பாலகுமாரனின் பதில்கள்-3 - BALAKUMARAN PATHILGAL-PART III @ Baalakumaran Bathilgal Paagam 3 Bathilkal Pagam Part 3
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
உரையாடல்/ பல்சுவை கேள்வி பதில்கள்.
காகித உறை / பேப்பர்பேக்;
320 பக்கங்கள்;
முதற் பதிப்பு: ஜுலை 2013;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
யோகி ராம்சுரத்குமார்
இனிய ஸ்நேகிதத்திற்கு
வணக்கம், வாழிய நலம்.
இந்த புத்தகத்தில் வெளியான கேள்விகள் இன்றிலிருந்து (அதாவது ஜூலை 2013) சுமார் பத்து பனிரெண்டு வருடங்கள் முன்பு வெளி வந்தவை.
அன்றைய காலகட்டத்தை நினைவூட்டவும், இப்போதும் அந்த பதில்கள் உயிரோடு இருப்பதாலும் இங்கு வெளியிடப்படுகிறது.
இன்னொரு இதே கன புத்தகத்திற்குண்டான கேள்வி பதில்கள் இருக்கின்றன. விரைவில் வெளிவரும்.
என்றென்றும் அன்புடன்
பாலகுமாரன்.
**********************************************
ஒரு முன்னுரை:
அதுவொரு மாலை நேரம். ஊரெங்கும் தங்கமயமாக ஜொலித்தது. என்னுடைய குருநாதர் மேல்மாடியில் வெகுநேரமாக சூரியனை கூர்மையாக பார்த்தபடி நின்றிருந்தார். அருகே ஊதுவத்தியின் புகை மடிந்து நெளிந்தும் வட்டங்களாயும் விண்ணை நோக்கி கரைந்து கொண்டிருந்தன. ஓசைப்படாமல் அருகே சென்றேன். நிமிடங்கள் கரைந்தன. திறந்திருந்த கண்கள் மென்மையாக மூடின. வெளியுலகப் பிரக்ஞை முற்றிலும் போய் எங்கேயோ சொருகிக் கிடந்தார். அசாதாரணமாக உள்ளும் புறமும் சென்று வருபவர். மனதை கண நேரத்தில் ஒருமுகமாக்கி குவித்து ஒடுக்குபவர். அன்று வெகுநேரமாக அப்படியே நின்றிருந்தார். மெதுவாக கண்கள் திறந்தார்.
"வேறென்ன" கேட்டார்.
"ஒண்ணுமில்லை... ஆனா..."
நான் ஏதோ கேட்கப்போகிறேன் என்பதை புரிந்து கொண்டார். பேசத் தொடங்கினார்.
"வெளிய இருக்கற சூரியனை பார்த்துண்டே இருக்கறச்ச, சட்டுனு அது உள்ள வந்துடனும். 'நான்' அப்படிங்கறதுக்கு எது அதிஷ்டானமோ, அதேதான் அந்த சூரியனுக்கும். அது வெளியில இருக்கற மாதிரி தெரியறது. ஆனா, உள்ளதான் இருக்கு. அப்போ அது உள்ள வந்துட்டா... முடிஞ்சு போச்சு" என்று சொல்லிவிட்டு என்னை வீட்டிற்கு புறப்படச் சொன்னார்.
இதுதான் பாலகுமாரன். இடையறாத விசாரம். அக உலகையும், புற வாழ்க்கையையும் பூரணமாக தரிசித்தவர். வயிறு ,முட்ட இருவேறு வாழ்க்கைகளையும் அனுபவித்தவர். எதைக் கண்டாலும் வியப்பு. எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு விட்டதாக அவர் எண்ணியதில்லை. ஒருமுறை, "நாம ரொம்ப தெளிவா இருக்கறோம்னு நினைக்கறபோதே, மானம்போற மாதிரி விஷயங்கள் நடந்துடறது. ஓசைப்படாம நடக்கத் தெரியணும்" என்று கூறியதை மறக்க முடியாது.
