வரலாற்று நூல். 

கெட்டியான அட்டை; 

936 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: டிசம்பர், 1976; 

மூன்றாம் பதிப்பு: ஏப்ரல், 2013.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் பொன்னியின் புதல்வர் (பேராசிரியர் கல்கியின் வாழ்க்கை வரலாறு), சுந்தா அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 
 
கல்கி புனைந்தளித்த கதைகளைப் போலவே அவருடைய வாழ்க்கையும் சுவைமிக்கதாய் இருந்தது. அதற்கு இணையான சுவை கொண்டது இவ்வரலாறு. 
 
அவருடைய வாழ்க்கையை வர்ணிக்கும் இதில், அவர் வாழ்ந்த காலத்து வரலாறும் இணைந்துள்ளது... அவரே பங்குகொண்ட விடுதலைப் போராட்டங்கள், சமூகச் சீர்திருத்த இயக்கங்கள், தமிழ் இலக்கிய வளர்ச்சி, தென்னகக் கலைகளின் மறுமலர்ச்சி முதலிய யாவும் அடங்கிய வரலாறு.
 
இதன் தொடர்பாக, விதவித மாந்தர் பற்றிய அபூர்வமான குறிப்புக்கள்ல் 
 
இன்னும், பேனா வீரராய் அவர் தொடுத்த போர்கள்; 
 
பத்திரிகாசிரியராய் அவர் ஆற்றிய பணிகள்; 
 
இலக்கியப் படைப்பாளராய் அவர் புரிந்த சாதனைகளில் அந்தச் சாதனைகளின் மூலாதாரங்கள்.
 
ஒருமுகமான ஈடுபாட்டுடன் நாலாண்டுக்கு மேலாக நூலாசிரியர் உழைத்ததன் பலன். பலரைப் பேட்டி கண்டும், பல இடங்களைச் சுற்றிப் பார்த்தும், பல புத்தகங்களை ஆராய்ந்தும் உருவாக்கிய நூல்.
 
தனித்தனிப் பொருள் அல்லது நிகழ்ச்சியைத் தனித்தனிக் கட்டுரை வடிவில் அத்தியாயங்களை வகுத்தும், அவற்றின் பல பகுதிகளைக் கல்கியின் சொற்களிலேயே பொறுத்தியும், தனியானதொரு உத்தியுடன் இயற்றிய இலக்கியம்.
 
பொது வாசகர்கள் படித்து மகிழ்வதற்கும், பல துறை ஆராய்ச்சியாளர்கள் துணையாகக் கொண்டு பயனடைவதற்கும் உரிய நூல்.   
 
ஆசிரியர் முன்னுரை:  
இந்த வரலாற்றின் நாயகர் பற்பல புனைபெயர்களைத் தமக்குச் சூட்டிக் கொண்டார். அத்துடன், பிறருக்கும் பாராட்டுப் பெயர்களையும் பட்டப் பெயர்களையும் புனைந்து சூட்டினார். 'பொன்னியின் செல்வன்' என இராஜராஜ சோழனுக்கு அவர் சூட்டிய பெயர் சிறப்பானதோர் உதாரணம். இந்தப் பெயரையே சற்று மாற்றி, எத்தனையோ பெயர்களுடன் இன்னும் ஒன்றாகக் கல்கிக்குச் சூட்டி, அதை இந்த வரலாற்றின் மகுடமாக வைத்திருக்கிறேன். பொன்னி நாட்டில் பிறந்து வளர்ந்தவர்  என்ற காரணத்தால் இந்தப் பெயர் என்பது சாதாரணமாய்ச் சொல்லக் கூடிய பொருத்தம். பொன்னியாம் காவேரியின் அருளால் சோழநாடு பெற்ற வளம், அந்த வளத்திலே கொழித்த வனப்பு, அவை இரண்டினாலும் செழித்த கலைகள் - இவற்றையெல்லாம் கல்கி அனுபவித்துப் போற்றி எழுத்திலே படைத்தளித்தார் என்பது சிறப்பாகச் சொல்ல வேண்டிய பொருத்தம்.
 
