Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சதுரகிரியில் கோரக்க சித்தர் - பா.கமலக்கண்ணன் - Sathuragiriyil Korakka Siddhar - Korakkar - Saturagiri - Sadhuragiri - Saduragiri - Sathurakiri - Goraknatha Sidhar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 494
₹200.00
தத்துவம் சார்ந்த நூல்/ ஆன்மீகம் நூல் . 
 
பேப்பர்பேக்; 
268 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: பிப்ரவரி, 2006; 
ஏழாம் பதிப்பு: டிசம்பர், 2020.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் சதுரகிரியில் கோரக்க சித்தர், பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 
 
முன்னுரை: 
 
இறைவன் அருளாலும், என் குருநாதர் ஆறுமுகம் அடிகளாரின் ஆசியாலும், கடந்த 42 ஆண்டுகளாக சித்தர்களுடைய பரிபாஷயை அறிந்து, அவர்கள் அருளிய பாடல்களை ஆய்வு செய்து, ஞானமார்க்கம் பற்றிய இரகசியங்களை எல்லாம் தேடித் திரட்டி ஏழு நூல்களை உருவாக்கியுள்ளேன். எளியேன் மெய்ஞ்ஞான நெறியைத் தொடர்ந்து பயின்று வருவதால் ஏற்படும் அனுபவங்களை எல்லாம் சித்தர் பாடல்களோடு ஒப்பிட்டு என்னுடைய நூல்களில் விளக்கியிருப்பதை வாசகர்கள் அறிவார்கள்.
 
இன்றைய உலகில் யோக மார்க்கத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஞானமார்க்கத்தைப் பற்றி சிந்திப்போரைக் காண்பது அரிதாகும். யோக மார்க்கத்தில் சென்றால் நாசமே வந்துரும் என்று அகப்பேய்ச் சித்தர் கூறுகிறார்:- 
 
எத்தனை காலமுந்தான் - அகப்பேய் 
யோகம் இருந்தால் என் ?
முத்தனும் ஆவாயோ - அகப்பேய் 
மோட்சமும் உண்டாமோ ? - அகப்பேய்ச் சித்தர் பாடல் 35. 
 
நாசமாவதற்கே - அகப்பேய் 
நாடாதே சொன்னேன் ! - 36
 
அகப்பேய்ச் சித்தரின் இந்தக் கடுமையான எச்சரிக்கையை சிந்திப்போர் யார்?
 
வேதாந்தம் வேறு - சித்தாந்தம் வேறு என்று பல அறிஞர்கள் வார்த்தை ஜாலங்களால் வாதிட்டு வருகின்றனர். அவர்கள் மிகுந்த செல்வாக்கோடு பட்டம், பதவி, பரிசு பெற்று வாழ்கின்றனர். ஆனால், உண்மை என்ன? வேதங்களின் கடைசி அத்தியாயங்களே (அந்தம் = கடைசி) உபநிஷத்துகள் அல்லது வேதாந்தம் என்று குறிப்பிடுபடுகின்றன. உபநிஷத்துகளில் மனிதன் பிறவாப் பெருநிலை அடைதற்குரிய "சொல்முறை விளக்கம் (THEORETICAL) கூறப்பட்டுள்ளது. வேதாந்த சொல்முறை விளக்கங்களைப் பின்பற்றி தவம் செய்தோர் சித்தர்களாவர். அவர்கள், தவத்தால் கண்ட அனுபவங்களே (PRACTICAL) சித்தாந்தமாகும். இந்த அடிப்படை உண்மை, குரு மூலமாக சீடர்களுக்குத் தெரிவிக்கப் பெறுகின்றது. அவ்வாறு கற்ற கல்வியை, நான் என்னுடைய நூல்களில் ஆதாரங்களோடு விளக்கியுள்ளேன். ஆனால், உண்மையை உணர்வோர் உலகில் மிகச் சிலரேயாவர் !
 