எந்த வேத பாடசாலையிலும் வேதாத்யயனம் செய்ததில்லை. ஆனால் வேதாந்தமும், உபநிஷதமும் உரத்துக் கூறும் மையத்தைத் தொட்டவர். மனதால் விஷயங்களை அலசாமல், அதன் தந்திரங்களை நம்பாமல் வெறுமனே வெறித்துக் கிடத்தலை கைவரப் பெற்றவர். மனதின் அத்தனை ஆட்டங்களையும், கூறுகளையும் செதில் செதிலாக எழுத்தில் வடித்தவர். ஆனாலும், மனதிற்கு அப்பால் உள்ளுக்குள் தாவி அமர்ந்துகொள்ளும் முமுக்ஷு. எத்தனை சமுத்திர ஓய்ச்சல் இருந்தாலும் கெட்டியான கருங்கள்போல திடமும், தீர்க்கமுமாக பேரமைதிக்குள் மூழ்கி தன்னையிழக்கும் சமர்த்தர். நடைமுறை வாழ்க்கையில் வேதாந்தத்தை கலந்தவர். ஆன்மிகம் என்பதை ஒருபோதும் தனித்ததொரு வாழ்க்கையாக அவரின் எழுத்துக்களில் சொன்னதில்லை. நெறிப்பட்ட வாழ்க்கையையும் அமைதிக்கும் தன்னையறிதலுக்கான முயற்சியைத்தான் ஆன்மிகம் என்றார். இவர் ஆன்மிகவாதியா, லௌகீக விஷயங்களை மட்டும் பேசும் உலகாயவாதியா, இளைஞர்களுக்கு காதலையும் காமத்தையும் போதிக்கும் மனங் கவர்ந்த எழுத்தாளரா ... என்று எந்த கூடைக்குள்ளும் மூடி போட்டு அடைக்க முடியாத உயரப் பறக்கும் ராஜாளி. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் மூக்குக் கண்ணாடியை மேலே தூக்கிவிட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குப் போகும் விவேகி. இதுதான் நான் அறிந்த பாலகுமாரன்.
வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் முத்துச் சிதறலாக கேள்வி - பதில் ரூபத்தில் இந்தப் புத்தகம் முழுதும் விரவியிருக்கின்றன. பாலகுமாரனின் நாவல் கடற்பயணம் போன்றது. மெதுவாக நகர்ந்து பேரலையின் மீதேறி இறங்கும் சாகசங்கள் நிறைந்தது. ஆனால், கேள்வி பதில் பகுதியோ ஆற்றோடு போகும் பரிசல் பயணம். சிறு சிறு திருப்பங்கள். நறுக்கு தெறித்த பதில்கள். ஓஹோ ... இது இப்படித்தானா எனும் ஆச்சரியங்கள். நூறு வார்த்தைகளில் பதிலை கூற வேண்டிய குறுமுனியின் அடக்கம் தேவைப்படுவது. கையகல பதில்களாக இருந்தாலும் காலரை நாழிகை யோசிக்க வைக்கும் வீர்யம் கொண்டவை.
எழுத்து சித்தர் பாலகுமாரனின் பதில்கள் ஆரம்பத்தில் பிரசித்தமானது, பல்சுவை நாவலில்தான். வாங்கிய உடனேயே இந்தப் பகுதியைத்தான் கண்கள் தேடும். அடுத்த பதினைந்து நிமிடங்களில் படித்து விட்டுத்தான் நாவலுக்குள் பிரவேசிப்பார்கள்.
மாம்பலத்து கனபாடிகள் ஒருவர், "நீங்க பாலகுமாரன் ஸார்கிட்ட அஸிஸ்டென்டா இருந்தேளா"
"ஆமாம்" என்றேன்.
"அவராலதான் எங்காத்துல சண்டை வரும்."
"ஏங்க"
"எங்கண்ணாவும் மன்னியும் சண்டையே போட்டுக்க மாட்டா. ஆனா இவர் புஸ்தகத்தை வாங்கின உடனேயே யார் முதல்ல படிக்கறதுன்னு சண்டை போட்டுப்பா. அதுலயும் கேள்வி பதிலை யார் முதல்ல படிக்கறதுன்னுதான் சண்டையே" என்றார். அத்தனை விறுவிறுப்பான பகுதி. வெகுநாட்களாக இப்படியொரு தொகுப்பு வரவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது அது சித்தித்திருக்கிறது. இந்தப் புத்தகம் கதம்ப மலர்கள் பூந்தோட்டம். கூடைகூடையாக மல்லிகைகள், முல்லைகள். கூடையிலிருக்கும் குளிர்ந்த முல்லைகளை அள்ளி எடுத்து நுகரலாம். கண்மூடி மனத்தை அனுபவிக்கலாம்.
