Details
"பூமாதேவி கை கூப்பி சூரியனை வணங்கினாள். சூரியன் தன் மெல்லிய காலைக் கதிர்களால் அவள் தலையை வருடிவிட்டு என்ன வேண்டும் என்பது போல் நோக்கினான். பூமாதேவி சூரியனின் கண்கள் கேட்ட கேள்விக்குதன் கண்களாலேயே பதில் சொன்னாள். ‘பாரம் அதிகமாகிவிட்டது. தாங்க முடியவில்லை. உங்களைப் போன்றோர் உதவி செய்தால்தான் நான் நிம்மதியாய்ச் சுழல முடியும்” என்று மெல்லிய வேதனையோடு பேசினாள். ‘என்ன பாரம்? ஜனத்தொகை அதிகமாவதா?” ‘ஜனத்தொகை அதிகமாவது ஒரு விஷயமே அல்ல. இது போன்ற மூன்று மடங்கு ஜனங்களை என்னால் தாங்க முடியும். ஆனால் ஜனங்கள் செய்கின்ற பாவ பாரத்தைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.” ‘ஜனங்கள் பாவம் செய்வதற்கு என்ன காரணம்?” ‘ஜனத்தொகைப் பெருக்கம் காரணம். ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் என்ற வெறி ஜனத்தொகை பெருக்கத்தால் ஏற்பட்டு வருகிறது. தன்னை முன்னிறுத்திக் கொள்ளுகின்ற ஆசை¸ பேராவல் ஜனத்தொகைப் பெருக்கத்தால் அதிகமாகிறது. எனவே பாபங்களும் அதிகமாகின்றன.”
‘முன்னேற்றத்திற்கு தவிப்பது பாபத்தைச் சேர்க்குமா பூமாதேவி?” சூரியன் அன்பொழுகக் கேட்டான். ‘ஆமாம்¸ வெற்றி என்பது எளிதில் கிடைக்கக் கூடிய விஷயமில்லை. வெற்றி என்பது ஒரு வேளை கிடைக்க முடியாது போனால் என்ன செய்வது என்கிற ஏக்கம்¸ தாபம்¸ குறுக்கு வழியைத் தேட முயற்சி செய்கிறது. அந்தத் தாபத்தால் குறுக்கு வழியை முயற்சி செய்ய பாபங்கள் அதிகமாகின்றன. அது மட்டுமில்லை சூர்யதேவா” சூரியனை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே பூமாதேவி பேசினாள்."
கர்ணன் என்றொரு கதாபாத்திரத்தின் வழியாக அன்றைய கால சூழலோடு இன்றைய அரசியல், சமூகம் சார்ந்த பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க இந்த கதை படிக்கவும் சுவாரசியமாகவும் சுவை மிகுந்ததாகவும் இருப்பது இந்நூலில் சிறப்பு.
"எல்லாப் பிரிவும் அபத்தமானது. அற்பத்தனமானது. இங்குள்ள மனிதர்களின் கோபமும், குரோதமும் வேர் இல்லாதவை. வெறுமே மேல்புத்தியில் தளும்பி நிற்பவை. அண்ட பேரண்டத்தின் பிரமாண்டத்தை உணரும் பொழுது, இங்குள்ள மனிதர்கள் புழுக்களாக, புழுக்களின் புழுக்களாகத் தெரிகிறார்கள். அவர்களுக்கு கர்வம் இருப்பதும், காதல் இருப்பதும், காமம் இருப்பதும் சிரிப்பாய் இருக்கின்றன. அந்த நிலை தெரிய வந்தால் எந்தப்பிரிவும் நிலையற்றது என்று தெரியும். கற்பிதமானது என்று புரியும். அப்படிப்புரிய மறுபடி மறுபடி பிறக்கவேண்டும்."