ஒரு பெரிய சமுத்திரத்தில் நீரை ஒரு சிறிய கண்ணாடிக் குப்பியில் எடுத்து, இதுதான் சமுத்திரம் என்று நான் சொன்னால் அது எவ்வளவு பொய்யாக இருக்குமோ, அது எப்படி உண்மையாகவும் இருக்குமோ அப்படித்தான் இந்த புத்தகமும் இருக்கிறது.
குரு என்கிற மாபெரும் விஷயத்தை சில சம்பவங்களாலும், அதைத் தொடர்ந்து, சில சிந்தனைகளாலும் விளக்குவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். உறவுகளையே புரிந்து கொள்வதிலேயே மிகுந்த சிக்கல்கள் ஏற்படுத்துகிற மனம் குருவைப்புரிந்து கொள்வதில் நாட்டமில்லாமல் பயத்தையே அடிப்படையாகக் கொள்கிறது. பயம் கலந்த பணிவு தான் எல்லாரிடத்திலும் வெளிப்படுத்த வேண்டும் என்று பலர் சொல்லித்தர, பயம் கலந்த பணிவை எடுத்துக்கொண்டு கேள்விகளற்று விசாரிப்புகளற்ற வயதான ஒரு நபரை பல இளைஞர்கள் பணிந்து ஏற்கின்றார்கள். கொண்டாடுகிறார்கள்.
பயம் இருக்கும் இடத்தில் தெளிவு இருக்காது. தெளிவு இல்லையெனில் இறை தரிசனம் கிடைக்காது. இறை தரிசனம் நோக்கி ஒருவரின் வாழ்க்கை நகரவில்லையெனில் அவர் வாழ்வதும் ஒன்றுதான் வாழாத்தும் ஒன்றுதான்.
'தேடிச்சொறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி' என்கிற வெகு ஜன ஆட்களாகத்தான் அவர்கள் வபாழ்க்கை முடிந்து போகும். எவரேனும் எங்கேனும் தெளிவு பெறுவதற்கு இந்தப் புத்தகம் வழி காட்டும் என்ற நம்பிக்கையோடு இதை எழுதியிருக்கிறேன்.
மிக மிகச் சாதாரணமாய் சேற்றில் உழன்று கொண்டிருந்த என் வாழ்க்கை குருவின் தொடர்பால் சேற்றிலிருந்து உயரமாய் வளர்ந்து பூவாய் மலர்ந்தது. சுற்றிலும் சேறு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பூத்த தாமரைக்கும், சேற்றுக்கும் சம்பந்தமில்லை தாமரையின் வேர்கள் சேற்றில் கிடந்தாலும் மலர்ச்சி சற்றும் குறையவில்லை. இந்த வித்தையை குரு ஏற்படுத்திக் கொடுத்தார்.
இந்த உலகத்தின் ஒவ்வொரு காரியத்திலும் மிரண்டு, என்னைக் கவனித்து, அதிலிருந்து தெளிவு பெற்று, என் மனோநிலையை இன்னும் உயர்த்திக் கொள்ள, குருவின் அண்மையும் உபதேசமும், அவர் காட்டிய வழியுமே காரணங்களாகும்.
இந்தப் புத்தகத்தில் குருவின் அவசியத்தை அவரை அணுகுகின்ற முறையை என் அனுபவத்தின் பாற்பட்டு சொல்ல முயற்சித்திருக்கிறேன். அவரால் தூண்டப்பட்டு நான் எழுதிய இந்த புத்தகத்தை அவருக்கே சமர்ப்பணமாக்குகிறேன். வெல்லப் பிள்ளையாரை கிள்ளி அந்த வெல்லத்தை வெல்லப் பிள்ளையாருக்கே நிவேதனம் செய்கின்ற விஷயம் இதுதான்.
இந்தப் புத்தகம் வெகுதூரம் போகுமென்பதும், வெகுநாள் பேசப்படுமென்பதும் என் உள்ளுணர்வில் புலனாகிறது. வித்து விழுந்த பிறகு பெரிய விருட்சமாகும். அந்த விருட்சத்துக்கும் விதைத்தவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது விருட்சமான பிறகு அவனும் மற்றவர்போல் அதற்கு அடியில் உட்கார்ந்து இளைப்பாறும் சாதாரணனாகிறான். நான் விதைத்தேன் என்கிற எண்ணம் கூட அவனுக்கு மறந்துபோய் விடும்.
ஒருவேளை இந்தப் புத்தகம் உங்களுக்குள் ஏதேனும் மாற்றம் விளைவித்தால், பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால் எனக்கு எழுதுங்கள்.
குரு என்கிற இக்கட்டுரைத் தொடருக்கு அப்பால், 'குருவின் குரல்' என்று குருஜி முரளீதர சுவாமிகளின் பதில்கள் இருக்கின்றன.