இந்த வரலாற்றை எழுதுவதற்கு எவ்வித உத்தியைக் கையாண்டுள்ளேன் என்பது, இதைப் படிக்கையில் தானாகவே வாசகர்களுக்குப் புலனாகும். ஆயினும் முன்கூட்டியே சில குறிப்புகளை மட்டும் சொல்லவேண்டியது அவசியமாகிறது - காலப் பிணைப்பை அல்லாமல் கருத்துப் பிணைப்பைக் குறியாகக் கொண்டு இந்த வரலாற்றை அமைத்திருக்கிறேன். நிகழ்ச்சிகளையும் செயல்களையும், அவற்றின் காரணங்களுடனும் பலன்களுடனும் இணைத்து வர்ணித்திருக்கிறேன். இப்படி வர்ணிப்பதற்கு, முன்னிருந்து பின்னும், பின்னிருந்து முன்னும், மையத்திலிருந்து இரு காலமும் நோக்குவது அவசியமாகும். ஒரே நாடகத்தில் வெவ்வேறு பாகங்களை ஏற்கும் ஒரு நடிகரைப் போல் கல்கி வாழ்ந்ததால், அவருடைய விதவித வடிவங்களையும் வண்ணங்களையும், குணக் கூறுகளையும் பண்புகளையும், தக்கபடி பகுத்தோ தொகுத்தோ காட்டுவதற்காக இத்தகைய முறையைக் கையாண்டுள்ளேன். இதன் காரணமாய், அத்தியாயத்துக்கு அத்தியாயமும் சரி, ஓர் அத்தியாயத்தின் உள்ளேயும் சரி - சிலவற்றைத் தவிர - காலத் தொடர்ச்சி இராது. ஒவ்வோர் அத்தியாயத்தையும், அதன் தலைப்பு குறிப்பிடும் பொருளை 'ஆலாபனை' செய்யும் தனிக் கட்டுரையாகக் கருத வேண்டும்.
 
இவ்விதமான "தனிக் கட்டுரைகள்" சிலவற்றில் ஒரு நிகழ்ச்சி அல்லது அனுபவத்தை, எழுத்தாளர் கல்கி எப்படி எழுத்திலே ஆண்டார் என்பதைக் காட்டும் நோக்கத்துடன் சில மாதிரிகள் தந்துள்ளேன். அவருடைய படைப்பு, மனம், சிந்தனைப் போக்கு, எழுத்து நடை - இவற்றை ஒருங்கே காண்பதற்கு இவை வகை செய்யும்.
 
யாருடைய வாழ்க்கையையும் ஓரளவுக்குத்தான் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த மட்டுப்பாடு பற்றிக் கல்கியே, "பவானி பி.ஏ., பி.எல்." என்ற தமது கதையின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.
 
சாதாரணமாய் வாழ்க்கையின் வெளிப்படையான நிகழ்ச்சிகள்தாம் நமது கவனத்தைக் கவருகின்றன. நாம் பார்க்கும் வெளி உலகத்துக்குப் பின்னால், மனோலோகம் ஒன்று இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம். ஆற்று வெள்ளத்திலே மேலே மிதந்து வரும் நுரைத் திரள்களும் உதிர்ந்த மலர்களும் குப்பை கூளங்களும் மட்டுமே நம் கண்ணில் படுகின்றன. ஆனால் ஜலப்பரப்பின் அடியில் உள்ள சுழிகளையும் சுழல்களையும் நாம் அறிவதில்லை. தினந்தோறும் நாம் பார்த்துப் பழகி வரும் மனிதர்களைப் பற்றி நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறோம். உண்மையில் அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியமற்ற, வெளிப்படையான அம்சங்கள்தான் நமக்குத் தெரிவது. அவர்களுடைய உள்ளத்தில் குமுறும் ஆசாபாசங்கள், விரோத வைஷம்யங்கள், இன்ப துன்பங்கள் - இவை ஒன்றும் நமக்குத் தெரியாது.
 