"பரப்பிரம்மம்" என்றும் "பிதாவாகிய தேவன்" என்றும் "அல்லாஹ்" என்றும் அழைக்கப்பெறுகின்ற அரூபமான சுயஞ்சோதி வடிவமான இறைவனே, மனிதனுடைய ஜீவனாக - சிவலிங்க சொரூபமாக - ஒளிர்கின்றான் என்ற தேவ இரகசியத்தை, நம்முடைய உபநிஷத்துகள் விளக்கியுள்ளன. இதை அப்பர், திருமூலர், உமாபதி சிவாச்சாரியார் முதலான சைவசித்தாந்த சான்றோர்களும் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். உலகளாவிய சமயங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் இந்த உண்மையை பைபிளிலும், குர்-ஆனிலும்  வெளிப்படுத்தியிருப்பதை என்னுடைய நூல்களில் நான் விளக்கியுள்ளேன். ஆனால் இந்த உண்மையை உணர்வோர் யார்?
 
குழந்தைப் பருவத்தில் நெற்றிக்கு மேலே - முன் சிரசில் தளதளவென்று பள்ளமாகக் காணப்பெற்று, பின்னர் 32 சின்னஞ்சிறு எலும்புகளால் மூடிக்கொண்டு உச்சிக்குழிக்கும் உண்ணாக்குக்கும் இடையே "பிரம்மரந்திரம்" என்ற நுண்ணிய துவாரம் உள்ளது. அந்த துவாரத்தினுள்ளே, நெற்றி நடுநிலையாகிய ஆக்ஞேயம் என்னும் சிற்றம்பலத்தில் நம்முடைய ஜீவன் சிவலிங்க சுயஞ்சோதி சொரூபமாக வீற்றிருந்து கொண்டு, இரு நாசித்துவாரங்களின் வழியாக சுவாசத்தை இழுத்தும் - விடுத்தும் உடலை இயங்கச் செய்கின்றது என்று உபநிஷத்துகள் குறிப்பிடுகின்றன, ஜீவனுக்குக் கீழே (பிரம்மரந்திரத்தினுள்) நம்முடைய சூக்கும சரீரம் அமைந்துள்ளதைத் தவம் செய்யும் ஞானிகள் கண்டறிந்தனர். ஞானத் தவம் முழுமை பெறும்போது, சூக்கும சரீரம் அசைந்து மெதுவாக மேலே எழும்பி, ஜீவனைத் தழுவிக் கொள்வதை உணர்ந்தனர். இதுவே ஜீவபிரம்ம ஐக்கியம் என்று கண்டனர். இந்த நிலையில் மூடியிருந்த உச்சிக்குழி நீளவாட்டத்தில் பிரிந்து கொள்வதைக் கண்டனர்.
 
உச்சிக்குழி திறந்து கொண்டதும், பரப்பிரம்ம ஒளி உள்ளே நுழைந்து சூக்கும சரீரத்தை பிரகாசிக்கச் செய்கின்றது. ஆகவே, இறுதி சுவாசம் ஜீவனை நோக்கி வரும்போது, சூக்கும சரீரத்தைத் தூக்கி ஜீவனோடு இணைத்து விடுகின்றது. ஆகவே அந்த ஜீவன் மனித உடலுக்குள்ளேயே அடங்கி விடுகின்றது. அது வெளியே வராமல் உள்ளேயே அடங்கி விடுவதால் மறுபிறவி எடுக்காது. இந்த நிலையை அடைந்த உடல் விறைக்காது. வீங்காது; வெடிக்காது; துர்நாற்றம் வீசாது. உறங்குவது போலும் காணப்படும். ஆனால், ஞானப்பயிற்சியில்லாததால், உச்சிக்குழி மூடிய நிலையில் மரிப்போருக்கு கபாலம் இருளாய் இருப்பதாலும், ஜீவன் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிட்டதாலும், அந்த இறுதி சுவாசத்திற்கு மேல்நோக்கிச் செல்லும் வாய்ப்பு இல்லை. ஆகவே, சூக்கும சரீரம் வரையில் வருகின்ற இறுதி சுவாசம், சூக்கும சரீரத்தை இழுத்துக்கொண்டு கீழ்நோக்கி இறங்கி, நவத்துவாரங்களுள் ஒன்றின் வழியாக, வெளியேறி விடுகின்றது. அதன் பின்னர், சூக்கும சரீரம், இறைவனுடைய தீர்ப்பின்படி புண்ணிய உலகத்திலோ, பாவ உலகத்திலோ குறிப்பிட்ட காலம் வரை இருந்து விட்டு, பின்னர் மீண்டும் பிறவி எடுக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் சித்தர்கள் அநுபவபூர்வமாகக் கண்டுணர்ந்து, தம் பாடல்களில் விளக்கியுள்ளனர். இதுவே சித்தாந்தம் எனப்படும் என்று ஞானிகள் கூறுகின்றனர்.
 
