தியானம் - யோகாசனப் பேராசிரியர் ஆசனா இரா.ஆண்டியப்பன் - Dhyanam - Asana R Aandiappan - Dhiyanam Dhiyaanam Dhyaanam Dhyanum Dhyaanum
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
தியானம்.
காகித உறை/ பேப்பர்பேக்;
மொழி: தமிழ்;
முதல் பதிப்பு: ஜனவரி 2006;
மூன்றாம் பதிப்பு: மார்ச் 2019.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
முகவுரை:
யோகத்தின் மூலம் உடல், மன ஆரோக்கியத்தை அடையலாம் என்பது முக்கியம். நல்ல ஆரோக்கியம் ஆன்ம உணர்வுக்கு மிக்க அவசியம் - மனிதர்களிடத்தில் உள்ள தெய்வத் தன்மையை உணர்வதில் மனமே பெரும் பங்கு வகிக்கின்றது. தன்னை அறிந்து கொள்வதற்கோ அல்லது பரம் பொருளையறிந்து கொள்வதற்கோ தியானம் ஒரு வழி ஆகிறது. தியானத்தினால் நமது நிலை சீராகின்றது. நமது தோற்றமும் கவர்ச்சி பெறுகிறது. அதிகமாக உழைக்க முடிகிறது. அவசரம், கவலை போன்ற மன நோய்களும் உடல் நோய்களும் கூட தியானத்தினால் வியக்கத்தக்க அளவு குணம் பெறுகின்றன.
மனித இனத்திற்குப் பயன்படும்படியாக உள்ள ஒரு சேவையில் ஈடுபடுவதற்காக நான் அறிந்த செய்திகள் அனைத்தையும் மற்றும் படித்த தத்துவங்களின் மூலமும் செய்த பயிற்சியின் மூலமும் விளைந்த கருத்துகள் எல்லாவற்றையும் நூலில் எழுத வேண்டும் என்ற ஓர் உந்துதலைப் பெற்றேன்.
தன்னை அறிந்து கொள்ளவும் பரம்பொருளைச் சேரவும் தியானம் ஒரு சாதனமாக எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. கடவுளைப் பற்றி தியானத்தால் அறிந்துகொள்ள முடியாது என்ற கருத்துடையவர்களும், கடவுளே இல்லையென்று கூறுபவர்களும் கூட தியானத்தை மனதிற்கும் உடலிற்கும் நலம் தரும் ஒன்றாக ஒப்புக் கொள்கிறார்கள்.
தியானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம் முதலியவை தடையே இல்லை. எவர் வேண்டுமானாலும் தியானப் பயிற்சியில் ஈடுபடலாம். எல்லா நாட்டிலும் இது பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், செய்முறை மாறுபட்டிருக்கலாம். விஞ்ஞான சாஸ்திரமான தியானம், மனோ வியாதிகளைக் குணப்படுத்துவது சரியானபடி உணரப்பட்டிருக்கிறது.
தியானத்தின் உள் அர்த்தங்களை விளங்க வைப்பதில் விஞ்ஞானம் வெற்றியடைந்திருக்கிறது. சாதாரணமாக மனிதன் அறிய முடியாத மன ஆழத்தை ஊடுருவிப் பார்த்ததில் காணப்பட்ட செய்திகளால் மனோ ஞானக் கலை நிபுணர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்! தியானம் பற்றி நிபுணர்களால் சொல்லப்பட்ட ரகசியங்கள் மூடநம்பிக்கைகள் என்றும் மதத்திற்கு எதிரான கொள்கை என்றும் எண்ணப்பட்டன. ஆனால், அவையெல்லாம் இப்போது மிகவும் மதிப்புள்ளவையாகக் கருதப்படுகின்றன.
