Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

அவர் தலைவர் - இலங்கை ஜெயராஜ் - Avar Thalaivar - Ilangai Jeyaraj - Avar Talaivar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
VAN B 197
₹100.00

இலக்கியத் திறனாய்வு நூல். 

காகித உறை/ பேப்பர்பேக்; 

184 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: மே, 2016.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் அவர் தலைவர், இலங்கை ஜெயராஜ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                                                                                                                        
முன்னுரை: 
- கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் - 
 
உத்தமக் கம்பனின் பொற்பதம் தொட்டார்
சத்தியம் உணர்ந்து சகத்தினில் நிலைப்பர்.
கல்வியின் கரைகான முடியாதது போல
கம்பனின் கரை காணலும் ஆகாத செயலாம்.
கம்பனின் இராமகாதை வெறும் இலக்கியம் அன்றாம்.
அஃது வேத வித்தை உள்ளடக்கி விரிந்த நூல்.
 
***
 
உலகம் நிலைக்க அறம் நிலைத்தல் அவசியம்.
அறம் நிலைக்க வேதம் நிலைத்தல் அவசியம். 
வேதம் நிலைக்க கம்ப காவியம் நிலைத்தல் அவசியம்.
அவ்வகையில் உலகின் நிலைத்தல் தன்மைக்கு 
கம்ப காவியம் காரணமாவதை அறிய 
அதன் விரிந்த பெருமை மேலும் விரியும்.
 
***
காலம் கடந்ததால் மட்டுமன்றி 
கல்வியைக் கடந்ததாலும் 
கம்பனில் கடவுட்சாயல் தெரிகிறது.
 
ஓங்கு தமிழின் உயர் சிகரங்களை 
தாங்கித் தமிழ் செய்தவன் கம்பன்.
கம்ப காவியம்,
நுண்மையில் அனுவுக்கு அணுவாயும் 
பெருமையில் அப்பாலுக்கு அப்பாலாயும் 
மாயம் செய்து மயக்குவது.
 
***
 
உள் நுழைந்தாரை 
விண்ணேற்றி வீடு காட்டும் வீரியம் 
கம்பன் தமிழ் செய்யும் அற்புதக்காரியம்.
 
உலகியல், அருளியல் எனும் இரண்டிலும் 
வெற்றி காட்டி வீறு தரவல்லது கம்பன் தமிழ்.
பாமரரையும் பண்டிதரையும் மட்டுமன்றி 
பரமனையும் நமக்கு ஆளாக்கும் சக்தி 
கம்பன் செய்த தனித்துவ உத்தி.
 
***
 
தேவர், மனிதர், அரக்கர், 
விலங்கு, பறவை, தாவரம் என 
அனைத்து உயிர்களையும் 
ஒன்றாக்கி உறவாக்கிக் காட்டினான் கம்பன்.
உயிரனைத்தும் ஒரு பொருளின் படைப்பே என உணர 
அவற்றின் உறவாம் தன்மை புலப்பட்டு 
கம்பன் தன் தீர்க்க தரிசனம் தெளிவாகும்.
 
பகையால் சிதறிக்கிடக்கும் இன்றைய உலகை 
ஒன்றாக்கி உறவாக்கி உயர்விக்க 
கம்ப காவியத்தைத் தவிர வேறு கருவி இன்றாம்.
கம்ப காவியத்தைக் கற்கக் கற்க 
அதன் கனதி தெரிகிறது.
மனதில் அமைதி தெரிகிறது.
 