நமது வரலாற்று நாயகரின் வாழ்க்கைக்கும் இது பொருந்தும். ஆனால் அவர் தமது மன உலகத்தை நேர்முகமாயும் மறைமுகமாயும் தமது எழுத்தின் மூலம் ஓரளவு காட்டியிருப்பதால், அந்த அளவுக்கு நாம் அதை நமது கண்ணோட்டத்தின் ஆற்றலைப் பொறுத்துப் புரிந்து கொள்ள முடியும்.
 
திரு.ராஜேந்திரன் தமது அணிந்துரையில் சொல்லியிருப்பதைப் போல், சுவை மிக்க கதைகள் பலவற்றை எழுதிய கல்கியின் வாழ்க்கையே சுவை மிக்கதொரு கதையாய் இருந்திருக்கிறது. பலரும் உவந்து படிக்கும்படி சுவையுள்ளதாய்ப் "பொன்னியின் புதல்வர்" அமைந்ததற்கு இதுவே பெரிதும் காரணம். இக்கதையைத் தொகுத்துச் சொன்னது மட்டும்தான் என்னுடைய பங்கு.
 
இந்த வரலாற்றை எழுதக் கிடைத்தது அரியதொரு வாய்ப்பு. இந்த வாய்ப்பினை எனக்கு அளித்ததற்காகக் "கல்கி" அதிபர் திரு.சதாசிவத்துக்கும் கல்கியின் குமாரர் திரு.ராஜேந்திரனுக்கு முதலில் நன்றி செலுத்துகிறேன்.
 
விடுதலைப் போராட்டம், பத்திரிகைப் பணி, பொதுத் தொண்டு முதலியவற்றில், தாமும் கல்கியும் இணைந்து இயங்கியது பற்றிய தகவல்களை யெல்லாம் திரு.சதாசிவம் எனக்குத் தெரிவித்தார். அவருடைய நிறுவனத்தாரும் எனக்கு வெகுவாக உதவி செய்தார்கள்.
 
திரு.ராஜேந்திரன், தம் தந்தையாரின் வரலாற்றைத் தாமே எழுத எண்ணி அதற்கெனப் பெரும் அளவில் திரட்டி வைத்திருந்த பத்திரிகை வெட்டுகள், புத்தகங்கள், கடிதங்கள் முதலியவற்றை எனக்கு உதவினார். பின்னர் நானாகப் பலவற்றைத் தேடித் திரட்டுவதற்கும் துணையாய் இருந்தார். நான் பார்க்க விரும்பிய இடங்களுக்குத் தாமே என்னை அழைத்துச் சென்றார். (ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கையில், சில மாத காலம் நான் நோயுற்றிருந்தபோது, ஒரு மகனைப் போல் அவர் என்னைக் கவனித்துக் கொண்டதையும் இங்கே சொல்ல வேண்டும்.)
 
கல்கியின் சொந்த வாழ்க்கை பற்றிய விவரங்களை அவருடைய குடும்பத்தாரும் உறவினர்களும் தெரிவித்தார்கள்.
 
அவருடைய பாலப் பருவம் இளமைக் காலம் பற்றிய தகவல்களை, ஃபிஜித் தீவிலுள்ள சுவாமி ருத்ரானந்தாவும், மாயூரத்தில் வசிக்கும் திரு.ஆர்.கே.சுப்பிரமணியபிள்ளையும், நேரிலும் கடிதங்கள் மூலமும் தெரியப்படுத்தினார்கள். இவர்களுடன் சேர்க்க வேண்டிய இன்னும் இருவர், திருச்சியில் கல்கியின் பள்ளித் தோழர்களாய் இருந்த திருவாளர்கள் பி.ஜி.பாலகிருஷ்ணன், எம்.டி.சீனிவாசன்.
 