மனத்தைப் பரந்ததாக்குவதன் அவசியம் இந்தியாவில் வெகுகாலத்திற்கு முன்னரே பெரியோர்களால் உணரப் பெற்றது. உடலால் செய்யப்படும் வேலைகளுக்கு மனம் தான் காரணம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. உள் உணர்வு, பார்த்தல், பார்த்தலைப் புரிந்து கொள்ளுதல், சிந்தித்தல் ஆகிய்வற்றின் மூலமாக அவர்கள் கண்டுபிடித்தது மனத்திற்கு ஏற்படக்கூடியதை உணர்ந்து கொள்ளுதலும் அதனால் பெறும் சக்திகள் மிகவும் அதிகம் என்பதும் ஆகும். அச்சக்திகளை மேலும் வளர்த்துக் கொண்டால் உடல் கொண்டாட்டங்களால் பெற முடியாத யோக ஆனந்தத்தைப் பெறலாம் என்றும் கண்டிருக்கிறார்கள். அதாவது மனிதவாழ்க்கையின் குறிக்கோளான ஆனந்த எல்லையை மனச்சக்தியால் பெறலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
முடிவிலா ஆனந்தத்தை அடைவதே மனித இனத்தின் குறிக்கோளாக இருக்கிறது. தற்சமயத்தில் மனிதன் சூழ்நிலையிலிருந்தே சுகத்தை அடைகிறான். மற்றபடி அவனுடைய எண்ணங்கள், பேச்சுக்கள், செயல்கள் மூலமாகவும் மகிழ்ச்சி அடைகிறான். இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஆனந்தத்தை அடையவே முயற்சி செய்கிறார்கள். ஆனால் மிகச் சிலராலேதான் அதை அடைய முடிகிறது.
ஆனந்தம் என்பது என்ன? சாதாரண மனிதனுக்கு அது அவனுடைய மனதில் ஏற்படும் திருப்தியாகவே இருக்கிறது. ஒருவனுடைய ஆனந்தத்தையோ அல்லது துக்கத்தையோ நிர்ணயிப்பது அவனது மனநிலைதான். துக்கமடைந்த ஒருவனுக்கு உலகமே உற்சாகமற்றதாயிருக்கும், உற்சாகமிழந்தால் தோல்வி மனப்பான்மையே உண்டாகும். 'என்னால் ஒன்றும் முடியாது' என்ற எண்ணமுள்ள ஒருவனுக்கு உலகம் காற்றில்லாத டயர் போல ஆகும்.
ஒருவர் ஆனந்தத்தை அடைய வேண்டுமென்றால் அவருடைய மனமும் உடலும் நன்கு இணைந்து வேலை செய்ய வேண்டும். இவ்வாறு உடலும், மனமும் இணைந்த ஆரோக்கிய நிலையே ஆனந்தத்தை அடைவதற்கான இன்றியமையாத வழி.
மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதால் மன ஆரோக்கியத்திற்கு உடலும் உடல் ஆரோக்கியத்திற்கு மனமும் காரணமாக அமைகின்றன. அதனால் மனிதன் அடையும் ஆனந்தம் உடலையும் மனத்தையும் சார்ந்தது. இதில் நாம் நினைவு கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், உடல், மனத்தைப் பாதிக்கும் அளவை விட மனம், உடலைப் பாதிக்கும் அளவுதான் அதிகம். இந்த விஷயம் அதாவது உடலின் மேல் மனம் செலுத்தும் ஆதிக்கம் பற்றிப் பழங்காலத்தில் இருந்த முனிவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
பேரானந்தம் அடைவதற்கு ஆரோக்கியமான மனமே காரணம். ஆனால் விதிவிலக்காகச் சிலர் சாதாரண மனநிலையிலும் கூட சந்தோஷம் குறையாமல் இருந்தார்கள். இதற்கு வழிவகுத்தது யோக முறை. மனம், உடல் இவற்றின் நல்ல ஆரோக்கியத்தை அடைவது மட்டும் இல்லாமல் மிகவும் சிறந்த செய்திகளை உள்ளடக்கியது யோகம். ஒருவன் பூரணமாகத் தன்னை அறிவதற்கும், பரம்பொருளோடு சேருவதற்கும் யோகத்தைத் தொடங்கும் வேலையில் மனமும் உடலும் நல்ல நிலையில் இருந்தே ஆகவேண்டும்.