***
 
உயர் கம்பனின் தாள்களைத் தொட்டதால்
உயர்ந்தோர் மனதில் எனக்கும் ஓர் இடம் கிடைத்தது.
அங்ஙனம் வாய்த்த 
முன்னைத் தவத்தால் கிடைத்த உறவே 
புதுவைக் கம்பன் கழகத்தார் தம் உறவாம்.
அமரர் கம்பவாணர் புலவர் அருணகிரி ஐயா அவர்கள் 
கடல் தாண்டிக்கிடந்த இக்கடையேனை 
அன்று அணைத்து ஆதரித்தார்.
இன்று அவர் இடத்தில் நின்று 
கம்பன் பணியைக் கடவுட்பணியாய் ஆற்றும் 
கம்ப காவலர் வக்கீல் முருகேசனார் 
என்னைத் தாயாய், தந்தையாய்த் தங்கித் தண்ணருள் செய்கிறார், 
இன்று புதுவைக்கழகத்தின் தூண்களாய் விளங்கும் 
பெரியவர் கோவிந்தசாமி முதலியார், வேல்சொக்கநாதனார்,
கல்யாணசுந்தரனார், சிவக்கொழுந்து ஆகியோர் 
காரணமின்றி என்மேல் அன்பைச்சொரியும் கருணையாளர்கள்.
இவர்தம் அன்பு வாய்க்க என்னதவம் செய்தேனோ?
அனைத்தும் கம்பன் செய்த கருணை அன்றி வேறென்ன?
 
***
 
புதுவைக்கம்பன் கழகத்தின் பொன் விழா ஆண்டாய் இவ்வாண்டு மலர்கிறது.
அரை நூற்றாண்டைக்கடந்த அரிய பணி.
கால் நூற்றாண்டாய் அவர்கள் கைதொட்ட உரிமை எனக்கும்.
அவ்வுரிமை பற்றி பொன்விழாப் பொலிவில் எந்நூலுக்கும் ஓர் இடம்.
அகம் மகிழ "அவர் தலைவரை" அன்போடு உங்கள் முன் படைக்கிறேன்.
 
***
என் மனச் சிகரத்தில் நான் வைத்திருக்கும் ஊரன் அடிகளார், 
இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பபது 
எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு.
வள்ளலார் தடம் பற்றி வாழும் மாமுனிவர் அவர்.
பேரறிவுச் சிகரம்.
தமிழையும் சமயத்தையும் ஆழ்ந்து கற்ற அறிவூற்று.
எங்கள் தலைமுறையில் எஞ்சியிருக்கும் 
சென்ற தலைமுறையின் சீராளர்.
நான் கேட்டதும் மனமுவந்து 
இந்நூற்கான அணிந்துரை தந்துதவினார்.
அவர் வாழ்த்தால் 
என் வாழ்வும் இந்நூலும் சிறக்குமென நம்புகிறேன்.
அவர்தமை
வணங்குதலன்றி வாழ்த்துதல் என் நாவுக்கு அடங்காது.
 
***
 
இம்முறை நூலுக்கு,
என் மாணவன் அ.வாசுதேவா முன்னுரை தந்திருக்கிறான்.
அம்முன்னுரை என்னையும், அவனையும் அளக்க, 
நிச்சயம் துணைபுரியும் என நம்புகிறேன்.
தமிழின்பாலும் கம்பனின்பாலும்
எல்லையற்றப் பித்துக் கொண்டவன்.
இந்தத் தலைமுறை பிள்ளையா? என எண்ண வைப்பவன்.
தமிழைத்தொண்டை. வெறும் புகழ்க் கருவியாய் அன்றி 
தன் உயிர் விருப்பாய்க் கொண்டு இயக்குபவன்.
கம்பனால் என்னை நேசிக்கும் கண்ணியன். 
தமிழ்த்தாய் எனக்குத்தந்த உன்னத உறவுகளில் 
இவனும் ஒருவனாய் இணைந்தனன். 
"ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்." 
 
வழமை போல எனது இந்நூலையும் வானதி பதிப்பகத்தாரே வழங்குகின்றனர்.
பெரியவர் திருநாவுக்கரசு ஐயா அவர்களுக்குப் பின் 
பிள்ளை இராமுவும் பாரம்பரியம் மாறாது 
பணிவும் அன்பும் பலம் சேர்க்க
அரிய நூல்கள் தந்து அறிவுலகை காத்து வருகிறார்.
தலைமுறை கடந்து இத்தகுதி மேலும் நீடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அழகுற அச்சிட்ட அவர் தமக்கும் எனது நன்றிகள்.
 