உலகில் பிறந்த மனிதஉடல், இறுதியாக இரண்டு வகையான நிலையை அடையும் உண்மையை திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:-
 
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும்  - திருக்குறள் 121
 
உச்சிக்குழி திறந்துகொண்டு ஜீவன் உடலுக்குள் அடங்கிவிடின் அமரருள் உய்க்கும். இந்த நிலையையே, "அஹம் பிரம்மாஸ்மி" என்றும் "தத்வமசி" என்றும் வேதாந்தம் குறிப்பிடுகின்றது. இதுவே, மோட்சம் என்றும், முத்தி என்றும், வீடுபேறு என்றும், பிறப்பற்ற அடக்கநிலை என்றும் சித்தாந்தம் குறிப்பிடுகின்றது.
 
ஜீவன் உடலுக்குள் அடங்காவிடில் ஆரிருள் உய்த்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு.
 
மூடிய உச்சிக்குழி மீண்டும் திறக்கும் என்பதற்கு ஆதாரமான திருமந்திரப் பாடலாவது:- 
 
காலும் இரண்டு; முகட்டு அலக்கு ஒன்றுள 
பாலுள பருங்கழி முப்பத்திரண்டுள 
மேலுள கூரை பிரியும்; பிரிந்தால்முன் 
போலுயிர் மீளப்புக அறியாதே. - திருமந்திரம் 146.
 
திருமூலர், தமது அநுபவத்தால் கூறும் மெய்ஞ்ஞான இரகசியத்தை அறிஞர்கள் ஏற்க மறுக்கின்றனர்; உயிரற்ற உடலின் சிரசில் தேங்காயால் அடித்துக் காயப்படுத்திவிட்டு இதுவே "கபால மோட்சம்" என்று உறுதியாய்க் கூறுகின்றனர்.

இந்த உண்மைகளை எல்லாம் ஒரு சில வாசகர்களாவது சிந்திக்க மாட்டார்களா என்ற ஆதங்கத்தில்தான் முன்னுரையில் இவற்றை விளக்கியுள்ளேன்.

உலகம் அறிந்திராத பற்பல மெய்ஞ்ஞான இரகசியங்களை எல்லாம், இறைவன் என்னைக் கருவியாக வைத்து, "ஞானக்கனல்", முதல் "சித்தர் தத்துவம்" வரை, ஏழு நூல்களின் வாயிலாக உணர்த்தியள்ளான். அந்த நூல்களை எல்லாம் சிறந்த முறையில் அச்சிட்டு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் படைத்த பெருமை வானதி அய்யா திரு.ஏ.திருநாவுக்கரசு அவர்களையே சேரும். 
 
வானதியின் நூல்கள் உலக அளவில் தமிழர் வாழும் நாடுகளுக்கெல்லாம் செல்வதால், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய வெளிநாடுகளில் வாழும் இந்து மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் என்னுடைய நூல்களைப் பாராட்டி வருகின்றனர். 'ஞானக்கனல்' முதலான நான்கு நூல்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.சித்தர் இலக்கியம் - என்ற பிரிவில் பாடநூல்களாக வைக்கப் பெற்றுள்ளன. இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் "இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஒருமைப்பாடு" என்ற நூலை, "ஒரு நல்ல நூல்" என்று பாராட்டி 10-10-2002 தேதியிட்ட கடிதம் எழுதியுள்ளார். "சித்தர் தத்துவம்" என்ற நூல் சிறந்த ஆன்மிக நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப் பெற்று ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கப் பெற்றது.
 