ஆனந்தம் என்பது மூன்று வகை :
1.உடலானந்தம் : இது உடலின் புறத்தேயும் அகத்தேயும் உள்ள உறுப்புக்களால் பெறப்படுவது; இதைச் சிற்றின்பம் என்பார்கள்.
2.மன ஆனந்தம் : இது உடலின் தொடர்பின்றி மனத்தினால் மட்டும் அடையப்படுவது.
3.பேரின்பம் : இது தெய்வீகத் தன்மையுள்ள ஆனந்தம். இது ஆன்மாவை அறிந்த ஆனந்தமாகும். இதுவே யோகத்தின் முடிவான ஆனந்தம். அதாவது ஒருவன் உண்மையாக தன்னைத்தானே அறிந்த ஆனந்தம். இறைவன் அருளினால் பரமாத்மாவை சேர்தலே. இந்நிலையில் பேரின்பம் ஆகிறது.
இவ்விதம் மூன்று வகைகளில் ஆனந்தம் இருப்பதாகச் சொல்லலாம்.
உணர்வுள்ள மனத்திற்கு மேல் ஒரு மனம் உள்ளது என்பார்கள். அதற்கு அடுத்தபடியாக உள்மனம் என்ற ஒன்று இருக்கிறது. இது பெரிய பனிக்கட்டிப்பாறை. வெளியே கொஞ்சமாகத் தெரியும். பெரும்பகுதி கடலுள் மூழ்கியிருக்கும் நிலையை ஒத்தது. அதுபோல நமக்குத் தெரியும் மேல்மனத்தைவிட நாமறியாத உள்மனம் மிக அதிக பரப்புடையது. இந்த உள்மனம் நல்ல ஆரோக்கிய நிலையில் இருந்தால்தான் மேல்மனமும் நன்கு இயங்கும். மேல்மனம் மூலம் அறிகிற செய்திகள்தான் உள்மனத்தில் பதிவுகளாகச் சேமித்து வைக்கப்படுகின்றன. இவையே மேல்மனத்தில் உண்டாகும் எண்ணங்களுக்குக் காரணாமாகும்.
ஒரு ஒழுக்கமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து பழகியவன், தனிமையில் ஒரு இளம் பெண்ணைப் பார்த்தால், அவனுக்குக் காம எண்ணங்கள் தானே எழும்? நல்ல எண்ணம் எப்படித் தோன்றும்?
இதனால்தான், உள்மனம் ஆரோக்கியமற்ற நிலையில், தூய்மை இல்லாமல் இருந்தால் பேரானந்தம் இல்லை என்று கூறப்படுகிறது. இப்போது உள்ள கல்வி முறையில் உள்மனத்தைத் தூய்மையாக்கும் பயிற்சிகளை உதாசீனப்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
இக்குறையால்தான், மாணவர்களின் ஆர்ப்பாட்டம், ஒழுக்கமற்ற எண்ணங்கள், உதாசீன வாழ்க்கை, படித்தபின் விரக்தி முதலியன உண்டாகின்றன.
பழங்கால முனிவர்கள் இந்த உள்மனது மிகவும் வலிமை வாய்ந்த வேறொரு உணர்வுள்ள மனத்தால் கட்டுப்படுத்தப்பட்டுச் செயல்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த அதிக வலிமை வாய்ந்த உணர்வு எவ்விதமாகச் செயல்படுகிறது என்று நவீன காலத்து மனோதத்துவ நிபுணர்களுக்கு இன்னும் விளங்கவில்லை.
இந்த மனத்தின் மூன்று அம்சங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குப் பாரதத்தின் பழைய முனிவர்கள் ஒரு வழியை வகுத்திருந்தார்கள். பேரானந்தத்தை அடைவதற்கு மேல்மனம், உள்மனம், அடிமனம் மூன்றும் இணைந்து நல்ல முறையில் இயங்கப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதே அந்த வழி.