***
 
இந்நூலில் அமைந்த சில கட்டுரைகளில் சில 
என் எண்ணத்தில் உதித்தவை.
ஒரு சில உயர்ந்தோர் சொல்லக்கேட்டு நான் விரித்தவை,
மூன்றும் இரண்டும் எனும் கட்டுரைக்கு என் ஆசான் 
இலக்கண வித்தகர் நமசிவாயதேசிகர் உரைத்த நுட்பம்.
 
***
 
மற்றையோர் செய்தியை உரைத்தல் தகுமா? வினாப் பிறக்கும். 
"முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்
பொன்னே போல் போற்றுதும் என்பதற்கும் - முன்னோரின் 
வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும் 
கூறு பழம் சூத்திரத்தின் கோள்"
எனும் நன்னூற் சூத்திர அதிகாரத்தால் 
உலகம் உயர்ந்தவற்றைப் பெறவேண்டும் எனும் உள்நோக்கத்தோடு 
உயர்ந்தோர் தம் செய்திகள் சிலவற்றையும் 
உள்வாங்கி இந்நூலில் உரைத்துள்ளேன்.
 
***
 
வழமை போல இந்நூற்பதிப்பில் துணை செய்த என் அன்பர்கள் 
ஸ்ரீ.பிரசாந்தன், ச.மார்க்கண்டு, அ.வாசுதேவா, செ.சொபிசன், 
செல்வி ஸ்ரீ.வாஹினி, திருமதி.த.நளாயினி, திருமதி.சுதா கோபி 
ஆகியோருக்கு என் நன்றியும் வாழ்த்தும் என்றும் உரித்தாகும்.
 
***
 
கட்டுரைகளில் அமைந்த தவறுகளுக்கு நான் உரிமையாளன்.
தகுதிகளில் இவர்க்கும் பங்குண்டாம். 
தரமறிந்து இந்நூலை ஏற்க வேண்டி 
தக்கோர் தாள்களைப் பணிகிறேன்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
 
உள்ளுறை: 
அவர் தலைவர்; 
ஈந்தனன் அன்றே ! ; 
கொணர்க ! - வருக ! ; 
கணவனைப் பிரிந்த காரிகையர்;  
மூன்றும் இரண்டும்;  
கம்பனில் உளவியல் கூறுகள்;  
பாலை;  
கம்பனில் பிரமாணங்கள்; 
கம்ப விளக்கு.                           
                                                       ***
 
அணிந்துரை:
 - ஊரன் அடிகளார் - வடலூர்
 
இந்திய நாட்டின் இதிகாசங்கள் இரண்டு. 1.இராமாயணம், 2.பாரதம். இரண்டிலும் இராமாயணமே முதலில் வைத்து எண்ணப்பெறுவது. "இதிகாச சிரேஷ்டமான இராமாயணம்" என்பார் ஆசாரிய சிரேஷ்டராகிய மணவாள மாமுனிகள். இந்திய மொழிகள் பலவற்றிலும் இராமாயணம் உள்ளது. இராமாயணம், மொழி எல்லையைக் கடந்தது போலவே இராமாயணம், நாட்டு எல்லைகளையும் கடந்தது. கடல் கடந்து கிழக்கு ஆசிய நாடு முழுவதிலும் பரவியுள்ளது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், காம்பூச்சியா (கம்போடியா - காம்போஜம்), தாய்லாந்து (சயாம்), சுமத்ரா, ஜாவா, பாலி முதலிய நாடுகளில் இராமாயண வரலாறுகளும் பண்பாடும் காணப்படுகின்றன. தாய்லாந்து மன்னர்கள் "ராமா" என்று வழங்கப் பெறுகிறார்கள். முதலாவதாக ராமா, இரண்டாவது ராமா, மூன்றாவது ராமா, நான்காவது ராமா ........... ஒன்பதாவது ராமா என வழங்கப்பெறுகிறார்கள். கிழக்கு ஆசிய நாடுகளில் உலகளாவிய அளவில் இராமாயண மாநாடுகள் இன்றும் நிகழ்கின்றன.
 