ஆனால், எண்ணற்ற பட்டிமன்றங்களை நடத்திய முன்னாள் குன்றக்குடி அடிகளார் அவர்களால் "அருமையான ஆய்வு; அநுபவக் களஞ்சியம்; சித்தர்கள் காட்டிய ஞான வாழ்வுக்கு ஒரு திறவுகோல்" என்று பாராட்டப் பெற்ற "ஞானக்கனல்" என்ற நூலும், மனிதநேய ஒருமைப்பாட்டை விளக்குவதால், "ஒரு நல்ல நூல்" என்று ஜனாதிபதியால் பாராட்டப் பெற்ற "இந்து, கிறிஸ்துவம் இஸ்லாம் ஒருமைப்பாடு" என்ற நூலும் தகுதியற்றவை என்று புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை அறிஞர்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். இந்த உண்மையையும் வாசகர்களுக்குக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
 
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் இறைவன் திருவடிகளையே போய்ச் சேரும். ஏனெனில் நான் ஒரு கருவியேயன்றி கருத்தா அல்லன்.  
 
சித்தர்களைப் பற்றிய ஆய்வு நூல்களின் வரிசையில் இப்போது "சதுரகிரியில் கோரக்க சித்தர்" என்ற நூல் உருவாகியுள்ளது.
 
அகத்திய மாமுனிவர் முதல் யாகோபு சித்தர் வரை 205 சித்தர், ரிஷிகள், முனிவர்களின் தவச்சாலைகள் இருந்த இடங்களைப் பற்றி அறிய வேண்டுமா? மரணத்தை வெல்லும் இடங்களைப் பற்றி அறிய வேண்டுமா?, மரணத்தை வெல்லும் காயகல்ப முறைகளை அறிய வேண்டுமா ? மூப்பைப் போக்கும் மூலிகை தைலத்தை அறிய வேண்டுமா ? லட்சுமணரும் வானர சேனையும் மூர்ச்சித்துக் கிடந்ததால், அநுமார் சஞ்சீவி மலையைக் கொணர்ந்து அவர்களை உயிர்பெற்றெழச் செய்தபிறகு, அதைத் திரும்ப வைப்பதற்காக எடுத்துச் சென்றபோது, அம்மலையின் ஒரு சிறிது பகுதியை சித்தர்கள் எடுத்துக்கொண்ட செய்தியை அறிய வேண்டுமா? சித்தர்கள் எவ்வாறு விண்வெளிப் பயணம் செய்தனர் என்று அறியவேண்டுமா? மற்றவர் கண்களுக்குத் தோன்றாமல் சித்தர்கள் எவ்வாறு மறைந்து சென்றனர் என்று அறிய வேண்டுமா? சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது எப்படி என்று அறிய வேண்டுமா? இவ்வினாக்கள் அனைத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கோரக்க மகாரிஷி கூறிய விளக்கங்களை இந்நூலில் காணலாம். 
 
மேலும், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பொருட்டு கோரக்க மகாரிஷி அருளிய 16 நூல்களையும் வெளியிடலாகாதென நந்திதேவர் தலைமையில் ஏழு சித்தர்கள் வந்து பறித்துச் சென்றதைப் பற்றி அறிய வேண்டுமா? அவர்களை ஏமாற்றிவிட்டு கோரக்கர் "சந்திரரேகை 200" என்ற நூலை உருவாக்கிய இரகசியத்தை அறிய வேண்டுமா? கோரக்கரின் தோழர்கள், அகத்திய மாமுனிவருக்குக் கொடுத்த சாபத்தைப் பற்றி அறிய வேண்டுமா? கோரக்கரின் பிறப்பு, மரபு, மனைவி, மக்கள் முதலிய வரலாற்றை அறிய வேண்டுமா? பழனி மற்றும் வடக்குப் பொய்கைநல்லூர் சமாதிகளைப் பற்றிய இரகசியங்களை அறிய வேண்டுமா? கோரக்க மகாரிஷியும் பிரம்மரிஷியும் சேர்ந்து செய்த மகாயாகத்தைப் பற்றிய அறிய வேண்டுமா? கஞ்சாச் செடியும் புகையிலைச் செடியும் தோன்றிய வரலாற்றை அறிய வேண்டுமா? இவை அனைத்திற்கும் மேலாக கலியுகத்தில் நாட்டு நடப்பைப் பற்றி கோரக்கர் கூறிய இரகசியங்களை அறிய வேண்டுமா? சித்தர்கள் காட்டும் முத்திநெறியை அறிய வேண்டுமா? அனைத்தையும் இந்நூலிலிருந்து அறியலாம்.
 