மனம் முழுவதும் ஒருங்கே செயல்பட்டால்தான், ஒரு விஞ்ஞானியால் கூட புதிதாய் ஒன்றைக் கண்டு பிடிக்க முடியும். இந்நிலையையடைய யோகம் கூட ஒரு விஞ்ஞானிக்கு உதவ முடியும். இதனால்தான் விஞ்ஞானத்தின் விஞ்ஞானமாகவும் யோகம் விவரிக்கப்படுகிறது. உண்மையில் ஒரு விஞ்ஞானமாகவும் மனதிற்கு வலிமை தரும் ஒரு கலையாகவும் யோகம் இருக்கிறது.
"திறமையாக செயல்படுவதே யோகம்" என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறியிருக்கிறார். குற்றங் குறையில்லாத மனம் இருந்தால் செயலில் திறமையிருக்கும். இந்த வகையில் எல்லா ஜீவராசிகளிலும் மனிதனே முதன்மையான நிலையில் இருக்கிறான்.
கடவுள் ! தம்மைப் போன்றே இருக்க வேண்டும் என்று மனிதனைப் படைத்தார் என்றும், ஆனால் மனிதனுள் இருக்கிற தெய்வத் தன்மையானது, கோபம், ஆசை, தற்பெருமை, 'நான்' என்ற அகங்காரம், அறியாமை ஆகியவைகளால் மறைக்கப்பட்டிருக்கிறதென்றும் சொல்லப்பட்டு வருகிறது. முழுமை அடைவதற்கு அறியாமையை நீக்கிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்து விட்டால் பேரானந்தத்தை முழுமையாக அடையலாம்.
சுவாமி விவேகானந்தர் இதற்காகத்தான் சொல்லியிருக்கிறார்.
"ஒவ்வொரு ஆத்மாவும் சக்தி வாய்ந்த தெய்வீகத் தன்மையுள்ளது. வெளியே அமைந்திருக்கும் சூழ்நிலையான இயற்கையின் உட்புறம் உள்ள நிலை இவற்றைக் கட்டுப்படுத்தி இந்தச் சக்தி வாய்ந்த தெய்வீகத் தன்மையை வெளியில் தோன்றச் செய்வதுதான் நமது குறிக்கோள். இதை ஆண்டவனை வழிபடுவது அல்லது மனத்தைக் கட்டுப்படுத்துவது என்கிற யோக மூலமாக நீ செய்யலாம். நீ இதை ஒன்றன் மூலமாகவோ அல்லது மூன்று யோகங்களின் மூலமாகவோ செய்தால் விடுதலையடைவாய்."
மனிதனிடத்திலுள்ள தெய்வீகச் சக்தியைப் பயன்படச் செய்வதற்குத் தியானம் ஒரு சிறந்த வழி. உடல் சம்பந்தமான விஷயங்களில் ஊக்கங் காட்டும் இந்த சகாப்தத்தில் உலகமெங்கும் முன் எப்போதையும் விட முக்கியத்துவத்தைத் தியானம் தற்போது பெற்றுள்ளது.
கதோபநிடதத்தில் எமதருமன் நசிகேதனிடம், உடனடியாக நலம் தருபவையும் அதாவது தற்காலிகப் பயனைக் கொடுப்பவையும் நீடித்து நலம் தருவது அதாவது இறுதியான பயனாக இருப்பதும் ஒருவனிடம் தென்படும்போது புத்திசாலியானவன் நிரந்தரமானதையும் இறுதி நிலையானதையுமே தேர்ந்தெடுக்கின்றான். இறுதி இலட்சியத்தையே அடைய விரும்புகின்றான் என்று கூறுகின்றான்.
