Details
தினகரனில் தொடராக இந்த கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது. நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இதைப் பற்றி எனக்கு விசாரிப்புகள் வந்தன. நான் படித்தேன் மிக நன்றாக இருக்கிறது, என்று பல்வேரு திசையிலிருந்து வாசகர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். திங்கரனுடைய வீச்சு மிகப் பெரிதாக இருக்கிறது என்பதை இது உறுதி செய்தது.
இந்த கட்டுரை தொகுப்பில் எனக்கு நெருக்கமாய் இருக்கின்ற சில இளைஞர்களுக்கு நன் என்ன சொல்வேனோ அதையே முக்கியமான விஷயமாக தொகுத்து அளித்திருக்கிறேன். திருமணம் செய்து கொண்டு அதில் உணர்ச்சி தடுமாற்றங்கள் கொண்டு தவிப்பவர்கள் என்னிடம் வந்து பேசுவதுண்டு. அவர்களுக்கு சில அடிப்படையான விஷயங்களை நன் நிதானமாகச் சொல்லித் தருவேன். அவர்கள் புரிந்து கொண்டு முகமலர்ச்சியோடு தங்கள் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்வார்கள்.
பிரிந்துவிடலாம் என்று இருக்கிறேன் என்று என்னிடம் வந்து பேசிய தம்பதிகள் அரை மணி நேரம் பேச்சில் மனம் மாறினார்கள். இன்னும் ஒரு வாரம் கழித்து வந்து பிரிந்துவிடலாமா என்று யோசனை செய்யுங்களேன் என்று கேட்டுக் கொண்டேன். அடுத்த வாரம் வந்து பிரியவே போவதில்லை என்று சந்தோஷமாக உறுதி சொன்னார்கள்.
பேசுவது ஒரு கலை. இனிமையான வார்த்தைகளால் மட்டும் இல்லை. நிதானமாக பேசுவதும், தெளிவாகப் பேசுவதும், எப்பொழுது பேச வேண்டுமோ அவ்வளவு பேசுவதும் எல்லாருக்கும் கைவராத விஷயம். மூலையில் ஏதோ ஒரு பகுதியில் ஒரு அமைதியும் நிதானமும் இருந்தாலொழிய இந்த பேச்சுத்திறன் வருவதில்லை. மேடையில் நீட்டி முழக்குதல் பேசுகின்ற பேச்சை பேச்சுத்திறன் என்று நான் சொல்வதில்லை. அது தந்திரம். நல்ல பயிர்ச்சியின் மூலம் அம்மாதிரி மேடையில் முழங்குவதற்கு கற்றுக்கொள்ளலாம். பேச்சுத்திறன் என்பது பிறர்மனம் அறிந்து பேசுதல் மற்றவர்க்கு தான் சொல்லும் பொருள் விளங்கவேண்டும் என்று பேசுதல்.