வால்மீகியின் வடமொழி இராமாயணத்தைக் கம்பர் தமிழ்க்காப்பியமாகச் செய்தார். தமிழ்க்காப்பியங்களில் கம்பராமாயணம் மிகவும் சிறந்து முதன்மை பெற்று விளங்குகிறது. "கல்வியிற் பெரியர் கம்பர்", கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்" என்று பழமொழிகள் எழுந்தன. "கம்பனாரிடைப் பெருமை உளது." என்றார் வீரசோழிய உரைகாரர் பெருந்தேவனார். "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு", "புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு", "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை" என்று பாடினார் மகாகவி பாரதியார். தமிழுக்குக் கதியாவார் இருவர், ஒருவர் கம்பர், மற்றொருவர் திருவள்ளுவர், க - கம்பர்,  தி - திருவள்ளுவர் என்றார் திருமணம் செல்வகேசவராய முதலியார். அவரது இக்கூற்றுக்கேற்ப இந்நாளில் கம்பன் கழகங்களும் திருவள்ளுவர் கழகங்களும் நாடெங்கும் கடல்கடந்த நாடுகளிலும் தோன்றி, கம்பர் திருவள்ளுவர் சீர் பரவும் பரப்பும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றன.
 
சைவத்திற்கு ஒரு நாவலரைத் தந்த இலங்கை, கம்பருக்கு ஒரு கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களைத் தந்து சிறந்தது. இலங்கைத்தமிழ் இலங்கைச்சைவம் கூர்மையானது. இலங்கைத் தமிழர் இலங்கைச்சைவர் கூர்மையானவர்கள். உண்மை கூறுவதில் அரசுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ அஞ்சி "அடக்கி வாசிப்பவர்கள்" அல்லர். இலங்கைத் தமிழ் சைவ நூல்களைப் படித்தும், கடல் கடந்த நாடுகளின் சுற்றுப் பயணத்தில் நேரில் கண்டும் யாம் அறிந்த உண்மை இது.
 
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் கம்பனுக்கே வாழ்க்கைப்பட்டவர். தமிழகத்தில் கம்பனடிப்பொடி இலங்கையில் கம்பவாரிதி, பூவுலகத்துக்கு அப்பால், வேறு உலகங்களில், சந்திரமண்டலம் போன்றவற்றில், மனிதர் குடியேறி வாழ நேர்ந்தால் அங்கு முதன்முதலில் தோன்றுவது கம்பன் கழகமாகத்தான் இருக்கும். அதன் நிறுவனர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜாகத்தான் இருப்பார். கம்பவாரிதியின் சொல்லோவியங்கள் சிலவற்றைக் கேட்டுள்ளோம். எழுத்தோவியங்கள் சிலவற்றைப் படித்துள்ளோம். பேச்சு வல்லார், எழுத்து வல்லார், சிந்தனை வல்லார், செயல் வல்லார். அகில இலங்கைக் கம்பன் கழகம், கொழும்பு, இலங்கையில் 2011ஆம் ஆண்டு நடத்திய கம்பன் விழாவில் உரையாற்றச் சென்றிருந்தபோது கம்பவாரிதியின் கைவண்ணத்தை (செயலருமையை) நேரில் கண்டு களித்தோம். இலங்கையில் கம்பன் கழகம் நிறுவுவதற்கென்றே பிறந்த பிரமச்சாரி இவர். கம்பன் கோட்டம் மட்டுமன்றி நவீன தத்துவ முறையில் சிவசக்தி கோயில் ஒன்றையும் புதிதாகக் கட்டியுள்ளார். கம்பவாரிதியைப் போன்றோர் தமிழகத்தில் மிகமிக அரியர். அவருக்கு ஈடுகொடுப்பார் இலர் என்பது எம் எண்ணம். இனி அவரது நூல் "அவர் தலைவர்" என்பதற்கு வருவோம்.
 