கதோபநிடதம் இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் செய்யுள் கீழ்வரும் செய்தியைக் கூறுகின்றது. "தற்காலிக நலத்தைத் தருவதும், நிரந்தரமான நலத்தைத் தருவதும் ஆகிய இரண்டில் விவேகமுள்ளன் நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்த்து இரண்டிற்குமுள்ள வித்தியாசங்களைக் கண்டுணர்ந்து நிரந்தரமான நலத்தைத் தருவதையே விரும்புகிறான். விவேகமற்றவனோ, கைமேல் கிடைக்கும் கண்கண்ட பலனாக இருக்கும் தற்காலிக சுகத்தையே விரும்புகிறான். மனிதனுடைய வாழ்க்கை முழுவதும் தவறான வழியில் போகாமல் அவன் சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதே நலம் தருவதாக இருக்கிறது. சரியான நடத்தையைப் புரிவது கத்தி முனையில் நடப்பதைப் போல என்கிறது உபநிடதம். நிரந்தரம், நிரந்தரமற்றது இரண்டையும் பகுத்துப் பார்க்கும் விவேகம், துணிவை விட வாழ்க்கையில் முக்கியம்."
ஒருவர் ஆனந்தமடைய வேண்டுமென்றாலும், அல்லது தன்னை அறிந்து கொள்ள வேண்டுமென்றாலும், பரம் பொருளைத் தேடுகின்ற பாதையிலே செல்ல வேண்டுமென்றாலும் அந்த விவேகத்தைச் சரியானபடி எவ்வளவு விருத்தி செய்ய முடியுமோ அவ்வளவு விருத்தி செய்ய வேண்டும். இவ்வாறு நன்மை தீமைகளைப் பகுத்தறிவதற்குத் தியானம் முக்கிய கருவியாய் அமைகிறது.
தன் தேவைகளைச் சாதாரண முறையில் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பதிலாக மனிதன் அசாதாரணமான தேவைகளை உண்டு பண்ணிக் கொள்கிறான். பிறகு அவற்றை நிறைவு செய்து கொள்ள கண்டபடி அலைகிறான். அசாதாரண முறைகளைக் கடைப்பிடிக்கிறான். அதன் பயனாக அவனுடைய வாழ்க்கை சுமைமிகுந்ததாகின்றது. ஆகவே அவனுடைய ஆனந்தம் பறிபோகின்றது. இந்நிலையை மாற்றவே தற்காலத்தில் தியானம் மிகவும் தேவைப்படுகிறது.
தன்னுடைய நியாயமான ஆசைகளை அடைந்து அனுபவிக்க வேண்டுமானால் மனிதன் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் முழுமையை அடைய முயற்சி செய்ய வேண்டும்; இம்மாதிரி எல்லோரும் விரும்பக்கூடிய முழுமை பகவத் கீதையில் இரண்டாம் பகுதியில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
அதில் ஒரு மனிதன் தன் முழுமையை எட்டுவதற்குச் செய்ய வேண்டியவை பற்றிக் கூறப்படுகிறது. இதற்காக சாதாரண மனிதர் போல உலக சுகங்களை அனுபவித்துக் களிப்பதை விட்டுவிட வேண்டும். பேரானந்தத்தை அடைய வேண்டிய 'மனிதனுக்கு ஆசை தேவை இல்லை.
கீதை சொல்கிறபடி யோகத்தில் இலட்சியத்தை அடைந்தவன் அல்லது நிலைபெற்றவன் எப்படி இருப்பான் என்று பார்ப்போம்.
"யோகத்தில் மனம் நிலைத்தவன் பிறர் பார்வைக்குச் சாதாரண மனிதனாகவே தென்படுவான். உண்மையில் அவன் உலகத்தில் இல்லை. உலகமும் அவனைப் பொறுத்தவரையில் இல்லாததே! அதாவது உலக சுகங்கள் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. உலகத்தை விட்டு ஒதுங்கி தனித்து வாழ்பவனாவான்.
"அவனுக்குப் பாலுணர்வு போன்ற பாதிப்புகள் இல்லை. அவன் உண்பதும் உறங்குவதும் உடலைப் பாதுகாப்பதற்கே. சுவைக்கு உண்பதோ ஆசைக்கு உண்பதோ இல்லை.