உப்பு சத்தியாக்கிரகத்தின் கல்கி எழுதித் திரு.சதாசிவத்தின் துணையுடன் வெளியிட்ட இரகசியப் புத்தகங்களில் இரண்டை மன்னார்குடியிலிருந்து திரு.சி.வயி.இராமசாமி அனுப்பி வைத்தார்.
 
ராஜாஜியின் குமாரர் திரு.ஸி.ஆர்.நரசிம்மன் தம் தந்தையாருக்குக் கல்கி எழுதிய கடிதங்களில் சிலவற்றைக் கொடுத்து உதவினார். டி.கே.சி.க்குக் கல்கி எழுதிய கடிதங்களை, அன்னாரின் பேரர் திரு.தீப.நடராஜன் பிரதி எடுத்துக் கொள்ளக் கொடுத்தார். விட்டலாபுரம் திரு.வி.எஸ்,வேங்கடாச்சாரி சில கடிதங்களுடன் "துணைக் கல்கி" இதழ்களையும் கொடுத்து உதவினார்.
 
கல்கியின் கட்டுரைகளும் அவரைப் பற்றிய அபூர்வமான சில விஷயங்களும் அடங்கிய "வெள்ளிமணி"த் தொகுப்புகளைத் திரு.சாவி கொடுத்து உதவினார். மற்றும் முக்கியமான பல தகவல்களையும் தெரிவித்தார்.
 
கல்கி இலக்கியத்தில் நன்கு தேர்ந்தவரான திரு.டி.எஸ்.ரங்கராஜன் இந்த வரலாற்றுக்குப் பயன்பட்ட யோசனைகள் சிலவற்றைத் தெரிவித்தார்.
 
அரிய நூற்களஞ்சியம் ஒன்றைக் கோட்டையூரில் சேமித்து வைத்திருக்கும் திரு.ரோஜா முத்தையா எனக்கு உதவியவற்றில் முக்கியமானவை. "சாரதையின் தந்திரம்" முதற் பதிப்புப் பிரதியும் சில அபூர்வக் கடிதங்களும்.
 
ஆனந்த விகடன் அலுவலகத்திலும் மறைமலையடிகள் நூல் நிலையத்திலும், பல வாரங்கள் தொடர்ந்து நான் ஆராய்ச்சி நடத்துவதற்கு வசதி செய்து கொடுத்தார்கள்.
 
புத்தக வெளியீட்டுத் துறையில் அரிய சாதனைகள் புரிந்து வரும் திரு.வானதி திருநாவுக்கரசு, ஒரு பெருமைப் பதிப்பாக இந்நூலைக் கொண்டு வந்துள்ளார். இதில் இவர் காட்டியுள்ள தனி ஆர்வத்துக்கு, அமரர் கல்கியின்பால் இவர் கொண்டுள்ள பெருமதிப்புடன் விசுவாச உணர்ச்சியும் ஒரு காரணமாகும். இதன் விவரம் இந்த வரலாற்றிலேயே உரியபடி பதிவாகியுள்ளது.
 
இந்த வரலாறு கல்கி இதழ்களில் வந்தபோது, ஓவியர் கல்பனா ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு புதுவிதமாய்ச் சித்திர ஜோடனை செய்து, என் எழுத்துக்கு எழிலூட்டினார். இப்போது இவரது கலைத்திறமை இந்தப் புத்தகத்துக்கும் அழகூட்டியிருக்கிறது.
 
எனது இளைய இலக்கிய நண்பர் "சுப்ர.பாலன்", மூன்று மாத காலம் அக்கறையுடன் உழைத்து, இந்நூலின் முக்கியமானதொரு பகுதியான குறிப்பகராதியைத் தொகுத்துக் கொடுத்தார். அத்துடன், பக்க வடிவிலான அச்சுத் தாள்களைத் திருத்துவதில் எனக்கு வெகுவாய் உதவி செய்தார்.
 