"அவர் தலைவர்" என்பது கோடியில் ஒரு சொல். கம்பராமாயணக் கடவுள் வாழ்த்தில் வருவது. எடுத்த எடுப்பிலேயே, தொடக்கத்திலேயே, கடவுள் வாழ்த்திலேயே கம்பர் வென்று விடுகிறார். கடவுள் வாழ்த்துப் பாடலோடேயே  ஒவ்வொரு காண்டத்தையும் தொடங்குகிறார் கம்பர். பாலகாண்டத் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் மூன்று, ஏனைய காண்டங்களின் தொடக்கத்தில் ஒவ்வொன்று, ஆகக் கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் எட்டு. 
 
இவை தவிர நூலுள் ஆங்காங்கே விராதன், கவந்தன், வாலி, அனுமன், கருடன், பிரகலாதன், பிரமன், இந்திரன், வருணன், தேவர்கள் ஆகியோரின் துதியாகவும் கூற்றாகவும் வரும் பாடல்கள் பல, கவிக்கூற்றாக அமைந்த பாடல்கள் பல, கடவுள் வாழ்த்தாகவே அமைந்துள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து ஆராய்ந்தால் கம்பனின் கடவுட் கொள்கை இன்னதெனத் தெளிவாத் தெரியும். அதன் ஒரு பகுதிதான் அவர் தலைவர் என்னும் இந்நூலின் முதற்கட்டுரை. முதற்கட்டுரையின் பெயரே நூலுக்கும் பெயராயிற்று.
 
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், 
நிலைபெருத்தலும், நீக்கலும், நீங்கலா 
அலகுஇலா விளையாட்டு உடையார் - அவர் 
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
 
என்பது கம்பராமாயணக் கடவுள் வாழ்த்து. 
 
உலகுஎலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் 
நிலவு உலாவிய நீர்மலி வேணியன் 
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான் 
மலர்சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.
 
என்பது பெரியபுராணக் கடவுள் வாழ்த்து.
 
உலகம் யாவையும், உலகு எலாம் என்பதற்கு எல்லா உலகங்களையும், நாம் வாழும் நிலவுலகம் மட்டுமன்றி, வான் உலகம், புராணங்கள் கூறும் ஈரேழு பதினான்கு உலகங்கள், பிரம்மலோகம், சத்தியலோகம் போன்றன, இந்திரலோகம், சந்திரலோகம் போன்றன, அண்டம், பேரண்டம், இன்றைய விஞ்ஞானம் கூறும் யூனிவர்ஸ் (Universe) காஸ்மாஸ் (Cosmos) ஆகிய அனைத்தும் அடங்கிய வரம்பிலாப் பெரும்பேருலகம் என்று ஒருவாறு பொருள். "உலகெலாம் என்னும் மெய்ம் மொழிப் பொருள் விளக்கம்" என்று இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தத்துவ தாத்துவிக உலகங்களை வரிசையாகக் கூறி இன்னும் இதனை விரிக்கிற்பெருகும் என்று முடித்திருக்கிறார் வள்ளலார் இராமலிங்கப் பெருமான். "உலகம் யாவையும்" என்றே கம்பவாரிதியும் ஒரு கட்டுரையை முன்னமே வரைந்துள்ளார். 
 
உலகெலாம், உலகம்யாவையும், அலகில்சோதியன், அலகிலாவிளையாட்டுடையார் என்பதில் உள்ள உலகும் அலகும் வள்ளலார் உள்ளத்தைக் கட்டுகின்றன. இளமையில் பாடிய திருவருட்பா மகாதேவமலை 100 பாடல்களில் முதற்பாடலிலேயே உலகு அலகுகளை வைக்கிறார். உலகு எனத் தொடங்கி அலகில் எனமுடிக்கிறார்.
 
உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள 
உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான்ஆகிக் 
கலகநிலை அறியாத காட்சி ஆகிக் 
கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ணதாகி 
இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
இயல்பாகி இணையொன்றும் இல்லாதாகி 
அலகில் அறிவானந்த மாகிச் சச்சி 
தானந்த மயமாகி அமர்ந்த தேவே - மகாதேவமாலை 1
 
(திருவருட்பா 2071)
 
பின்னாளில் திருவருட்பா ஆறாந்திருமுறை அருட் 
பெருஞ்சோதி அகவலிலும் 
 
உலகெலாம் பரவ என்னுள்ளத் திருந்தே 
அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ் ஜோதி - 4615 (335 - 6) 
 
எனப்பாடுகின்றார். இவ்வாறு இன்னும் சில இடங்கள் உள எனினும் விரிவஞ்சி விடுத்துமேற்செல்வோம்.
 