பாலுணர்வு தூண்டுதலுக்கு அடிமைப்படாதவரை சக்தி வீணாவதில்லை. இதனால் யோகியினுடைய மனம் உறுதியடைகிறது. அப்படிப்பட்ட யோகியர்கள் ஓர் ஆமையுடன் ஒப்பிடப்படுகின்றனர். ஆமை தனது ஐந்து உறுப்புகளை ஆபத்து வரும்போது உள்ளிழுத்து ஓட்டிற்குள் மறைத்துக் கொள்வது போல் கட்டுப்பாடுடைய யோகியும் தனது ஐம்புலன்களையும் மனத்திற்குள் அடக்கிக் கொள்கிறான்.
யோகம் - தியானத்தில் ஈடுபட்ட போதிலும் வாழ்க்கையில் பல துன்பங்கள் வரலாம். வருவது போன்ற தோற்றம் ஏற்படலாம். நமது வாழ்க்கையில் ஆத்திரம், கோபம், கவலை, துக்கம், ஆகிய உணர்ச்சிகளை உண்டாக்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
முழுமை அடைந்த ஒருவன் எவற்றாலும் பாதிக்கப் படுவதில்லை. அசைவில்லாத உறுதி பெற்ற மனத்தினனாய் இருப்பான். நதிகள் பலவும் கடலில் போய்ச் சேருவது போல எல்லா உணர்வுகளும் அவன் மனத்தில் சென்று அடங்கி விடுகின்றன. அவனுடைய அமைதி கலைவதில்லை. எப்பொழுதும் ஒரே நிலையில் அவன் இருக்கிறான்.
இந்நிலையைத் தியானத்தின் மூலம் ஒருவன் அடையலாம். இதற்காகவே இந்த தியான நூலை எழுதியிருக்கிறேன்.
என் சொந்த அனுபவத்தினால் சில பெரியவர்களிடமிருந்து கேட்டவற்றினாலும் பல நூல்களைப் படித்ததனாலும் இந்த நூலை எழுதியுள்ளேன்.
அன்பார்ந்த வாசகர்களே! தெய்வீகத் தன்மை உங்களிடத்தில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அறியாமைத் திரையை விலக்கிக் கொள்ளுங்கள். தியானத்தைக் கற்று தியானநிலையை அடைந்து பேரானந்தப் பெருவாழ்வை அடையுங்கள்.
ஆசனா இரா.ஆண்டியப்பன்.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
ஆசிரியரை பற்றி:
யோகாசனப் பேராசிரியர் ஆசனா இரா.ஆண்டியப்பனின் ஆசனப் பயிற்சி முறைகள், பலன்கள் அனைத்தும், தமிழ்நாட்டுச் சித்தர் ஞானத்திற்குரிய ஒளிச் சுடர்களாகத் திகழ்கின்றன. சன் டி.வி.யில் ஆண்டியப்பன் நடத்திவரும் யோகாசனப் பயிற்சிகள், ‘யோகக் கலை’ பத்திரிகைக்குரிய விளக்கங்களாகவும் விளங்குகின்றன. திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி. டாக்டர். ஆசனா ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசனா ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார்.
SKU Code | Bharti B 473 |
---|---|
Weight in Kg | 0.300000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | யோகாசனப் பேராசிரியர் ஆசனா இரா. ஆண்டியப்பன் Asana R Aandiappan |
Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippakam |
Similar Category Products
கையில் அள்ளிய மலர்கள் - Kaiyil Alliya Malargal
Save: 11.00 Discount: 30.56%
Panipuriyum Pengalin Prachinaigal / பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள்
Save: 4.00 Discount: 10.00%
HOW TO CONTROL MIND AND TO BE FREE FROM DEPRESSION - TAMIL - மனதைக் கட்டுப்படுத்துவது மற்றும் மன அழுத்தம் இல்லாதிருப்பது எப்படி.
Save: 15.00 Discount: 10.00%