தனியாகவும் தெளிவாகவும் மேற்கோள் பகுதிகள் புலனாகும் விதத்தில், அவற்றை உள்ளடக்கி (Indenting) அச்சடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை, ஜீவன் அச்சகத்தார் சீராக நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்கள். நான் திரும்பத் திரும்ப செய்த திருத்தங்களையும் அவர்கள் பொறுமையுடன் நிறைவேற்றி இப்புத்தகத்தை நல்லபடியாய் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.
 
இவர்கள் எல்லாருடைய உதவிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் பெரிதும் நன்றி பாராட்டுக்குகிறேன். 
 
இன்னும் பலரும் என் நன்றிக்கு உரியவர்கள் - என் வேண்டுகோளின் பேரிலோ தாமாகவோ பல தகவல்களை எனக்குத் தெரிவித்தவர்கள்; நூல்கள், பழைய பத்திரிகைப் பிரதிகள், படங்கள் முதலியவற்றைக் கொடுத்தவர்கள். அவ்வப்போது திருத்தங்கள் தெரிவித்தவர்களும் சிலர் உண்டு.
 
இவர்களுடைய பெயர்களை எல்லாம் இந்நூலின் இறுதியில் முதல் இணைப்பாகச் சேர்த்துள்ளேன்.
 
கல்கியின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் இந்த வரலாற்றில் சேர்த்துக் கொள்ளவில்லை. அப்படிச் சேர்த்துக் கொள்வது சாத்தியமும் அல்ல. இதே போல், கல்கியுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் நான் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டவர்களிலும் - அவர்களில் சிலர் தனித் தனி வரலாற்றுக்கு உரியவர்களாய் இருந்தும் - இந்த வரலாற்றுக்குப் போதுமான அளவு மட்டுமே இடம் பெற்றுள்ளார்கள். இந்த மட்டுப்பாடு புரிந்து கொள்ளக் கூடியதே.
 
எழுத்து வடிவிலும் வாய் மொழியாயும் கிடைத்த தகவல்களில், உண்மையானவை என ஆய்ந்து தேர்ந்தவற்றை மட்டுமே நான் பயன்படுத்திக் கொண்டேன். சந்தேகத்துக்கு இடமானவற்றை - அவை எவ்வளவு சுவையுள்ளனவாய் இருப்பினும் - அறவே தவிர்த்துள்ளேன். இத்துடன், சில இடங்களில் முழு உண்மையைச் சொல்வதையும் தவிர்த்துள்ளேன். இந்தக் கட்டுப்பாடும் புரிந்துகொள்ளக் கூடியதே. 
 
இந்தக் கட்டுப்பாடும் சரி, இன்னும் சில நெறிமுறைகளும் சரி, நானே விதித்துக் கொண்டவை. மற்றபடி, யாராலும் எதுவாலும் பாதிக்கப்படாமல் சுயேச்சையாய் இயங்கி, என் தனிப் பொறுப்பில் இந்த வரலாற்றை எழுதி இருக்கிறேன்.
 
கல்கிப் பத்திரிகையில் ஒரு தொடராய் வந்த இந்த வரலாற்றை, புத்தகமாய் அச்சடிக்கக் கொடுப்பதற்கு முன்னால், முழுதுமாய் மறுபார்வையிட்டுப் பதிப்பித்தேன். சில பிழைகளைத் நிறுத்தினேன்; சில பகுதிகளை விளக்கினேன்; வேறு சிலவற்றைச் சுருக்கினேன். புதிதாகச் சேர்த்த தகவல்களும் சில உண்டு.
 