"உலகம் யாவையும்" என்று தொடங்கும் கம்ப ராமாயணக் கடவுள்வாழ்த்துப் பாடலை எடுத்துக்காட்டி அதன் விளக்கமாகக் கம்பவாரிதி எழுதும் சில பல வரிகள் உண்மையிலும் உண்மை. "கம்பனது இக்கடவுள் வாழ்த்தில், இறையின் செயல் உரைக்கப்பட்டதே அன்றி, இறையின் நாமம் உரைக்கப்படவில்லை". "ராமாயணம் இதிகாசமாய் உரைக்கப்பட்டிருந்த போதும் வைஷ்ணவத்தை முழுமையாய் நம்பாததால் வைஷ்ணவர்களும் திருமால் அவதாரத்தைப் பாடியதால் சைவர்களும் தம்சமயத்தின் நூலாய் ஒப்ப முன் வந்தார் அல்லர், அவர்தம் முரண்பாடு நலன் விளைத்து, கம்பகாவியமாம் உலக காவியமாய் விரிந்து புகழ்பெறக் காரணமாயிற்று." எனக் கம்பவாரிதி எழுதியிருப்பது (பக்கங்கள் 6;7) கண்கூடாகிய உண்மை. இதற்குமுன்பு 2;3- ஆம் பக்கங்களில் "தமிழ்நாட்டில் சைவ வைஷ்ணவ சமயப்பூசலே பெரிதாய் விளைந்தது... இச் சைவ வைஷ்ணவ முரண்பாடு முற்றிவிரிந்தது" என்று எழுதியுள்ளது நூற்றுக்கு நூறு எம்கருத்துக்கு இசைந்தது. சைவ வைணவ ஒற்றுமை ஏற்படாதவரை, வேற்றுமை ஒழியாதவரை, இந்து சமயம் உருப்படாது, இந்து சமயத்திற்கு நல்லகாலம் இல்லை என்பது எம்முடிந்தமுடிவான கருத்து. இதில் கம்பவாரிதியும் நாமும் ஒரு நிகர்.

"கம்பன் தலைவர் என்று உரைத்தது மும்மூர்த்திகளுக்கும் தலைவரான உருவும் பெயரும் அற்ற; சிந்தனை கடந்த சொரூப நிலையற்ற மூலப்பரம்பொருளையே ஆகுமாம்". "வேதமுதற் காரணன் என்று இராவணனூடு கம்பன் உரைப்பது, மூல முழுமுதற் கடவுளேயாம். சமயஎல்லையைக் கடந்தே அவன்காவியம் செய்தான், என்றும் அவன் பாடிய காவியநாயகன் இராமன் மூலப் பரம்பொருளின் அம்சமே என்றும் அரியும் சிவனுமாய் இருப்பது ஒன்றேயான மூலப்பரம்பொருளே என்றும் தெளிவுறநாம் விளங்கிக்கொள்கிறோம்", என்றெல்லாம் எழுதி கட்டுரையை நிறைவுசெய்யும்போது "அவர் தலைவர் எனக் கம்பன் உரைத்தது மும்மூர்த்திகளை அல்ல என்றும் பரம்பொருளாய்த் திகழும் மூலமுதற்கடவுளையே என்றும் தெற்றெனத் தெரிந்து கொள்கிறோம். அதனால் மதம் கடந்து பலரும் கம்பனைக் கற்கும் காரணம் புரிய, நம் மனம் மகிழ்கிறது" என்று மனமகிழ்ச்சியோடு நிறைவு செய்கிறார். கம்பவாரிதியின் இம்மன மகிழ்ச்சி, வாசகர் அனைவர்க்கும் மனமகிழ்ச்சியளிப்பதாகும் என்பதில் ஐயமில்லை. எம் உள்ளத்திற்கு முற்றிலும் உடன்பாடே.

