"எழுத்துக்கு எழுபது" விழா மலரில் எழுத்துச் சித்தர், ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களைப் பற்றி எழுத்துச் சித்தரின் முன்னாள் உதவியாளர் எழுத்தாளர் கிருஷ்ணா அவர்கள் எழுதிய புகழுரை.
பாலகுமாரன் எனும் வழித்துணைநாதன்.
எழுத்தாளர் கிருஷ்ணா
ஐயாவைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு விரிஞ்சிபுரம் எனும் தலத்திலுள்ள ஈசனின் ஞாபகம்தான் வரும்.
எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகத்தின் அந்தர்வாஹிணியாக ஓடும் சரஸ்வதி நதியைப் போன்றவன். எல்லோரின் மனதும் ஒரு புள்ளியில் அவனிடத்தில் குவிகின்றன. சூரியனின் கதிர்கள் சிறு லென்சுக்குள் குவிவது போன்றது அது.
சகல மனங்களின் பிரதிநிதியாக இருப்பவன் மனங்களின் நிறங்களை தொட்டுணர்வதுபோல எல்லோரையும் எளிதாகக் கண்டறிகிறான். மானுடத்தின் சகல உணர்வுகளும் பெரும் பெருக்காக அவனிடத்தில் ஒடுங்கியபடியும், விரிந்தபடியும் இருக்கின்றன.
எழுத்துக்களால் மனதை நிரப்பி குறுக்கும், நெடுக்கும். மேலும், கீழும் தறியை ஓடவிட்டு ஒரு வாழ்க்கையை வார்த்துப் போடுகிறான். தனியொரு மனிதனின் மனதின் அந்தரங்கத்தின் அருகே உட்கார்ந்து பேசுபவன்.
எல்லோரின் குரலையும் சேர்த்து ஒரே ஸ்ருதியில் தனிக்குரலாக கம்பீரமாக எல்லோருக்கும் உரைப்பவனே எழுத்தாளன். இவை அனைத்தும் ஒருமித்திருந்தது எழுத்துச் சித்தர் பாலகுமாரனிடம் எனில் அது மிகையில்லை.
அவரின் எழுத்துக்களுக்குள் எல்லோரும் தங்களையே கண்டனர். தவிப்புகளையும், ஏக்கங்களையும், கானகத்தில் திக்குத் தெரியாத அந்தகனாக அலைவதையும் அவரின் எழுத்தில் கண்டனர்.
ஆனால், ரணத்தின் மீது தடவப்பட்ட களிம்புபோல அவரின் எழுத்துக்கள் எல்லோரையும் ஆற்றுப்படுத்தியது. கொஞ்சம் பொறு... கொஞ்சம் பொறு... இதேதான் நானும். மெல்ல மேலெழுந்தேன். நீயும் வந்துவிடலாம்.
கொஞ்சம் தலையை சிலுப்பிக்கொள். அவமானத்தை ஏற்கப் பழகு.இன்று உன்னை அவர்கள் புறக்கணிக்கலாம். ஆனால், நாளை நீ அவர்களுக்கு முக்கியமானவன் ஆவாய்..
ஐயாவைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு விரிஞ்சிபுரம் எனும் தலத்திலுள்ள ஈசனின் ஞாபகம்தான் வரும். அழகான பொருத்தமான பெயர். மார்க்கபந்தீஸ்வரர் என்பது சிவனின் திருப்பெயர். அழகிய தமிழில் வழித்துணைநாதர் என்று சொல்வார்கள்.
இப்படிப்பட்ட பெரும் எழுத்தாளரின் நிழலில் அவருக்கு உதவியாளராக ஏழு வருடம் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தது.
"டேய் எங்கிட்ட குட் வாங்கறதுக்காக ரொம்ப ஜாக்கிரதையா வேலை பண்ணாத. எல்லாமே சரியா வரணும்னு பண்ற. தப்பு பண்ணு. நான் ஒரு வேலையை சொல்லி நீ கேட்கும்போது பதட்டமா தலையாட்டுற.
உனக்குள்ள சரியா பண்ணணுமேங்கற தவிப்பு வந்துடறது. அதனால தப்பு பண்ணு. திட்டும் வாங்கு. அப்போதான் இயல்பா ஒரு வேலையை பண்ண முடியும்" என்றார். அந்தக் கணத்தை நான் காட்சியாக என் மனதில் வைத்திருக்கிறேன்.
வேலைக்கு சேர்ந்த ஒருவாரத்தில், ஒருநாள் காலில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு ஏதாவது சொல்லிக் கொடுப்பார் என்று மண்டியிட்டபடி அமர்ந்திருந்தேன்.
சட்டென்று என் மனதை படித்தவர், "இப்படி உட்கார்ந்து எதையுமே கத்துக்க முடியாது. வாழ்க்கையில அது போற போக்குல அந்த ட்ரைவ்லதான் கத்துக்க முடியும்.
ஏதாவது பண்ணினாதான் சரியா தப்பான்னு தெரிஞ்சு அடுத்தடுத்து போக முடியும். இப்படி உட்கார்ந்து ஏதாவது கேட்டுக்கிட்டே சுகமா உட்கார்ந்திருக்கலாம்னு ஒரு மனோநிலையில் இருந்தா ஒன்னும் பண்ண முடியாது. இந்த பாவனை செயற்கையானது" என்றார்.
ஐயாவின் வெற்றிக்கு முன்னணியாக இருப்பது சுறுசுறுப்பே. ஒரு அதிர்தல்... மின்சாரம் போன்ற தன்மை அவரிடம் இருந்துகொண்டே இருக்கும். நம் புத்தி தூங்குவது நமக்கு நன்றாக தெரியும்.