குருவாக மட்டுமில்லாமல், மிகக் கூர்மையான ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டு இந்த உலகத்தின் சகல விஷயங்களையும் உற்றுக் கவனித்து அதிலுள்ள கடவுள் தன்மையை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்ற ஒரு ஞானி அவர். இளைஞர்களும், யுவதிகளும் அவரை ஆனந்தமாய் அணுகி, தெளிவுபெறுவதை நான் பார்த்திருக்கிறேன். வேறு எங்கும் கிடைக்காத பிரேமையோடு, நட்போடு அவரை வணங்கி ஒளிர்வதைப் பார்த்திருக்கிறேன்.
சமாதானப்படுத்துகிற பதிலகளைச் சொல்லுகிறவர் அல்ல அவர். உண்மைக்கு அருகே உங்களை வேகமாய் இழுத்துப் போவதில் அவருக்கு ஆர்வமம், திறனும் அதிகம்.
சென்னையை அடுத்துள்ள ஜாபர்கான் பேட்டையில், ஜவஹர் நகர் என்கிற இடத்தில், 'பிரேமிக பவனம்' என்கிற இல்லத்தில் இருந்துகொண்டு மிகப்பெரிய சத்சங்கத்தை அவர் கூட்டியிருக்கிறார். உறுதியும், தெளிவும், வைராக்கியமும் மிக்க சீடர்கள், அவர் ஆசிரமத்தில் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் கொடுத்துள்ள பதில்கள், அவரை நேரே சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை உங்களுக்கு ஏற்படுத்தும் என்பதை நான் தெளிவாக உணர்கிறேன். அவர் வேறு ஒரு இடத்தில் சொல்லிய பதில்களைப் பார்த்து விட்டுத்தான் அவரை நோக்கி நானும் விரைந்துபோனேன். என் கேள்விகளுக்கு மிகப்பொறுமையாக பதிலளித்த குருஜி முரளீதர சுவாமிகளுக்கு 'என் நெடுஞ்சாண்கிடையான நமஸ்காரத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டு பகுதிகளும் கொண்ட இந்த புத்தகத்தை, என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் கடவுளின் குழந்தை அடியார்க்கு நல்லான் யோகிராம்சுரத்குமார் அவர்களுக்கும், மா.தேவகி அவர்களுக்கும் காணிக்கையாக்கி வணங்குகின்றேன்.
என்றென்றும் அன்புடன்,
பாலகுமாரன்.
ஜூலை, 2000.
- பாலகுமாரன்.
"இயல்பாய் இருத்தலே ஞானம்.அதுவே அமைதி."
"நீ எங்கோ திருடினால் உன் பொருள் எங்கோ திருட்டுப் போகிறது. இது அமைதியான ஒரு விதி. கண்களுக்குப் புலப்படாத ஒரு சட்டம். "
"உண்மையாய் இருப்பதுதான் சுயபலம். ஞானத்தின் அடித்தளம். அப்போது பேச்சும் செயலும் மிக மிகச் சுதந்திரமாக இருக்கும். அந்தச் சுதந்திரம் எவரையும் காயப்படுத்தாது இருக்கும்."
"சரணாகதி என்பது குருவைப் பூரணமாக நேசித்தல்.குருவைத் தன் உணர்வுகளோடும் கலக்கவிடுதல். சிலசமயம் உள்ளுக்குள் குருவாகவே மாறுதல்."
"தன்னை ஆழ்ந்து பார்கிறவருக்கே, தன்னுள் யார் பார்க்கிறார்கள் என்கிற கேள்வி உள்ளவருக்கே குருவின் விலக்கலால் ஞானம் சித்திக்கும்."
"நல்ல குரு அதிகம் பேசுவதில்லை. பிரசங்கிகளால், நல்ல குருவாக மாற முடிவதில்லை."
"சக்தி மிகுந்த குரு இருக்கும் இடத்தில் அமைதி தளும்பி நிற்கும். அருகே போய் நிற்க மனமாற்றம் ஏற்படும். "
"உணவு ருசி உடம்பை அடுத்த அகங்காரம். தன்னை உடம்பாகக் கொள்ளும்போது, உணவாட்டம் வெறியாய் போய்விடுகிறது. "
"Life Is Relationship" பிறரோடு தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை. பிறரோடு உள்ள தொடர்புகளில் ஏற்படும் சிக்கல்தான் மொழி, இன, மத சண்டைகளுக்கெல்லாம் காரணம்."
"மனம் பற்றி யோசிக்கிறவனுக்குத்தான் ஆன்மா புலப்படும். தன் மனம் தெரியாதவனுக்கு பிறர் மனம், உணர்வு எதுவும் தெரியாது. "
"குரு தேவை என்று வேண்டுபவன் செய்ய வேண்டிய முதல் வேலை குருவைத் தேடுவதல்ல, தனிமையில் இருப்பது."