இந்த வரலாற்றைத் தொகுத்து எழுதும் பணியில், மற்றெல்லோரையும்விட மிக அதிகமாகக் கல்கியே எனக்கு உதவி செய்திருக்கிறார் - தம்முடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் பற்றித் தாமே நிறைய எழுதி வைத்ததன் மூலம் செய்துள்ள உதவி இது.
 
அவருடைய ஆதரவினாலும் செல்வாக்கினாலும் நான் வெகுவாகப் பயன் அடைந்தவன். இந்தப் பயனுடன், இந்த வரலாற்றை எழுதியதன் மூலம், அவருடைய பெயருடன் எனது பெயரை இணைத்துக் கொண்ட பேற்றினையும் அடைந்திருக்கிறேன்.
 
நன்றிப் பெருக்குடன் அன்னாரின் நினைவைப் போற்றி அஞ்சலி செய்கிறேன்.
 
சுந்தா 
15-12-1976. 
 
உள்ளுறை: 
 
முதல் பாக அத்தியாயங்கள்: 
01.கல்கி என்ற பெயர்;  
02.மற்றப் புனைபெயர்கள்;  
03.பிறந்த ஊர்;  
04.பிறந்த காலம்;  
05.ஆரம்ப குரு;  
06.விளையாடாப் பிள்ளை! ; 
07.அகக் கடலோசை;  
08.பால பாகவதர்;  
09.நாவல் மோகம்;  
10.பால்ய நண்பர்கள்;  
11.கிராமத்திலிருந்து திருச்சி; 
12.சிறந்த மாணாக்கன்;  
13.அண்ணலின் ஆணை;  
14.காந்தி தரிசனம்;  
15.முதல் சிறைவாசம்;  
16.தியாகசீலரும் கவிக்கொண்டலும்;       
17.திருச்சியிலிருந்து சென்னை;  
18.நவசக்தி நாட்கள்;  
19.முடிந்த வரனும் முறிந்த வரன்களும்;  
20.நடந்த கல்யாணமும் நடத்திய கல்யாணங்களும்;  
21.தேனீ திரட்டியவை;  
22.சத்திய சோதனை;  
23.சென்னைக் குடித்தனம்;  
24.கபாலீச சைதன்யர்;  
25.முதல் இரண்டு நூல்கள்;  
26.கை மாறிய சஞ்சிகை;  
27.சென்னையிலிருந்து திருச்செங்கோடு;  
28.ஆசிரம வாழ்க்கை;  
29.மதுவிலக்கு;  
30.விமோசனம்;  
31.உப்பு சத்தியாக்கிரகம்;  
32.இரண்டாவது சிறைவாசம்;  
33.உல்லாசப் பயணம்;  
34.மீண்டும் சென்னை;  
35.பொன்னியும் பொருனையும்;  
36.இலக்கிய விவாகம்;  
37.நீலகிரி;  
38.தமிழ்த் தாத்தா;  
39.வட்டத் தொட்டி;  
40.புகழ் பெற்ற வீடு;  
41.முத்தையன் கதையின் கதை;  
42.சிவகாமியின் ஜதிகள்;  
43.மாமல்லபுரம்;  
44.தெய்வமாக் கலை;  
45.பிரசார எழுத்தாளரா ?; 
46.தேசிய எழுத்தாளர்;  
47.சிரிப்புக்குச் சிறப்பு;  
48.கர்நாடக விஜயம்;  
49.கர்நாடகத்தின் கேலி;  
50.இசைக்கு இசைந்த நடை;  
51.முன்னோடி அனுபவங்கள்;  
52.புது மலர்கள்;  
53.குற்றாலம்;  
54.பாரதி விவாதம்;  
55.முதல் இலங்கைப் பயணம்;  
56.தியாகபூமி;  
57.அலை வரிசைகள்;  
58.விடுதலைப் போராட்டம்;  
59.பொல்லாத நாற்பது;  
60.மூன்றாவது சிறைவாசம்.  
 