புராண காலங்களிலும் ஏன், உபநிஷதம் முழுவதும் கேள்வி பதில் வடிவம்தான். குருவை நோக்கி சீடன் கேள்வி கேட்பதும் குரு பதிலைச் சொல்வதுமாகத்தான் இருக்கும். அவர் காலத்தில் பிரம்மம் எப்படிப்பட்டது என்று விவாதித்து அதன் மேல்படியிலேயே நின்று விவாதித்திருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத குரு எனும் வஸ்துவை குரு சிஷ்ய சம்வாதத்தால் சீடர்கள் புரிந்துகொண்டார்கள். பதில் கூறும் குருவையே கூட அதற்குப் பிறகுதான் ஞானி என்று நம்பவே தொடங்கியிருப்பார்கள். பாலகுமாரனின் பதில்கள் கலிகாலமாக இருப்பதால், கடவுள் இருக்கிறாரா? இல்லையா? எனும் அடிப்படை கேள்வியிலிருந்து அத்வைதானுபவம் வரை போய்க் கொண்டேயிருக்கும். அவர் ஒருகாலும் உச்சியில் நின்று எவருக்கும் புரியாத பதில்களையும், வினாக்களையும் எழுப்பியதேயில்லை. வாசகர் கேட்கும், :என்னுடைய காதலுக்கும், நீங்கள் சொல்லும் இறைவனின் மீதுள்ள காதலுக்கும் என்ன வித்தியாசம்" எனும் கேள்விக்கு, "முன்னது காய், பின்னது கனிந்தது." என்பதை அடிப்படையாகக் கொண்டு விரிவான பதிலை பகர்ந்திருப்பார்.
வினா தொடுத்தவரை மேம்படுத்தும் பதில்களை நிறைய காணலாம். இதைச் சற்று வேறு மாதிரியாக யோசிக்கலாம். பாலகுமாரனின் நாவலிலுள்ள உரையாடல் பகுதிகளை உற்றுக் கவனித்தால் கதைகளை மெல்ல களைந்து பார்த்தால், கேள்வி பதில்கள் ஒரு விசார ரூபத்தில் இருக்கும். கதைக்குள் மூழ்கி விட்டவர்கள் தங்களைப்போன்றே கதாபாத்திரங்கள் உலவுவதைக் கண்டு ஆச்சரியமுறுவார்கள். அந்தப் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், மன உளைச்சல்களையும் அதிலிருந்து அவர்கள் வெளியேறி தெளிவாவதையும் அழகாக எடுத்துரைப்பார். அதற்கு இவரின் மொழிநடை பெரிய பலம். அலங்காரத் தேறும் ஆனையும் அசைந்து வருவது போன்றிருக்கும். இதையே ஒருமுறை பாலகுமாரன், "பாத்திரத்தின் கூற்று எது ஆசிரியனின் கூற்று எது என்று பிரிக்கத் தெரிந்தால் நான் நெய்கிறேன் என்பதை கண்டுபிடித்து விடலாம்" என்று கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட ஆசிரியனின் கூற்றுகளை, அந்த பதில்களை தனியாக எடுத்து அதற்கொரு கேள்வியை கேட்டால் ஒவ்வொரு நாவலுக்குள்ளும் குறைந்தது இருநூறு கேள்வி பதில்களையாவது எடுத்துக் கோர்க்கலாம். கேள்வி பதில் என்பது கதைப் பூச்சு இல்லாத பசும்பொன், கதையோடு சேர்த்தால் ஆபரணம்... நெளி மோதிரம்... கமல வேலைகள் நிறைந்த ஹாரம். இதுதான் என் பார்வை.
கேள்வி பதில்களை முழுமையாகப் படிக்கும்போது என்ன ஆகிறது?