அவர் தலைவர் என்னும் இக்கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்பது கட்டுரைகளான் இயல்வது. முதற்கட்டுரை "அவர் தலைவர்". ஒன்பதாவது ஈற்றுக்கட்டுரை "கம்ப விளக்கு". இக்கட்டுரை முத்திரைக் கட்டுரை எனும் தகையது. உலகில் அஞ்ஞான இருள் அகல, தீய மறஒழுக்கம் குன்றி, தூய அறஒழுக்கம் ஓங்கி வளரக் கம்பவிளக்கை உயர்த்திப் பிடிக்கிறார் கட்டுரை நூலாசிரியர் கம்பவாரிதி. நிகழ்கால நிலையை நம்கண்முன்னே நிறுத்தி, நிகழும் அறச்சிதைவுகளையெல்லாம்நிரல்படக் காட்டி, மறஇருள் நீங்கி அறஒளி பரவுவதற்குத் தீர்வு கம்பவிளக்கே என்று ஒளிக்காட்டுகிறார்.

"கால மாற்றத்தால் அறச்சிதைவு நிகழ்கிறது எனக் கண்டோம். அறம் என்பது இயற்கையேயாம். அறச்சிதைவு என்பது இயற்கையைச் சிதைப்பதேயாம். இன்றைய அறிவியல் இயற்கையோடு முரண்படும் காரியத்தையே விஞ்ஞான வெற்றியாகக் கொண்டாடுகிறது. இயற்கையோடு நாம் முரண்பட, இயற்கை நம்மோடு முரண்படும். இஃதே பஞ்சபூதங்கள் இன்று கிளர்ந்தெழுதற்காம் காரணம்" என்று கம்பவாரிதி கூறுவது (பக்கம் 173) முற்றிலும் உண்மை. நூற்றுக்கு நூறு உண்மை.

"இவ்வுலகில் ஓரளவேனும் அறத்தை நிலைக்கச் செய்து பிரபஞ்சத்தின் அழிவைத் தடுத்து நிற்கும் கம்ப காவியம் கலியுகத்தை இருள் முழுமையாய் விழுங்கி விடாது காத்துநிற்கும் நந்தாவிளக்காய் விளங்குகிறது.... அறத்தைக் காத்துநிற்கும் அரிய கம்பவிளக்கை உயிரினும் மேலாய்ப் போற்றுதல் நம் கடமையன்றோ ! கம்ப விளக்கைக் காக்கும் கடமை தமிழர்க்காக அன்றாம். இத்தரணிக்காக என்று உணர்தல் அவசியம். (பக்கம் 183) என்று நூலை நிறைவுசெய்கிறார் கம்பவாரிதி.

கம்பவிளக்கு என்னும் இவ்வீற்றுக் கட்டுரை கம்பவாரிதியின் கைவிளக்காய் நின்று உலகுக்கு ஒளிவீசும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்கிறது. இடையிலுள்ள ஏழு கட்டுரைகளும் தலைசிறந்த திறனாய்வுக் கட்டுரைகளே. விரிவஞ்சி அவற்றையெல்லாம் விளக்கப் புகுந்திலம். நூல் முழுவதையும் படித்து மகிழ்ந்தோம். இராமனுக்கு அநுமன் போலக் கம்பனுக்கு வாய்த்த நம் கம்பவாரிதி கங்கை மணலிலும் காவிரி மணலிலும் பலநாள் வாழ்க !

வாழ்க ! வாழ்க !

கம்பநாடன் கழல்போற்றி 

வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே !

- ஊரன்அடிகள். 

 ***************
எழுத்தாளர் பற்றி: இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
More Information
SKU Code VAN B 197
Weight in Kg 0.520000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name இலங்கை ஜெயராஜ் - Ilangai Jeyaraj
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:அவர் தலைவர் - இலங்கை ஜெயராஜ் - Avar Thalaivar - Ilangai Jeyaraj - Avar Talaivar

Similar Category Products