Details
யோகி ராம்சுரத்குமார் இடையறாது கடவுள் தேடலில் ஈடுபட்டு வந்தார் . கையில் காசு வைத்திருப்பதை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். யார் எது கேட்டாலும் கையிலிருப்பதை உடனடியாக கொடுத்து விடுகின்ற ஒரு மனப் பக்குவத்தில் இருந்தார்.
கடவுள் தேடலில் இருப்போருக்கு உடமைகள் என்று எதுவும் இல்லை. ஞானிக்கு எல்லார் கையும் தன் கையே ! எல்லார் வயிறும் தன் வயிறே ! வாசலில் நின்று யார் கையேந்தி தாயே பசிக்கிறது என்று குரல் கொடுத்தாலும் உடனடியாக தனது மனைவியை நோக்கி அவருக்கு உணவு கொடுக்கச் சொல்வார். குழந்தைகளுக்கான சமைத்த உணவு மட்டுமே உள்ளது என்றால், தனது உணவான பாலும் , பழமும் அந்த யாசகருக்கு கொடுத்து விட்டுத்தான் பட்டினியுடன் இருப்பார்.
இது கடவுள் தேடலின் பால் பிடித்த நிலையில் இருப்போருக்கு கருணை மிகுந்த ஒரு உள்ளமும், கனிவு மிகுந்த ஒரு நடவடிக்கையும் இருக்கும். யோகி ராம்சுரத்குமார் நன்கு கனிந்து இருந்தார்.
ஸ்வாமி ராமதாஸின் , " In the Quest of God " ( கடவுளைத் தேடி ) புத்தகத்தைப் படித்தபோது ஸ்வாமி ராமதாஸ் பற்றிய அவரது எண்ணம் முற்றிலும் மாறிப்போனது. மிக நல்ல பதவியில் இருந்து , அதை உதறி வெறும் காலோடு பரத கண்டம் முழுதும் சுற்றி , பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டு , பல்வேறு சோதனைகளைத் தாண்டி தன்னைப் புடம் போட்டுக் கொண்ட பிறகே அவருக்கு கடவுள் தரிசனம் கிடைத்தது என்பதை அறிய , அவரை மீண்டும் தரிசிக்கின்ற ஆவல் ஏற்பட்டது.
அடுத்த ஒரு ஆகஸ்ட் மாதம் 1958 -ம் வருடம் ஆனந்தாஸ்ரமம் வந்தார். அங்கு தலைமைச் சீடர் ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமி இருந்தார். அவர் யோகியை மிக நல்ல முறையில் போற்றிப் பாதுகாத்து வந்தார். எனக்கு தீட்ஷை தருமாறு பப்பா ராமதாஸிடம் சொல்லுங்கள் என்று சச்சிதானந்தரிடம் வேண்ட, அதற்கு காலம் வரும் , அதுவரை அவரையே பின்தொடர்ந்து இரு, நடக்கும் என்றார்.