பதில் தெரிந்தவுடன் மனமுதிர்ச்சி பெற்று விடுகிறோமா, ஆமாம்... ஆனால், அது மட்டும்தானா, இல்லை. இவரின் பதில்கள் பெரும்பாலும் உணர்வு மயமாக இருக்கின்றன. கார் எப்படி இயங்குகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதைக் காட்டிலும் நம்மைச் சுற்றி நிகழும் விஷயங்களாலும், நமக்குள் ஏற்படும் பிரச்னைகளாலும், உணர்வு ரீதியாக எப்படி பாதிக்கப் படுகிறோம் போன்ற விஷயங்களுக்குத்தான் பதில்கள் அளிக்கிறார். அது காதல், காமம், உறவுகள், தோல்வி, துயரம், முதுகில் குத்துதல், ஏமாற்றம், ரணம் என்று பலவிதமான கேள்விகள், - பதில்கள். பிரச்சனைகளை இருக்கின்றனவா அல்லது கேட்கின்றவன்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறானா என்கிற நுட்பம் இருக்கும். சில பதில்களை பாலாடையில் வைத்து புகட்டியிருப்பார். அப்போது அந்த பதில்களையெல்லாம் வாசிப்பவன் பல படிகளில் உயர்கிறான். இதை மனமுதிர்ச்சி என்பதோடு மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் Lack of understanding என்று வைத்துக் கொள்வோமா? இது நீர் ஆவியாதல் போல பதில்களைக் குறித்த புரிதல் வரும்போதே தெளிவு ஸ்படிகம்போல இலகுகிறது. பிரக்ஞை நிலையை உயர்த்தி கேட்பவனை தன் நிலைக்கு கொண்டுவரும் ரசவாதத்தை நிகழ்த்துகிறார். அதனால்தான், "எனக்கு நீங்கதான் ஐயா குரு. எல்லாத்தையுமே நான் உங்கிட்டதான் கத்துக்கிட்டேன்" என்று நீர் கசிய பேசுகிறார்கள். கடிதத்தை நன்றிக் கண்ணீரில் தோய்த்து அனுப்புகிறார்கள்.
"ஐயா ரொம்ப குழப்பமா இருக்கு"
"கவலைப்படாத. கலங்கின குட்டைதான் தெளியும். என்னைவிட குழப்பமாகவும், கலங்கியவனும் இவ்வுலகத்தில் உண்டோ" என்பார். வழி தெரியாது தவிப்பவனின் தோளில் கைபோட்டு "இது ஒண்ணுமில்லை. கொஞ்சம் வலிக்கும். தாங்கிக்க. ஆனா, இதுலேர்ந்து ஒரு உந்து உந்தி மேல வா. உழைப்புதான் செங்குத்தான பாதை. கஷ்டப்படுன்னு சொல்ல மாட்டேன். வெறியோட வேலை செய். பின்னாடி திரும்பிப் பார்க்காத. தலையை குலுக்கிக்கோ. இனிமே நாம வேறன்னு உறுதி எடுத்துக்கோ. சாதிக்கணும், இல்லைன்னா சாவணும்னு நெஞ்சை நிமிர்த்து. அதிகாலையில எழுந்திரு. பச்சைத் தண்ணில குளி..." என்றெல்லாம் ஆயிரம் பதில்கள் உரம் கொடுக்கும். படிக்கும்போதே உலகத்தை உருண்டையாக்கி உள்ளங் கையில் உருட்டலாம் போல தைரியம் வரும். இந்தத் துணிவை, நம்பிக்கையை அவரின் எழுத்துக்கள் லட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தந்திருக்கின்றன. அதை எவரும் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் அவரின் எழுத்தை படித்தவர்களாக இருக்க மாட்டார்கள்.
அடிப்படையான வாழ்வின் கேள்விகளை தாண்டிய ஆன்மிக பதில்களுக்கு வருவோம்.