இரண்டாம் பாக அத்தியாயங்கள்: 
01.சொந்தப் பத்திரிகை 
02.துணிவும் துணையும் 
03.தமிழிசை இயக்கம் 
04.மெய்க் காவல் 
05.ஆகஸ்டுப் புரட்சி 
06.திரைப்படத் தூய்மை 
07.பழைமையும் புதினமும் 
08.கலைக் காணிக்கைகள்;  
09.நெஞ்சு பொறுக்குதில்லை;  
10.நெஞ்சு குளிர்ந்தது;  
11.பாட்டுத் திறம்;  
12.பகுத்தறிவுவாதிகள்;  
13.புன்னகைப் பூக்கள்;  
14.பரிகாசக் கலை; 
15.உண்மையும் கதையும்;  
16.மூலத்தன்மை;  
17.சுதந்திர ஆனந்தம்;  
18.பாரதி புகழாலயம்;  
19.கல்விப் பிரச்னை;  
20.விதவிதப் பயணங்கள்;  
21.காந்திக்கு ஒரு கோயில்;  
22.மகத்தான நிகழ்ச்சி;  
23.மங்கள நிகழ்ச்சி;  
24.மீண்டும் மரகதத் தீவு;  
25.கீர்த்தி விலாசம்; 
26.நூல் வரிசை;  
27.பாத்திரமும் பெயரும்;  
28.ராஜாஜி இலக்கியம்;  
29.ரசிகமணி இலக்கியம்;  
30.மீண்டும் மெய்க்காவல்;  
31.தமிழ்த் தொண்டும் தலைமையும்;  
32.புகழும் பெருமையும்;  
33.தோழமைத் தோற்றங்கள்;  
34.பண்பாட்டுக் காவலர்;  
35.துணைக் குழுவினர்;  
36.மறுப்பும் மன்னிப்பும்;  
37.இறுதி வருடம்;  
38.கடைசி நாட்கள்;  
39.அஞ்சலி;  
இணைப்பு ஒன்று - உதவி புரிந்தோர்;  
இணைப்பு இரண்டு -  பயன்பட்ட நூல்கள்;  
குறிப்பகராதி.                                                          
 
எழுத்தாளர் கல்கி:  கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
 
புத்தக விமர்சனம்:
"பொன்னியின் புதல்வர்' என்ற மகத்தான நூல், அமரர் "கல்கி'யின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது. "கல்கி' வார இதழில் நான்கு ஆண்டுகள் எழுதினார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சி மிக அதிகம். தான் மிகவும் போற்றிய - விரும்பிய எழுத்தாளர் கல்கியின் வரலாற்றை புதிய முறையில் எழுதினார். ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது வேறு பல செய்திகளைச் சேகரிக்க வேண்டியிருக்கிறது. அதில் விருப்பு வெறுப்பு ஏற்படக்கூடாது.
 
கல்கியின் வாழ்க்கை வரலாற்றை 912 பக்கங்களில் எழுதியிருக்கிறார் சுந்தா. 
 
ஆசிரியர் குறித்து: 
திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில் 1913-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி, இராமசந்திர ஐயர் - ருக்மணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
 
"மேலநத்தம் இராமசந்திர ஐயர் மீனாட்சிசுந்தரம்' என்பது சுந்தாவின் முழுப்பெயர். மே.ரா.மீ.சுந்தரம் என்ற பெயரில் நிறைய எழுதினார். தில்லியில் பணியாற்றியபோதுதான் "சுந்தா' என்ற பெயர் பிரபலமானது.
 
தொடக்க காலத்தில் கிராம முன்சீப்பாக வேலைக்குச் சேர்ந்தார். பதிமூன்று ரூபாய்தான் சம்பளம். வேலை பார்க்கும்போதே புத்தகம் படிப்பதில் ஈடுபாடு கொண்டார் சுந்தா. திருநெல்வேலி சந்திப்பு - ரயில் நிலையப் புத்தகக் கடையில் அதிக நேரம் இருந்து படிப்பார்.
 