அத்திரி மகாரிஷியும் அவர் மனைவியார் அநுசுயா தேவியும் குழந்தை வரம் வேண்டி யாகம் செய்த பாறையைக் காண வேண்டுமா? மார்க்கண்டேய முனிவர் பிறந்த மண்ணைக் காணவேண்டுமா? அன்னை அநுசுயாதேவி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாய்ச் சபித்து மீண்டும் இயல்பான உருவங்களை வழங்கிய ஆச்சிரமம் இருந்த இடத்தைக் காணவேண்டுமா? "நிறுவாணிகளிடத்தன்றி மற்றவர்களிடத்தில் உண்ணமாட்டோம்" என்று மும்மூர்த்திகள் கூறிய வாசகத்தின் உட்பொருளை, அத்திரி மகரிஷியின் விளக்கத்தால் அறிய வேண்டுமா? கோரக்க மகாரிஷியும் மற்ற சித்தர்களும் சேர்ந்து அமுதம் கடைந்த கல்குண்டாவைக் காணவேண்டுமா? இவை அனைத்தையும் இந்நூலில் நிழற்படங்களோடு விளக்க உரையுடன் காணலாம்.
 
இந்த இடங்களை நேரில் காண விரும்புகின்ரீர்களா? வாருங்கள் விருதுநகர் மாவட்டம் வத்தராயிருப்பு என்ற ஊருக்கு ! அங்கிருந்து சிற்றுந்து அல்லது நகரப்பேருந்தில் 10 கி.மீ தூரத்திலுள்ள தாணிப்பாறை என்ற கிராமத்திற்கு வந்து விடுங்கள்.
 
"தாணிப்பாறை மூலிகை வனம்" என்ற வளைவிற்குள் நுழைந்து ஒற்றையடிப் பாதையில் 14 கி.மீ தூரம் நடந்தால் சதுர கிரியை அடையலாம். போகும் வழியில் நான்காவது கிலோ மீட்டரில் அத்திரி மகாரிஷி பெயரால் வழங்கும் "அத்தி ஊத்து"ம் அதற்கு வடக்கில் யாகப் பாறையும், ஆச்சிரமம் இருந்த இடமும் உள்ளன. ஏழாவது கிலோமீட்டரில் கோரக்கர் குகை, அவர் மருந்து அரைத்த குழிக்கல், அமுதம் கடைந்த கல்குண்டா ஆகியவற்றைத் தரிசிக்கலாம். கோரக்கர் பொய்கையில் நீராடி புனிதம் அடையலாம். கோரக்கர் குகையைக் கடந்தால் தெற்கு திசையில் ஆயிரக்கணக்கான சித்தர்கள் தைலம் பூசிக்கொண்டு, நீலநிற மேனியராய்த் துயில்வதை ஞானப்பயிற்சியுடையோர் கண்டு ஆசிபெறலாம். தைலத்தின் நெடியை யாத்திரீகர்கள் பலரும் உணர்ந்துள்ளனர்.
 
பதினான்காவது கிலோமீட்டரில் உள்ள சதுரகிரியில் சமதரையில் அமைந்துள்ள அகத்தியர் நிறுவிய சிவலிங்கம், சிவபெருமான் இடையனிடம் அடிபட்டு  தலைசாய்த்த சிவலிங்கம், சட்டைமுனிவர் குகை, பார்வதி தேவியார் நிறுவி வழிபாட்டு தவம் செய்து, "அர்த்தநாரீஸ்வரர்" என்ற வரம்பெற்ற சிவலிங்கம் ஆகியவற்றை எளிதாய் தரிசித்து பரவசமடையலாம். மேலும் பளிஞர் என்ற மலைவாசிகளின் துணையோடு மலைகளில் ஏறி மகாலிங்கேஸ்வரர், வெள்ளை விநாயகர் மற்றும் பற்பல சித்தர்களின் குகைகளையும் தரிசிக்கலாம்.
 