இதுவரை காதல் குறித்த நாவல்களையும், கேள்வி பதில்களையும் படித்தவர்கள் ஆன்மிகம் வந்தவுடன் இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம் என்றுதான் யோசிக்கக் கூடும். அதையும் எளிதாக நிரவி விடுவார். "உங்களுக்கு பிள்ளையார் பற்றி தெரியுமா. அதற்கு யானை முகம். ஒரு கையில் மோதகம். மறுகையில் மாம்பழம். பெரிய காது. நீண்ட தும்பிக்கை. இதிலென்ன ஆச்சரியம். இதை ஏன் வணங்க வேண்டும். அதுவொரு மிருகம் போன்றதுதானே" என்று சாதாரணமாக கேட்கலாம். ஆனால், ஒவ்வொரு அங்கங்களையும் தத்துவ நோக்கில் ஊடுருவி அது எப்பேர்ப்பட்ட பிரம்மம் தெரியுமா என்று பிரமிக்கடிக்க வைப்பார். அவருடைய பதில்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமான விசாரணை வடிவில் இருக்காது. அது அகண்ட காவிரி. நாலு படி ஏறி முட்டிவிட்டு வாழை, ஆல், அரசு, செடி, கொடிகளை உரசியடிப் பாய்ந்து செல்லும். ஆழ்த்தும் அகழ்ந்து செல்லும் ஆணிவேர். கேட்டதற்கும் மேலாகத் தரும் பாரியின் கொடை.
"ஏன் முழுக்கை சட்டை அணிவதில்லை" என்றொரு கேள்வி.
"முழுக்கை சட்டை அணிந்து அதை முடித்துவிடும் போது ஓர் வன்முறை பரவுவதை கவனித்திருக்கிறீர்களா" எனும் நுணுக்கம் ப்பா... எனும் வியப்பைத் தரும். அடுத்த முறை சீப்பை பிடிக்கும்போது கூட மனதை கவனிக்கும் பக்குவம் தானாக வரும். பட்டுத்தான் வாழ்க்கையை தெரிந்துகொள்ள வேண்டுமென்பது எல்லா சமயங்களிலும் இல்லை. நல்ல குதிரைக்கு சவுக்கின் நிழலே போதும். இந்த பதில்களே அனுபவத்திற்கு இணையான பலமுடையவை.
ஒவ்வொரு கேள்வியையும் எடுத்துக்கொண்டு, 'இதோ எப்படி பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்' என்பதை கூறுவதற்காக இதை எழுதவில்லை. கேள்வி பதில்களின் பின்னாலுள்ள அவர் கவனிக்கச் சொல்லும் இலக்கு எத்தகையது என்பதைத்தான் கூறுகிறேன். கேள்விக்கான பதில்கள் என்பது அவரவர்க்கு உண்டான பார்வை. குறுக்கே புகுந்து இப்படி புரிந்துகொள்ளுங்கள். அப்படித்தான் நானும் புரிந்துகொண்டேன் என்பது அதிகப்பிரசங்கித்தனம் என் அபிப்ராயம். வாசித்தல் என்பது வாசகனுக்கும் எழுத்தாளருக்குமான உறவு. அதற்கு நடுவே எந்தப் பூசாரியும் தேவையில்லை என்பது என் துணிபு.
"சில பதில்கள் புரியவில்லையே. கடினமாக இருக்கிறதே" என்று எவரேனும் சொல்லக் கூடும்.
"பரவாயில்லை. மாவடு ஊறுவதுபோல மனதில் ஊற வையுங்கள். தானாக ஊறிப் புரியும். வார்த்தைகளுக்கிடையே தேடாமல் விஷயத்தின் உக்கிரத்தை மெதுவாக வாங்கிக் கொள்ளுங்கள். பிரம்ம சூத்திரத்தின் பாஷ்யம் கூட அதற்குள் இருக்கும். யாருக்குத் தெரியும்."
"ஐயா ... பிரார்த்தனை செய்கிறேன். ஆனாலும், பிரச்னைகள் அதிகமாகிறதே. என்ன செய்வது"
"பிரார்த்தனையை பலப்படுத்து. அதுதான் உன்னால் செய்ய முடிந்த காரியம்" என்பது போன்ற தொனியில் எழுதப்பட்ட பதில்கள் எத்தனை ஆறுதலைத் தருபவை.
கனவைப் பற்றிய விளக்கங்கள் அபாரமானவை. இமை மூடலில் தொடங்கி அடுத்தநாள் விடியற்காலை வரை சொப்பன ஸ்திதியை அலசியிருப்பார். அதை நன்கு உள்வாங்கும்போது கனவில் விழிப்பு பெறுதல் நிச்சயம்.
பல கேள்விகள் வி.ஐ.பி - யான இவர் எதை எதை விரும்புவார் என்கிறபடியும் இருக்கும்.
சாம்பார் பிடிக்குமா? எந்த சட்னி நன்றாக இருக்கும். மலர்களில் முல்லையா? மல்லியா? எந்த நிறங்கள் உங்களை கவர்கின்றன? இப்போது நகரத்தின் இரைச்சல் மிகுந்த விஷயம் என்ன? வளர்ப்பு பிராணிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? விரும்பும் ஊர்? ஏன் வெள்ளை உடை? என்றெல்லாம் தனிப்பட்டியல் நீளும். எல்லா பதில்களும் கொம்பில் பழுத்தவையாக இருக்கும். அவர் திருப்தியுறும் வரை சொல்லிச் செல்வார். பகவான் யோகி ராம் சரத்குமார் அடிக்கடி சொல்வர் நாலெட்ஜ் வேறு. விஸ்டம் வேறு என்று. பாலகுமாரன் விஸ்டம் அனுபவக்கனி.
பாலகுமாரனின் தத்துவங்கள் நிறைந்த பதில்கள் பேரமைதியை நம்மீது கவிழச் செய்பவை. அகந்தையை கூறுபோட்டு அறுப்பவை. சிலது சாட்டையடியாக இருக்கும். அம்மாதிரியான பதில்கள் அகந்தையை ஒரு மூளைக்கு நகர்த்தி... நகர்த்தி... ஒரே வெட்டாக வெட்டும் படி இருக்கும். பாலகுமாரன் ஒருகாலும் அகந்தையை தடவித் தடவி வளர்த்ததில்லை. அதில் அவர் கசாப்புக் கடைக்காரனைவிட வேகமானவர். ஈவு இரக்கமற்றவர் என்பதை அருகிலிருப்போர் உணர்ந்திருப்பார். 'நீ இவ்வளவு தூரம் என் எழுத்தை புகழ்கிறாயே' என்று இம்மியளவும் பச்சாதாபம் காட்டமாட்டார். அகங்காரத்தோடு இருந்தால், திரிந்தால் 'நான்' எனும் அகந்தையை வேரோடு அசைத்துப் பார்க்கவும் தயங்க மாட்டார். வார்த்தைகளை சீவியெடுத்து விளாறுவார் ஏற்றுக் கொண்டால் மேலே நகரலாம். அவரிடமிருந்து நகர்ந்து கொண்டால் நஷ்டம் நமக்குத்தான். அன்பையும் அகங்காரம் அறுத்தலையும் ஒரே நேர்கோட்டில் நிகழ்த்துவதை பொறுமையோடு பக்கத்தில் இருந்தால் பார்க்கலாம். ஏனெனில், பாலகுமாரன் என்கிற வஸ்து, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பேனா அவரின் கருவி. மாபெரும் ஆளுமை. அமைதியாக அவர் அமர்ந்திருக்கும்போது அருகிலே சென்றால் நமக்குள் ஏதோ ஒன்று ஊடுருவி நடுக்கத்தை உண்டு செய்வதே அதைப் புரிய வைக்கும். மோகமுள்ளில் தி.ஜா., "அத்தனை ஆட்சி உண்டு ரங்கண்ணாவிற்கு" என்பார். அந்த ஆட்சி இவருக்கும் உண்டு.
இன்னும் இன்னும் நிறைய எழுத ஆசையாக இருக்கிறது. ஆனால் ஆய்வுக் கட்டுரையாக மாறி அலுப்பூட்டுமோ என்கிற தயக்கத்தோடு நிறைவு செய்கிறேன்.
என்றென்றும் அன்புடன்
கிருஷ்ணா.
*************************************
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
SKU Code | TMN B 110 |
---|---|
Weight in Kg | 0.060000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பாலகுமாரன் Balakumaran |
Publisher Name | திருமகள் நிலையம் Thirumagal Nilayam |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 10.00 Discount: 6.25%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%