திருநெல்வேலியில் இருந்த காலத்தில், ரசிகமணி டி.கே.சி.யைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. பத்திரிகைகளுக்குக் கவிதைகள் எழுதி அனுப்புவார். "கலைமகள்' நடத்திய கவிதைப் போட்டி ஒன்றில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் கிடைத்தது.
 
புதிய புத்தகங்களை நிறையப் படித்து வந்த சுந்தா, எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டார். அகராதிகளைச் சேர்ந்து, புதிய புதிய சொற்களைப் படித்து, அதன் பொருளை அறிந்து மற்றவர்களிடம் அந்தச் சொற்களைப் பற்றிப் பேசி ஆராய்வதில் - விவாதிப்பதில் அவருக்கு உற்சாகம் அதிகம்.
 
ரசிகமணி டி.கே.சி. பரிந்துரையின் பேரில் திருச்சி வானொலி நிலையத்தில் சுந்தா பணியில் சேர்ந்தார்.
எழுத்திலே இயற்கையாக அமைந்த நகைச்சுவை, இலக்கியக் கவிதைநடை பலரைக் கவர்ந்தது. ஆசிரியர் கல்கியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
 
பிறகு, தில்லி வானொலிக்குச் செல்லும்படி நேர்ந்தது. தில்லியில் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். தில்லி வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவில், தமிழ்ச் செய்தி தயாரிப்பதோடு செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
 
புதுதில்லி தமிழர் வட்டாரத்தில் "சுந்தா' என்னும் மூன்றெழுத்துப் பெயர் மிகவும் பிரபலமானது. தில்லி தமிழ்ச்சங்கம் தொடங்கிய காலத்தில் அதன் வளர்ச்சிக்கு உதவியவர்களுள் சுந்தாவுக்கு முக்கிய பங்குண்டு. அந்த நாள்களில் தமிழ்ச் சங்கம் "சுடர்' என்ற அருமையான இலக்கிய இதழ் ஒன்றைத் தயாரித்தது. "சுடர்' தயாரிப்பதில் சுந்தாவின் பங்கு அதிகம்.
 
சுந்தாவின் திறமையையும் ஆங்கிலப் புலமையையும் அறிந்த லண்டன் பி.பி.சி. நிறுவனத்தினர், தமிழோசை நிகழ்ச்சிகளைத் தயாரிக்க மூன்றாண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தனர்.
 
வானொலி நிலையப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, "தினமணி கதிரில்' ஆசிரியராக இருந்த பிரபல எழுத்தாளர் சாவி, தில்லி வாழ்க்கை அனுபவங்களை எழுத சுந்தாவை வற்புறுத்தினார். அதனால் சுந்தா, "தலைநகரில் ஒரு தலைமுறை' என்ற தொடரை எழுதினார். அந்தத் தொடர் கட்டுரை வாசகர் வரவேற்பைப் பெரிதும் பெற்றது. அந்தத் தொடர்தான், "கல்கி' ஆசிரியர் கி.ராஜேந்திரன், அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை சுந்தாவிடம் ஒப்படைக்கச் செய்தது. இந்த மாபெரும் படைப்பைத் தவிர, "இதய மலர்கள்' என்ற கவிதைத் தொகுப்பும், "கருநீலக் கண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் சிறு சிறு - ஒரு பக்க எழுத்துச் சித்திரங்களை தொடக்கக் காலத்தில் எழுதியிருக்கிறார்.
 
சுந்தா, மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
More Information
SKU Code VAN B 546
Weight in Kg 0.870000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சுந்தா - Sunda - M.R.M.Sundaram
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:பொன்னியின் புதல்வர் (பேராசிரியர் கல்கியின் வாழ்கை வரலாறு) - சுந்தா - Ponniyin Puthalvar (Perasiriyar Kalkiyin Vazhkai Varalaru)

Similar Category Products