ஆனால், அவரிடம் விழிப்பாகவே இருக்கும். "டேய்.. அவரை போன்ல புடி" ஒருமுறை முயற்சித்து விட்டு சொன்னதைச் செய்துவிட்டோம் என்று அமைதியாக இருப்பேன்.
மீண்டும், "புடிச்சியாடா..." குரலில் கொஞ்சம் கடுமை தெரியும்போது, "ட்ரை பண்ணேன். என்கேஜ்டா இருக்கு" இந்த சாதாரண பதிலில் உள்ள அலட்சியத்தை கடுமையாக சுட்டிக் காட்டுவார்.
"ஒருத்தரை போன்ல புடிங்கன்னா அப்படியே ஒரு தடவைல விட்டுடறதா. தொடர்ந்து ட்ரை பண்ணக் கூடாதா. எங்க ஸார் உங்ககிட்ட பேசணும்னு சொல்றாருன்னு கேட்க வேண்டாமா.
அப்படி நான் என்ன கேட்கணும்கற விஷயம் உனக்குத் தெரிஞ்சா நீயே கேட்டு ஒட்டு மொத்தமா பதில் சொல்லு. அப்போதான் நீ எனக்கு பி.ஏ." என்று விளாசுவார்.
சிறிய வேலையாக இருந்தாலும் தள்ளிப் போடாமல் செய்வார். அவசரமாக படிக்கட்டில் இறங்கி வந்துவிட்டு, மீண்டும் மேலே வந்து தலைக்கு மேல் விட்டத்தில் தெரியும் ஒட்டடையை அடித்து அகற்றி விட்டு மீண்டும் கீழே வருவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
"ஏன் வந்து பார்த்துக்கலாமே" என்றால் "என்னை அது டிஸ்டர்ப் பண்ணும். மண்டையிலேயே இருக்கும். அதை முடிச்சுடணும்" என்பார். எனக்குத் தெரிந்து இதுவரை அவர் எந்த ஒரு வேலையையுமே தள்ளிப்போட்டதே இல்லை.
இந்த ஒரு பழக்கம் அவருள் தன்னியல்பாக பதிந்திருக்கிறது. இதுவே எழுத்து விஷயத்திலும் பழக்கமாகி இருக்கிறது.
நம்மோடு அவர் நேரடியாக பேசுவதைக் காட்டிலும், அவரைச் சந்திக்க வருபவர்களிடம் அவர் பேசுபவை அனைத்தும் முக்கியமானவை. சிறிய போன் உரையாடலில் கூட பெரிய விஷயங்கள் தொம்மென்று விழும்.
அதுவே நமக்கு பெரிய திறப்பாக இருக்கும். அதனால் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இருந்தால் அவரிடமிருந்து நமக்குள் உள்ளே சென்று கொண்டே இருக்கும்.
அவர் எந்த நிலையில் ஒரு விஷயத்தை புரிய வைக்க முயற்சிக்கிறார், நம்மிடம் உள்ள தடை என்ன என்கிற அளவுக்கு மேலேறினால் கூட போதுமானது.
அவரை இமிடேட் செய்யக் கூடாது. திடமாக அவர் கூறுவதை புரிந்து கொண்டால். அது ஆவியாகி நமக்குள் சென்று தங்கும். ஜே. கே. இதை லெவல் ஆப் அன்டர் ஸ்டேண்டிங் என்பார்.
அவர் வெளியூருக்குச் செல்லும்போது கூட அவரின் அறைக்குள் நாம் பயத்தோடும், மரியாதையோடும் நுழையும் ஆளுமையை நமக்குள் ஏற்படுத்தியிருப்பார்.
அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் அவரே. அவர் உபயோகப்படுத்தும் குப்பைத் தொட்டியை கூட நாம் ஜாக்கிரதையாக கையாளுவோம். அவர் அணிந்து கழற்றிய சட்டையைக் கூட சுருட்டாமல் மடித்து வைப்போம்.
ஒரு மாபெரும் ஆளுமை எப்படி தன்னைச் சுற்றிலுமுள்ள ஜட வஸ்துக்கள் வரை நம்மை ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை உணரலாம். அவரோடு கூடவே இருக்கலாம். ஆனால், அவரை அவதானித்தபடி இருப்பது என்பது வேறு.
அவரின் சொல்லை நீங்கள் உங்களுக்குள் எப்படிக் கொண்டு செல்கிறீர்கள் என்பது முக்கியமானது. இல்லையெனில் நீங்கள் தொடர்ச்சியாக ரயிலை தவற விடுவீர்கள்.
நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே என்னைப் பார்த்து நான் ரொம்ப டப் பர்சன் என்றார். அது போகப் போக புரிந்தது. சாதாரண வாழ்க்கையே போதும் என்பவர்கள் இவரோடு இணையாக நடக்க முடியாது.
ஏதேனும் சாதிக்க வேண்டுமென்று இருப்பவர்களுக்கு இவருக்கு இணையாக இன்னொருவர் கிடைக்க மாட்டார்.
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஒரு ஆலமரம். அதன் ஒரு விழுது என்று என்னைபோன்ற சிலர் கர்வத்தோடு திரிகிறோம். எத்தனை விழுதுகள் என்கிற கணக்குகளை ஆலமரம் வைத்துக் கொள்வதில்லை என்பதையும் அறிந்திருக்கிறோம்.