சதுரகிரி யாத்திரை செல்வதற்கு விரதம் இருக்கத் தேவையில்லை. எந்த மாதத்திலும் எந்த நாளிலும் செல்லலாம். அமாவாசை மற்றும் பௌர்ணமி இறுதினங்களிலும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், அமைதியாக தரிசிக்க வேறு நாட்களில் செல்லலாம். காலை 8 மணிக்கு நடக்க ஆரம்பித்தால் அதிகபட்சமாக ஆறு மணிநேரத்தில் சதுரகிரியை அடைந்து விடலாம்.
 
சதுரகிரியின் பெருமையை அறிய இந்நூல் உங்களுக்குத் துணைபுரியும்.
 
பூனாவிலுள்ள ஹர்தாஸ் சுவாமிஜி என்ற இல்லற சித்தர், சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னர் தமது தியானத்தில் கோரக்க மகாரிஷியைக் கண்டு உரையாடியுள்ளார். அவர் கோரக்கரின் உருவத்தைக் கணினியின் மூலம் வரைந்து பூனாவில் சிலை வடித்துள்ளார். அந்தச் சிலையின் நிழற்படமே இந்த நூலின் முகப்பில் இடம் பெற்றுள்ளது. நம்புங்கள்; இதே உருவத்தோடுதான் கோரக்கர் பலருக்கும் காட்சி தந்து வருகின்றார். 
 
இது ஒரு புதுமையான ஞான நூலாகும். இந்நூல் உருவாவதற்குக் காரண கர்த்தா கோரக்கரே யாவார். ஆகவே இந்நூலை அவருடைய பாதங்களில் பணிவோடு சமர்ப்பித்து வணங்குகின்றேன்.
 
இந்நூலை வெளியிடும் வானதியின் புகழ் என்றென்றும் நின்று நிலைத்திட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
 
ஓம் பசு; பரபதி ; பட்சராஜ; நிர் அதிசய சித்தசொரூப; 
ஞானமூர்த்தியே; தீர்க்கநேத்ராய 
பார்கவ்ய சோதிமய வரப்பிரசன்ன 
பாத தரிசயே கோரட்ச சரணாய நமஸ்து. - ரவி மேகலை 67.
 
                                                                                                                               இங்ஙனம்,
                                                                                                                               பா.கமலக்கண்ணன்.
 
பொருளடக்கம்:-
01.சித்தர்கள் திருவடி சரணம்; 
02.சித்தர்கள் தத்துவமே சிந்தாந்தம்;  
03.சித்தர்கள் வாழும் சீரிடம்;  
04.மரணத்தை வெல்லும் காயகல்பம்;  
05.மூப்பைப் போக்கும் மூலிகைத் தைலம்;  
06.இறந்தோரை எழுப்பும் சஞ்சீவி;  
07.சித்தர்களின் விண்வெளிப் பயணம்;  
08.மற்றவர் காணாமல் மறைந்து செல்லுதல்;  
09.கூடுவிட்டுக் கூடு பாய்தல்;  
10.கோரக்கரின் பிறப்பும் மரபும்;  
11.கோரக்கரின் குடும்ப வாழ்க்கை;  
12.கோரக்கரின் மெய்ஞ்ஞான குருநாதர்;  
13.கோரக்கர் அருளிய நூல்கள்;  
14.கோரக்கர் யாகமும் குண்டாவும்;  
15.கோரக்கர் வயதும் சமாதியும்;  
16.சித்தர்கள் காட்டும் முத்திநெறி;  
17.கலியுகத்தில் நாட்டு நடப்பு பற்றி கோரக்கர்;  
18.சதுரகிரி செல்வோம் வாரீர் !.
 
ஆய்வுக்குப் பயன்பட்ட நூற்பட்டியல்.                                                                                                                                                                                                     
ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
More Information
SKU Code VAN B 494
Weight in Kg 0.560000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:சதுரகிரியில் கோரக்க சித்தர் - பா.கமலக்கண்ணன் - Sathuragiriyil Korakka Siddhar - Korakkar - Saturagiri - Sadhuragiri - Saduragiri - Sathurakiri - Goraknatha Sidhar

Similar Category Products





Other Books by பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan