இரு புதினங்கள் அடங்கிய தொகுப்பு - முதிர்கன்னி மற்றும் கடவுள் வீடு.
முதிர்கன்னி: இது நமது ஔவையார் பற்றிய கதை. இளமை கூடிய ஔவை முதிய பருவத்தை அடைவது, இறைவன் பால் கொண்ட பக்தி, அங்கவை சங்கவை வாழ்க்கையில் ஔவையின் செயல்கள், மேலும் ஔவை பற்றிய அணைத்து கதைகளும் ஒருங்கிணைத்து ஆசிரியர் இப்புதினத்தை படைத்துள்ளார். ஔவையின் பால் நாம் கொண்ட அன்பு மிகையாகிறது, அவரின் வாழ்க்கை நமக்கு இங்கே பாடமாகிறது.
ஒட்டக்கூத்தரின் அலட்டலை ஔவையாரால் ஜீரணிக்க முடியவில்லை. "நான் சில முத்திரைகளை கை விரல்களால் செய்கிறேன். அந்த முத்திரைகளை பார்த்து உன்னால் கவிதை எழுத முடியுமா" என்று ஒட்டக்கூத்தரைக் கேட்க, ஒட்டக் கூத்தர் சரியென்று ஒத்துக் கொண்டார்.
ஔவையும் சில முத்திரைகள் செய்தாள். ஒட்டக்கூத்தர்,
இவ்வளவு கண்ணினால் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்றஇள முலையால் இவ்வளவாய்
நைந்த வுடலால் நலமேவ மன்மதன்றன்
ஐந்து கணை யால் வாடினாள்.
என கவிதை சொன்னார். ஔவை வாய்விட்டு சிரித்தார்.
"யார் கையசைத்தாலும் அது சிற்றின்பமாகவே உன் கண்களுக்கு தெரிகிறதென்றால், உன் புத்தியை என்னவென்று சொல்வது ஒட்டக் கூத்தா. நான் இதற்கு விளக்கம் சொல்கிறேன் கேள்" தன் விரலால் முத்திரைக் கேற்ப ஒரு கவிதை சொன்னாள்.
"ஐயம் இடுமின்
அறநெறியை கைப்பிடிமின்
இவ்வளவேனும் அன்னத்தை இட்டு உண்மின்
தெய்வம் ஒருவனே என உணரவல்லீரே
அறுவினைகள் ஐந்தும் அரும்."
அவையிலுள்ள புலவர்கள் சிற்றின்ப பாடல்கள் பாட, அந்தணர்களோ வடமொழி தான் மிக உயர்ந்த மொழி என்றும் கடவுளுக்குப் புரிந்த மொழி என்றும், வடமொழியில்தான் கடவுளைப் பூஜிக்க வேண்டும் என்றும் உரத்த குரலில் பேசிக் கொண்டார்கள்.
ஔவையார் அதையும் வேகமாகக் கண்டித்தார். தூரத்து மொழியோ, தமிழ் மொழியோ சொல்லப் போனால், இரண்டும் கடவுளுக்கு ஒன்றுதான். முனிவர்களின் வாய்மொழியை வேதங்கள் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் வாய்மொழி போல, பல மொழிகள் காலத்தால் வளர்ந்து தள்ளப்பட்டன. எனவே, இறைவழிபாட்டிற்கு மொழியை முக்கியமாகக் கொள்ள வேண்டாம் என்பது போல ஒரு கவிதை பாடினாள்.
சேய்மொழியோ தாய்மொழியோ செப்பில் இரண்டுமொன்றே
வாய்மொழியை யாரும் மறையென்பர் வாய்மொழிபோல்
ஆய்மொழிகள் சால உளவெனினும் அம்மொழியும்
சாய்மொழிய வென்பேன் தகைந்து.
கடவுள் வீடு: விதுரர் ஆழ யோசித்தார். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் உள்ள பிரிவு பெரிதாகும் என்று புரிந்து கொண்டார். இந்த சண்டை வந்தால் தான் நல்லது என்பதையும் புரிந்து கொண்டார்.
மக்கள் தொகை அதிகரித்து விட்டது. இரண்டு வகையில் அது குறையும். ஒன்று இயற்கை உற்பாதம் அல்லது மிகப் பெரிய யுத்தம். இப்போதைக்கு இயற்கை உபாதம் வர வாய்ப்பு இல்லை. ஏனெனில் ஹோமங்களும் யாகங்களும் இடைவிடாது நடைபெறுகின்றன. சாதுக்களை யாரும் துன்புறுத்துவது இல்லை. ஏனெனில் ஹோமங்களும் யாகங்களும் இடைவிடாது நடைபெறுகின்றன. சாதுக்களை யாரும் துன்புறுத்துவது இல்லை. ஆனால் பாமர மக்களை அதிகம் துன்புறுத்துகிறார்கள்.
பாமர மக்களை அதிகம் துன்புறுத்தினால் வெகு நிச்சயமாய் யுத்தம் வந்து விடுகிறது. சாதுக்கள் இயற்கையோடு தொடர்பு கொண்டவர்கள். பாமர மக்கள் அரசர்களோடு தொடர்பு உள்ளவர்கள்.
ஒரு அரசனைத் தாக்கினால் இன்னொரு அரசன் பக்கம் அவர்கள் ஓடி விடுவார்கள். உயிர் வாழ்வதற்காகவும், துன்புறுத்தப்படாமல் இருப்பதற்காகவும் துன்புறுத்தும் அரசனைவிட வலுவுள்ள அரசனிடம் அவர்கள் போய் விடுவார்கள்.
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.